துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள்.. தமிழக அரசு புதிய அரசாணை
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என அழைப்பது குறித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் , பல்வேறு துறைகளிலும் துப்புரவுப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளை செய்து வருகிறார்கள். இப்பணியாளர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையிலும் அவர்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடவும் அனைத்து துப்புரவுப் பணியாளர்களும் இனி "தூய்மைப் பணியாளர்கள்" என அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.
தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் 6,398 துப்புரவுப் பணியாளர் பணியிடங்களும், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 14 மாநகராட்சிகளில் 15,510 துப்புரவு பணியாளர் பணியிடங்களும், 121 நகராட்சிகளில் 16,288 துப்புரவுப் பணியாளர் பணியிடங்களும் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 528 பேரூராட்சிகளில் 6,450 துப்புரவு பணியாளர் பணியிடங்களும், ஆக மொத்தம் 44,646 துப்புரவு பணியாளர் பணியிடங்கள் உள்ளன.
ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளில் மொத்தம் 26,404 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியாளர்கள் பொது இடங்களில் தூய்மையை பேணிக் காப்பது, புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுவது மற்றும் பேருந்து நிலையம், சந்தைகள், ஆலயங்கள், வணிக வளாகப் பகுதிகளில் உள்ள குப்பைகள், கழிவுகளை அகற்றி மேற்கொண்டு வரும் துப்புரவு பணிகள், மக்களின் நலனையும் பொது சுகாதாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இப்பணியாளர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையிலும் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையிலும் முதல்வர் சட்டசபையில் விதி எண் 110இன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் அடிப்படையிலும் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அனைத்து துப்புரவுப் பணியாளர்களையும் தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவதற்கு உரிய ஆணை வெளியிடுமாறு நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் ஆகியோர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அதன் அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் என அழைக்கப்படுவர் என அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.