நிர்மலா சீதாராமன்: 5 நாட்களாக அறிவித்தது என்னென்ன? - 15 முக்கிய தகவல்கள்

நிர்மலா சீதாராமன்: 5 நாட்களாக அறிவித்தது என்னென்ன? - 15 முக்கிய தகவல்கள்.



இந்தியப் பிரதமர் மோதி கடந்த மே 12ம் தேதி அன்று அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார தொகுப்புதவி திட்டம் குறித்த அறிவிப்புகளை இன்றுவரை தொடர்ந்து ஐந்து நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் வெளியிட்டு வந்துள்ளார்.


இந்த நிலையில், ஐந்து நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளை தேதி வாரியாக தொகுத்தளிக்கிறோம்.


மே 13ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புகள்


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்க, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இந்தக் கடன்களின் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வணிகம் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை இந்தக் கடன் வழங்கப்படும்.


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிறுவனங்களில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியை வழங்குவதற்காக நிதியம் மற்றும் துணை நிதியங்கள் உருவாக்கப்படும். இது அந்த நிறுவனங்கள் உற்பத்தி திறன் மற்றும் அளவில் விரிவாக உதவும்.


வங்கியல்லாத தொழில் நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், மற்றும் குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக, அந்த நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கு இந்திய அரசு பகுதி அளவு உத்தரவாதம் அளிக்கும். இந்த கடன்கள் மூலம் அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் முதல் 20 சதவிகித இழப்பை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இதற்காக 45,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


மே 14ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புகள்


ரேஷன் அட்டை இல்லாத உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக ஐந்து கிலோ அரசி அல்லது கோதுமை வழங்கப்படும்.


நகரங்களில் உள்ள ஏழை மக்களுக்கு உதவ குறைந்த வீட்டு வாடகை திட்டங்கள் செயலாக்கப்படும்; அரசு உதவி பெறும் கட்டடங்கள் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும்; தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யலாம். அதற்கு மத்திய அரசு உதவி செய்யும்.


முத்ரா சிஷு திட்டத்தின் கீழ் கடன் பெற்ற சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில், 50,000 ரூபாய்க்கு கீழ் கடன் பெற்றவர்களுக்கு 12 மாதங்களுக்கு, வட்டி விகிதத்திலிருந்து 2 சதவீதம் வரை வட்டி குறைக்கப்படும் வழங்கப்படும் இதன்மூலம் 3 கோடி மக்கள் பயன் பெறுவர்.


மே 15ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புகள்


விவசாயத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கப்படும். கொள்முதல் நிலைய உள்கட்டமைப்பு, குளிர்பதன கிடங்கு உள்ளிட்டவைகளுக்கு இந்த நிதி செலவிடப்படும்.


மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக "பிரதமரின் மீன்வள திட்டம்" என்ற பெயரில் புதிய திட்டம் தொடக்கம். இதன் மூலம், நாடு முழுவதும் மீன்வளத்துறையை மேம்படுத்த 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதில் ஒன்பது ஆயிரம் கோடி மீன்வளத்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மீதமுள்ள 11 ஆயிரம் கோடி மீனவர்கள் நலனுக்காகவும் செலவிடப்படும்.


வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளை ஆகியவை மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.


மே 16ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புகள்


ராணுவத் தளவாட உற்பத்தித்துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிப்பு. அதே சமயத்தில், குறிப்பிட்ட சில ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கு "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும்.


புதுச்சேரி உள்ளிட்ட எட்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது.


இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும். மேலும், இந்தியாவிலுள்ள மேலும் ஆறு விமான நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் முதலீட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.


 நேற்று நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?


நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மத்திய அரசு செய்தவற்றையெல்லாம் பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன். மேலும், நிலம், பணப்புழக்கம், தொழிலாளர் நலன், மருத்துவம், மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டம், கல்வி, பொதுத்துறை உள்ளிட்ட குறித்த ஏழு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.


கடந்த ஏப்ரல் மாதத்துக்கான மாநில வரிப்பங்கீடு ரூ.46,038 கோடி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் ரூ.12,390 கோடி மற்றும் மாநில பேரிடர் நிதியாக ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சுகாதாரத்துறையில் இருந்து ரூ.4,113 கோடி வழங்கப்பட்டுள்ளது.


ஒரே நாடு ஒரே டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்' என்பதன் அடிப்படையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படுகிறது. ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 'இ-வித்யா' என்ற இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படும்.


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்