நரேந்திர மோதி 2.0: சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?

நரேந்திர மோதி 2.0: சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?



நரேந்திர மோதியின் தலைமையிலான முதல் பாஜக ஆட்சிக்காலம் (2014-19) முடிவடைந்து, கடந்தாண்டு நாடாளுன்ற தேர்தல் நடந்தபோது அந்த அரசின் மீது ஏராளமான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.


ஆனால், பல எதிர்ப்புகளையும் மீறி மீண்டும் பாஜக வென்று ஆட்சியமைத்தது. கடந்த ஆட்சிக்காலத்தை ஒப்பிடுகையில், இந்த ஆட்சிக்காலத்தின் முதல் ஆண்டு மிகவும் பரபரப்பாகவே இருந்தது என்று கூறலாம்.


அரசியல் சர்ச்சைகள், போராட்டங்கள், பெரும் கவனத்தை பெற்ற அயோத்தி நில சர்ச்சை வழக்கின் தீர்ப்பு, டெல்லி பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தூக்குத்தண்டனை, மிகவும் அண்மைய கொரோனா தொடர்பான ஊரடங்கு என பல விஷயங்களில் இந்த அரசின் பங்களிப்பு ஓராண்டாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுவருகிறது.


மோதி 2.0 அரசு செய்த சாதனைகள் என்ன என்பது குறித்தும், இன்னும் என்ன செய்திருக்கலாம், செய்ய தவறியது என்ன என்பது குறித்தும் சில மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் நிபுணர்களிடம் பிபிசி தமிழ் உரையாடியது.


தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் முதல் ஆண்டை நிறைவுசெய்யவுள்ள நரேந்திர மோதியின் ஆட்சி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் நீரஜா செளத்ரி கூறுகையில், ''தேசியம் மற்றும் 'சாதாரண மற்றும் ஏழை மக்களுக்கான அரசு இது' ஆகிய இரு கோஷங்களுடன் 2019 நாடளுமன்ற தேர்தலை சந்தித்த பாஜக மீண்டும் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்கவைத்தது. சென்ற முறையைவிட அவர்கள் கூடுதல் இடங்களில் வென்றதற்கு வசீகர தலைவர் என கருதப்படும் மோதியின் செல்வாக்கு பெரிதும் உதவியது. மேலும் எதிர்கட்சிகளால் அவரை எதிர்கொள்ள இணையான யாரும் முன்னிறுத்தப்படாததும் பாஜகவின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணம்'' என்று நினைவுகூர்ந்தார்.


''2019 தேர்தலில் வென்றவுடன், தனது நீண்டகால தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற பாஜக உடனடியாக களத்தில் இறங்கியது. மிகவும் துரித வேகத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370-ஐ புதிய பாஜக அரசு ரத்து செய்தது. நீண்டகாலமாக சட்டப்பிரிவு 370 நீக்கம் என்பது பாஜகவின் நோக்கமாகவும், வாக்குறுதியாகவும் இருந்துவந்தது. அந்த வகையில் பார்த்தால் அவர்கள் தங்கள் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றி உள்ளார்கள்''


''இந்த விஷயத்தில் எழும் சர்வதேச அழுத்தத்தை தங்களால் சமாளிக்கமுடியும் என அவர்கள் நம்பினார்கள். அவ்வாறே சமாளித்தார்கள் என்று கூறலாம்'' என அவர் மேலும் தெரிவித்தார்.


''அதேபோல் முத்தலாக் தடை சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இது பலரின் பாராட்டுகளை பெற்றபோதிலும், பொது சிவில் சட்டத்தை நோக்கிய ஒரு படி இது என்றும் சில தரப்புகளால் பார்க்கப்படுகிறது'' என்று நீரஜா மேலும் தெரிவித்தார்.


''இதனிடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகளை சந்தித்து வந்த அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வெளிவந்தது. தீர்ப்பு எந்த காலத்திலும் வெளிவந்திருக்கலாம். ஆனால், நீண்ட தாமதத்துக்கு பிறகு இந்த காலகட்டத்தில் வெளிவந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது'' என்றார்.


''இவற்றில் காட்டிய வேகத்தை விட, மிக வேகமாக இந்த அரசு முனைப்பு காட்டிய மற்றொரு விஷயம், குடியுரிமை திருத்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது தான்.


தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அரசு அளித்த ஒப்புதல் மற்றொரு விஷயம். இவ்விரண்டு விஷயங்களும் சிறுபான்மையினரை பதற்றமடைய செய்தது. தங்களுக்கு இந்த நாட்டில் உரிமைகள் குறைகிறதோ, எதிர்காலத்தில் மறுக்கப்படுமோ என்ற எண்ணம் அவர்களிடம் ஏற்பட்டது. ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றதும் நினைவுகூரத்தக்கவை''


இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலையை சமாளிக்க இந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் கொரோனா பரவல் தொடர்பாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஆகியவை இனிவரும் காலங்களில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கும் என்ற கணிப்பு நிலவிவரும் சூழலில், இவை குறித்து நீரஜாவிடம் பேசினோம்.


''இந்திய பொருளாதார மந்தநிலை மற்றும் தொடர்ந்து குறைந்துவரும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை கடந்த சில மாதங்களாக மிகவும் வலுப்பெற்ற விவாதங்கள். அதேவேளையில் இந்த பாதிப்புகள் தொடர்பான பழி இனி கொரோனா வைரஸ் மீது விழ வாய்ப்புள்ளது'' என்றார்.


''கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மோதி முடக்கநிலையை அறிவித்தபோது ஆரம்பத்தில் பாராட்டப்பட்டார். சரியான நேரத்தில் இந்தியா நடவடிக்கை எடுத்தது என சில கருத்துகள் வெளிவந்தன''


''ஆனால், பின்வந்த நாட்களில் இந்திய பெருநகரங்களில் கட்டமைப்பின் தூண்களாக கருதப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பட்ட சிரமங்கள் இந்த அரசின் மீதான விமர்சனத்தை அதிகப்படுத்தியுள்ளது. முடக்கநிலை அறிவிப்புக்கு முன்பு, போதுமான கால அவகாசம் அளித்திருக்க வேண்டும்''


''அதேவேளையில் கொரோனா முடக்கநிலை மற்றும் பரவலால் முதல் 6 மாதங்களில் தனது இந்துத்துவா கொள்கையில் தீவிரம் காட்டிவந்த இந்த அரசு, சூழ்நிலையை கருதி தற்போது அடக்கி வாசிக்கிறது என்றே கூற வேண்டும்'' என நீரஜா மேலும் குறிப்பிட்டார்.


கொரோனா தேர்தலில் எதிரொலிக்குமா?


''அரசியல் ரீதியாக இவை எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது கணிக்க இயலாது. இந்திய நாடளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் தொடர்பாக தற்போதைய காலம் ஆரம்ப காலம் தான். இனி வரும் நாட்களில், மாதங்களில் சவால்மிகுந்த சந்தர்ப்பங்களை மோதி அரசு எவ்வாறு கையாள போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்'' என்றும் நீரஜா கூறினார்.


எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் பற்றி குறிப்பிட்ட நீரஜா செளத்ரி, ''பாஜகவை சமாளிக்கும் விஷயத்தில் இதுவரை எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரிய ஒற்றுமை இல்லை என்பது ஒரு முக்கியமான விஷயம். கொரோனாவுக்கு பிறகு எழும் சூழல், பாஜகவுக்கு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளுக்கு சவால் தருவதாக இருக்கக்கூடும்'' என்று நீரஜா தெரிவித்தார்.


''கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அண்மையில் 5 முறை மாநில முதல்வர்களுடன் நரேந்திர மோதி கலந்துரையாடல் செய்தது, 6 மாதங்களுக்கு முன்பு எதிர்பார்க்க முடியாத ஒரு விஷயம். கூட்டாட்சி தத்துவம் மீது நம்பிக்கை வைக்கும் விதமாக இது ஒரு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டது. அதேவேளையில், முதல் முடக்கநிலை அறிவிப்புக்கு முன்பு மாநில அரசுகளுக்கு போதுமான அவகாசம் அளிக்காதது மற்றும் பல மாநில அரசுகள் விடுத்த கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் வழங்காதது போன்றவை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டார்.


சர்வதேச அளவில் நரேந்திர மோதியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதா என்று கேட்டதற்கு பதிலளிக்கையில், ''ஆம், சர்வதேச அரங்கில் தனது செல்வாக்கை குறைந்த கால அவகாசத்தில் மோதி உயர்த்தியுள்ளார் என்பது உண்மை. அமெரிக்காவுக்கு சென்றபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, பல நாட்டு அதிபர்களுடன் அவர் தொடர்ந்து நடத்தும் சந்திப்புகள் போன்றவை மோதி மற்றும் அவரது ஆட்சிக்கு உலக அளவில் கவனத்தை பெற்றுக் கொடுக்கும். அதேவேளையில் தற்போது சீனா - இந்தியா உறவில் மேலும் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுக்கு பிறகான நிலைமையில் சர்வதேச உறவுகள் எப்படி இருக்கும் என இப்போது கூற இயலாது'' என்றார்.


பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன், அவர்களின் சில நீண்ட கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நரேந்திர மோதி முனைப்பு காட்டினார் என்ற கருத்து பரவலாக நிலவிவரும் நிலையில், இது குறித்து மூத்த பத்திரிகையாளர் டி சுரேஷ்குமார் பிபிசி தமிழிடம் பேசினார்.


''மோதி 2.0 அரசு குறித்த சாதகமான அம்சங்கள் உள்ளதா என்று பார்த்தால், இந்த அரசு மீது குறிப்பிட்டு சொல்லும்படியான ஊழல் குற்றச்சாட்டு இல்லை. ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு கடந்த ஆட்சிக்காலத்தில் சுமத்தப்பட்டது. மீண்டும் பதவிக்கு வந்த ஆட்சியின் முதலாண்டு நிறைவடையும் நிலையில், எந்த பெரிய ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்பது மக்கள் மத்தியில் கவனத்தை பெறக்கூடும்'' என்று கூறினார்.


''அதேவேளையில் காஷ்மீர் தொடர்பான சட்டப்பிரிவு 370 நீக்கம், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றில் பல சர்ச்சைகள் உள்ளன''


லடாக் பகுதி மக்களுக்கு நீண்டகாலமாகவே தங்கள் பகுதியை தனியாக யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அது இந்த அரசால் சாத்தியப்பட்டது என்பது உண்மை தான். ஆனால் காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் இது தொடர்பான ஆலோசனைகளில் அழைக்கவில்லை என்று டி சுரேஷ்குமார் விவரித்தார்.


மேலும் அவர் கூறுகையில், ''இதனை நிறைவேற்றும் போது எதிர்ப்பு தெரிவித்த அம்மாநிலத்தை பல தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் எண்ணற்ற போராட்டங்கள் நடந்த நிலையில் நீண்ட காலமாக அந்த மாநிலம் முடக்கநிலைக்கு தள்ளப்பட்டது'' என்றார்.


''தற்போது கொரோனா தொடர்பான ஊரடங்கின்போது நாட்டில் என்னனென்ன சிரமங்களை மக்கள் எதிர்கொண்டனரோ, சுதந்திரத்தை இழந்தனரோ, அதனை அந்த காலகட்டத்தில் இருந்தே காஷ்மீர் மக்கள் அனுபவித்து உள்ளனர்'' என்று மேலும் குறிப்பிட்டார்.


