கொரோனாவால் உலக தலைவர்கள் தங்களை எவ்வாறு மாற்றிக் கொண்டனர்?
பெருந்தொற்று உலகம் முழுவதும் பலரின் அன்றாட வாழ்க்கையிலும் பணியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற பல விஷயங்களை உலக நாடுகள் அனைத்தும் கடைப்பிடித்து வருகின்றன.
இந்த புதிய நடைமுறைகளுக்கு உலகத் தலைவர்களும் விதிவிலக்கல்ல. அவ்வாறு உலகத் தலைவர்கள் தங்களது அன்றாட பணியில் இந்த கொரோனா சூழலில் என்னென்ன மாற்றங்களை மேற்கொண்டனர்?
வணக்கம் சொன்ன தலைவர்கள்
கொரோனா தொற்று பரவத் தொடங்கிய தொடக்க காலத்திலிருந்தே நாம் பார்க்க முடிந்த மாற்றமானது உலக தலைவர்கள் கைக் குலுக்குவதற்கு பதிலாக கைகளை கூப்பி வணக்கம் சொல்ல கற்றுக் கொண்டது. அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் வரை வணக்கம் கைகளை கூப்பி வணக்கம் என்றனர்.
இருப்பினும் சிலர் இந்த பழக்கத்திற்கு மாற சற்று கடினமாகவே உணர்ந்தனர்.
மார்ச் மாதம் டென்மார்க் பிரதமர் மார்க் ருட்டே, ”பக்கத்திலிருப்பவர்களுக்கு கைக் கொடுப்பதற்கு பதிலாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேறுவிதமான வணக்கங்களை சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.
வீட்டிலிருந்து வேலை பார்ப்பது
இந்த கொரோனா சூழலில் உலகில் பெரும்பாலான மக்களுக்கு பெரும் மாற்றமாக இருந்தது பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன், கடந்த மார்ச் மாதம் முகநூலில் லைவாக பேசியபோது இந்த புதிய நடைமுறைகளில் உள்ள வித்தியாசங்களை சுட்டிக் காட்டினார்.
"சாதாரண உடையில் பேசுவதற்கு மன்னிக்கவும் - குழந்தைகளை உறங்க வைப்பது ஒரு பெரிய வேலை. எனவே எனது வழக்கமான உடையில் நான் இல்லை," என்றார்.
விதிகளை மீறுதல்
ஒருபக்கம் தலைவர்கள் புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க தொடங்கினாலும் மறுபக்கம் சில தலைவர்கள் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன.
இதில் சில தலைவர்கள் அவர்கள் பிறப்பித்த விதிகளை அவர்களே மீறினர்.
கடந்த வாரம் தென் ஆப்ரிக்காவின் அதிபர் சிரில் ராமஃபோசா, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்பதனால் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார்.
சமூக வலைதளங்களில் அவர், தன்னிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள வந்த இரு பெண்களுடன் பேசி சிரிப்பது போன்ற காணொளி ஒன்று வெளியானது.
இந்த பெருந்தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார் பிரேசில் அதிபர் பொல்சினாரூ.
ஊரடங்கிற்கு எதிராக நடைபெற்ற பேரணியில் தனது வாயை மூடாமல் இருமியதற்காகக் கடந்த மாதம் அவர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இதுவே பழகிப் போகும்
சில மாதங்களுக்கு முன், மக்கள் குழுக்களாக தேநீர் பருகுவது என்பது கேள்விக்குரிய விஷயமாக இருந்திருக்காது.
ஆனால் ஐரோப்பா முழுவதும் உள்ள பல பொழுதுபோக்கு அரங்கங்கள், உணவகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், போர்ச்சுகல்லின் பிரதமர் ஆண்டானியோ காஸ்டா, தலைநகர் லிஸ்பனில் உணவகம் ஒன்றில் கூட்டம் நடத்தியது பழைய நிலைக்கு திரும்புகிறோம் என்பதற்கான அறிகுறியாகவும், ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்டது.
இந்த கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து பல புதிய பழக்கங்களையும் நடைமுறைகளையும் நாம் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டோம் ஆனால் அது இனி வரும் நாட்களில் தொடருமா அல்லது பாதியிலேயே கைவிடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.