முதல்வர் பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி
கொரோனாவால் இந்தியா மட்டுமன்றி, பல உலக நாடுகள், மிகப் பெரிய பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளன. நம் நாட்டில், இந்தப் பிரச்னையில் இருந்து வெளிவர, பிரதமர் மோடி, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்களை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், என்ன திட்டங்கள், அதற்கு எவ்வளவு பணம் என்பதை, விரிவாக அறிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய, முதல்வர், இ.பி.எஸ். மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளார். இதோடு நிற்காமல், பொருளாதாரப் பிரச்னையிலிருந்து மீள என்ன வழி என்ன என்பதை ஆராய, உயர் மட்டக் குழு ஒன்றையும் அமைத்துள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், சி.ரங்கராஜன் தலைமையிலான இந்தக் குழு, மூன்று மாதங்களுக்குள், தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
இந்த விஷயம், பிரதமர் மோடிக்கு தெரிந்ததும், இ.பி.எஸ்.,சுக்கு போன் போட்டு, அவரை பாராட்டினாராம். 'ரங்கராஜன் விஷயம் தெரிந்தவர்; மிகவும் திறமையானவர்; சரியான நபரைத்தான் தேர்வு செய்துள்ளீர்கள். அவர், தமிழகத்திற்கு நல்ல வழி காட்டுவார். இது தொடர்பாக எந்த உதவி வேண்டுமானலும் தயங்காமல் கேளுங்கள்' என போனில் சொன்னாராம் மோடி.