''முத்தலாக் தடை சட்டத்தை பெண்கள் குறிப்பாக முஸ்லீம் பெண்கள் வரவேற்றது சாதகமான அம்சம். அவர்களுக்கு இது அவர்களுக்கு உரிமைகளை பெற்றுத்தரும். ஆனால் முத்தலாக் கூறும் நபர்களுக்கு தண்டனை அளிக்க சட்டம் நிறைவேற்றப்பட்ட சூழலில், சம்பந்தப்பட்டவர்களின் கருத்தையும் கேட்டிருந்திருக்கலாம்'' என்று மேலும் தெரிவித்தார்.


மேலும் இதற்கு கிடைத்த வரவேற்பை வைத்து பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


கோவிட்-19 நோய்தொற்று பரவல் தொடர்பாக முடக்கநிலை அமல்படுத்தப்பட்டபோது தற்சார்பு இந்தியா என்ற வாசகத்தை பயன்படுத்திய நரேந்திர மோதி, இந்தியா உற்பத்தி நாடாக மாறவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.


ஆரம்பம் முதலே 'மேக் இன் இந்தியா' என்பதை தொடர்ந்து மோதி எடுத்துரைப்பது பற்றி குறிப்பிட்ட அவர், ''இது இந்தியாவுக்கு புதிய விஷயம் அல்ல. இந்திராகாந்தி காலம் முதலே கூறப்படும் விஷயம் தான். ஆனால் கொரோனா பரவல் அச்சம் உள்ள தற்போதைய சூழலில், எண்ணற்ற மக்களுக்கு அன்றாட வாழ்வே சிக்கல் என்ற நிலையில், தற்சார்பு இந்தியா என்பது எந்தளவுக்கு நடப்பு சிக்கல்களை தீர்க்கும் என்று தெரியவில்லை'' என்று அவர் கூறினார்.


''கால அவகாசம் தராமல் முடக்கநிலை அறிவிக்கப்பட்ட பின்னர் நடந்த விஷயங்களில் பெரிதும் கவனத்தை ஈர்த்தது புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் பட்ட சிரமங்கள் தான். இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள இவர்கள் பற்றி இப்போதுதான் பலருக்கும் தெரிய வந்துள்ளது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.


''மீண்டும் பெரும்பான்மையுடன் பாஜகவால் ஆட்சிக்கு வரமுடிந்ததற்கு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் ஒரு முக்கிய காரணம். தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க முடிந்த ஒரே கட்சி என்று நம்பப்படும் காங்கிரஸ் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இன்னும் பலவீனமாக தோன்றுகிறது.


ராகுல்காந்தி கட்சி தலைவர் பதவியை ராஜிநாமா செய்தது தவறு. அதற்கு பிறகு அந்த பொறுப்பை எந்த தலைவரும் ஏற்கமுன்வராத சூழலில், மீண்டும் சோனியா காந்தி தற்காலிக தலைவராக நியமிக்கப்படுகிறார். இந்த நிலையில் பாஜக வலுவாக தான் தோன்றும்''


''இறுதியாக கூறுவதென்றால் மோதி சிறந்த பேச்சாளராகவும், வசீகரம் மிக்க தலைவராகவும் உள்ளார். அவரை கடுமையாக பலரும் விமர்சித்துவரும் நிலையில், அவர் அளவுக்கு மற்ற கட்சிகளில் வசீகரம் மிக்க தலைவர் தற்போது இல்லை என்றே தோன்றுகிறது'' என்று சுரேஷ்குமார் குறிப்பிட்டார்.


மோதி 2.0 ஆட்சியில் சாதனைகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து பிபிசி தமிழிடம் பத்திரிகையாளர் மற்றும் இதழியல் கல்லூரியின் பேராசிரியரும் கே. என். அருண் உரையாடினார்.


''முத்தலாக் தடை சட்டம் ஆக்கப்பூர்வமான ஒன்று தான். ஆனால், இதனை குற்றமாக அறிவிக்கும் விஷயத்தில் அரசு சற்றே கூடுதலாக உள்ளே நுழைந்துவிட்டதோ என்ற எண்ணம் வருகிறது'' என்றார்.


''வெவ்வேறு கலாசாரங்கள் கொண்ட ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டது அந்த வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட விதம், அந்த போராட்டங்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் போன்றவை கடும் விமர்சனத்துக்கு உள்ளானவை'' என்று குறிப்பிட்டார்.


''முத்தலாக் தடை சட்டம், 370 சட்டப்பிரிவு, குடியுரிமை தடை சட்டம் போன்றவை பாஜகவின் நீண்ட செயல்திட்டங்கள் தான் என்றாலும், இவை நிறைவேற்றப்பட்ட விதம் நிச்சயம் விவாதத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியது''


காஷ்மீர் நீண்ட காலாக முடக்கநிலையில் இருந்தது, அந்த மாநிலத்தின் முக்கிய தலைவர்களை வீட்டுச்சிறையில் வைத்தது போன்றவை, எல்லாவற்றுக்கும் மேலாக குடியுரிமை தடை சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க எடுத்த முடிவு கடும் விமர்சனத்தையும், இவற்றின் நோக்கம் குறித்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியது என்று அவர் தெரிவித்தார்.


''சர்வதேச அரங்கில் மோதி செல்வாக்கு மிகுந்த தலைவராக சிலரால் பார்க்கப்படுகிறார். கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகான நிலைமையில் உலகில் எந்த அளவுக்கு மற்ற நாடுகளுடன் பரஸ்பர உறவு மற்றும் அதனால் எந்தளவு ஆதாயம் விளையும் என்று தெளிவாக கூற முடியாது'' என்றும் அருண் கூறினார்.


உள்நாட்டு அரசியல், ராஜீய உறவுகள் ஆகியவற்றை தாண்டி எந்த ஒரு அரசும் பொருளாதார ரீதியாக சிறப்பான பங்களிப்பை உறுதி செய்யவே முயலும்.


இந்நிலையில், மோதி 2.0 அரசில் இந்திய பொருளாதாரம் எப்படியுள்ளது என்பது குறித்தும், கொரோனா தொற்றுக்கு பிறகு எப்படி இருக்க வாய்ப்புள்ளது என்பது குறித்தும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் என அழைக்கப்படும் எம்எஸ்இ-யின் இயக்குநர் கே.ஆர். சண்முகம் பிபிசியிடம் பேசினார்.


''மீண்டும் பிரதமராக மோதி பதவியேற்று ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், கார்ப்பரேட் வரி விகிதம் குறைக்கப்பட்ட அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் வெளியானது. உலக அளவில் இந்த அளவு குறைவான கார்ப்ரேட் வரி விகிதம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற அளவில் இது வரவேற்பை பெற்றது'' என்று கூறினார்.


''புதிய நிறுவனங்கள் பலவற்றை ஈர்க்கவும், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கவும் இது உதவும் என்ற நிலையில் இந்த ஓராண்டில் பொருளாதார ரீதியாக நாட்டில் கொண்டு வரப்பட்ட சிறந்த சீர்திருத்தம் இது என கூறலாம்'' என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும் மின்னணு சாதனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடர்பாக தற்போது ஆக்கப்பூர்வமான சூழல் நிலவுகிறது.


அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த பிப்ரவரியில் இந்தியா வந்த சூழலில், இது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


''அதேவேளையில் 2024-25 நிதியாண்டுக்குள் நாட்டை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் கூறப்பட்டது.


இதை அடைய ஒவ்வொரு ஆண்டும் 9 சதவீதம் ஜிடிபி வளர்ச்சி இருக்கவேண்டும் என்ற நிலையில் தற்போது முதல் ஆண்டில் ஜிடிபி வீழ்ச்சி அடையும் என்றே பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைந்தே கொண்டே வருகிறது. இது 2020-21 ஆண்டில் நிச்சயம் வீழ்ச்சியடையும் என்று கூறப்படுகிறது.


தற்போது கொரோனா பாதிப்புக்கு பிறகான சூழலில் 2024-25 நிதியாண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


''கொரோனா பாதிப்புக்கு பிறகு கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் முக்கியமானது உற்பத்தித்துறை தான். இனி வரும் நாட்களில் இந்த துறை எந்தளவு வீழ்ச்சியை சமாளிக்க முடியும் என்பது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும்'' என்று சண்முகம் தெரிவித்தார்.


2014-ஆம் ஆண்டு மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்று, முதல்முறையாக தனிப்பெரும்பான்மையை பெற்ற பாஜக வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கையில், பிரதமராக பதவியேற்கவிருந்த நரேந்திர மோதி, தனது கட்சியினருக்கும், நாட்டு மக்களுக்கும் உற்சாகமூட்டும் வகையில் ''இனி நல்ல நாட்கள் வரவுள்ளன'' என்று குறிப்பிட்டது மிகுந்த வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.


ஆறு ஆண்டுகள் கழித்து, 2020-ஆம் ஆண்டு மே மாதத்தில், உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முடக்கநிலைக்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற திட்டத்தை அறிவித்து எதிர்காலம் குறித்து நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்.








மேற்கூறிய இரண்டு உரைகளும் நாடெங்கும், ஏன் இந்தியர்கள் வசிக்கும் அனைத்து நாடுகளிலும் மிகுந்த கவனத்தை பெற்றது.


ஆம், மோதி சிறந்த பேச்சாளர் தான். அவரின் செயல்பாடுகளை, ஆட்சியை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும்கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் இதை ஏற்றுக்கொண்டுள்ளன.


முன்னெப்போதும் சந்தித்திராத கோவிட்19 என்ற புதிய எதிரியால் இந்தியா தத்தளித்து கொண்டிருக்கும் சூழலில், எதிர்காலம் குறித்த அச்சம், சுகாதாரம், பொருளாதாரம் போன்ற ஏராளமான அம்சங்களில் வென்று முன்னேறுவோமா என்ற தவிப்பில் இருக்கும் இந்திய மக்கள்தொகையின் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பேச்சும், வசீகர வார்த்தைகளும் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்து நம்பிக்கையூட்டும் என்பதில் ஐயமில்லை.


ஆனால், வார்த்தைகள் மிகவும் துரிதமாக செயல்வடிவம் பெற வேண்டிய நேரமிது என நரேந்திர மோதியின் பேச்சை சிலாகித்த மக்களும், பத்திரிகையாளர்களும் கூறுகின்றனர்.


ஊடகங்களின் விமர்சனங்கள், எதிர்க்கட்சிகளின் கடுமையான பிரசாரம், குற்றச்சாட்டு என அனைத்தையும் தாண்டி 2019 தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெற்ற நரேந்திர மோதி என்ன செய்யப்போகிறார்? அவரது கட்சி இம்முறை என்ன செய்யப்போகிறது?


கொரோனா வைரஸால் எழுந்துள்ள அசாதாரண சிக்கல்கள், கடந்த சில ஆண்டுகளாகவே முன்னேற்றம் இல்லாத பொருளாதாரம் போன்ற சவால்களை மோதி அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது இனி வரும் நாட்களில், மாதங்களில் தெரியவரும். ஆனால், தற்போது உலகில் மற்றும் இந்தியாவில் எழுந்துள்ள அசாதாரண சூழலை வென்றாலோ, வீழ்ந்தாலோ, அதன் வெற்றியும், தோல்வியும் அவர்களுக்கு மட்டுமல்ல அதன் பாதிப்பு ஒட்டுமொத்த நாட்டுக்கும்தான் என்கின்றனர் அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள்.









Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்