அ.தி.முக.வில் நிகழப்போகும் அதிரடி மாற்றங்கள்.....!. அதிா்ச்சியில் கட்சி நிா்வாகிகள்....!!
ஜெயலலிதாவால் அ.தி.மு.க-வுக்கு அறிமுகம் செய்யப்பட்ட பதவியான ஊராட்சி செயலாளர் என்கிற பதவியை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டது எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.
கடந்த மூன்று ஆண்டுகளாக அ.தி.மு.க கட்சிக்குள் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் செய்யாத இரட்டையர் கூட்டணியின் இந்தத் திடீர் அதிரடி கட்சியினருக்குக் கொஞ்சம் ஷாக்கை கொடுத்துள்ளது. இதற்கு முன்பு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டியதற்கு `கட்சிக்குள் சிக்கல் வந்துவிடுமோ' என்ற அச்சமே பிரதானமாக இருந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே தி.மு.க பாணியில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் கோலோச்சி வந்தனர்.
அதிலும் ஆளுங்கட்சியாக இருப்பதால் பல மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் பல மாவட்டங்களிலிருந்தும் தலைமைக்கு இது குறித்து புகார் அனுப்பினாலும், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆட்சியைப் பாதுகாப்பாக நகர்த்திக் கொண்டு சென்றாலே போதும் என்று நினைத்தது அ.தி.மு.க தலைமை.
இந்நிலையில், ஒரே நாளில் ஊராட்சி செயலாளர் என்கிற பதவியை ஒட்டுமொத்தமாக ரத்து செய்தது. அடுத்தகட்டமாக அ.தி.மு.க-வின் ஐ.டி விங் நிர்வாகத்திலும் மாற்றம் செய்யப்பட்டது. நான்கு மண்டலங்களாக ஐ.டி விங் பிரிக்கப்பட்டு அதற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இதன்தொடர்ச்சியாக அடுத்த சில நாள்களில் மாவட்டச் செயலாளர்கள் உட்பட பல மாற்றங்கள் அ.தி.மு.க-வில் நடக்கப்போவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, `
`இதுவரை ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்த எடப்பாடி இப்போது தேர்தலுக்குத் தயாராகிவிட்டார். அதற்கு கட்சியின் லகான் முழுமையாகத் தன் கைக்குள் வர வேண்டும் என்று கணக்குப் போட்டு வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.
அதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. சசிகலாவின் விடுதலைக்கான காலமும் நெருங்கிவருகிறது. இப்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்களும், மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் பலரும் அப்போது சசிகலா ஆசியால் பதவிக்கு வந்தவர்கள். அவர்களில் பலர் இப்போது எடப்பாடிக்கு இணக்கமாக இருந்தாலும், சசிகலாவின் மீதான விசுவாசத்தைச் சிலர் இன்னும் விடவில்லை.
அதேபோல் பல மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அடைந்த படுதோல்விக்குக் கட்சி நிர்வாகிகளின் மந்தமான செயல்பாடும், கரன்சி விஷயத்தில் நடந்த குளறுபடிகளும் ஒரு காரணம் என்கிற சலசலப்பு கட்சிக்குள் இருந்துவந்தது.
அப்போதே சில நிர்வாகிகளை மாற்றம் செய்ய எண்ணினார் எடப்பாடி. பன்னீர் தனது ஆதரவாளர்களுக்குப் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் அதைக் கிடப்பில் போட்டுவிட்டார் எடப்பாடி. அதே போல், ஊராட்சி செயலாளர்களாகப் பதவியில் இருப்பவர்கள் எல்லாம் சசிகலாவின் ஆதரவாளர்கள் என்கிற எண்ணமும் எடப்பாடியிடம் இருக்கிறது.
ஆனால், `இப்போதுள்ள நிர்வாகிகளை வைத்துக்கொண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தால் வேட்பாளர்கள் தேர்வில்கூட பணம் விளையாடும். அ.தி.மு.க-வின் வெற்றிகூட எட்டாக்கனியாகிவிடும்’ என்று உளவுத்துறை உஷார்படுத்தியது.
மேலும், புதியதாகப் பிரித்த மாவட்டங்களுக்கு நிர்வாகிகளும், தினகரன் பக்கம் சென்ற நிர்வாகிகளுக்கு மாற்றான நிர்வாகிகளும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதையெல்லாம் தேர்தலுக்கு முன்பு சரிசெய்ய வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார்.
மேலும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மற்றொரு குறையும் உள்ளது. `அம்மா இருந்த காலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தபோது கொஞ்சமாவது வருமானம் பார்த்தோம். இப்போது மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் மட்டுமே வருமானம் பார்க்கிறார்கள்’ என்று புகார் கிளம்பியுள்ளது.
எனவே, அப்படி புகாருக்கு உள்ளான மாவட்டங்களில் அமைச்சர்களுக்கு செக் வைக்க அமைச்சரின் எதிர் கோஷ்டிக்கு வாரியத்தலைவர் பதவியை அளித்து எம்.ஜி.ஆர் பாணியில் ஒரே மாவட்டத்தில் இரண்டு கோஷ்டியை உருவாக்கத் திட்டமிடுகிறார் எடப்பாடி.
மேலும் கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவி மற்றும் மாநில நிர்வாகிகள் பதவிக்கும் சில சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களையும் தன்வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எடப்பாடியிடம் இருக்கிறது.
`சசிகலா வெளியே வரட்டும் ஆட்டம் காட்டலாம்' என்று சில அமைச்சர்களும் நிர்வாகிகளும் நினைக்கிறார்கள். அதைத் தடுக்கவும் அம்மா பாணியிலான இந்த நடவடிக்கை தனக்குக் கைகொடுக்கும் என்று நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
சசிகலா வெளியே வரும் நேரம் கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒரு போர்க்கொடியை உயர்த்துவார் என்று உறுதியாக நம்புகிறார் எடப்பாடி. அதற்கு முன்பாகக் கட்சியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டால், சசிகலா வெளியே வரும்போது கட்சியில் தான் மட்டுமே பவர்ஃபுல்லாக இருக்கலாம் என்கிற திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க முடிவு செய்துவிட்டார்.
இதன் முதல்படியாக அடுத்த சில நாள்களில், அ.தி.மு.க தலைமையிலிருந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாக உள்ளன. பத்துக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளார்கள். பல ஒன்றியச் செயலாளர்களை மாற்றியும் அறிவிப்பு வர உள்ளது.
ஏற்கெனவே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் கட்சித் தலைமைக்கு வந்த புகார்களுக்கு இப்போது உயிர் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். தேர்தலுக்கு முன்பாக இந்த மாற்றங்களைச் செய்தால் மட்டுமே கட்சி நிர்வாகிகள் தேர்தலில் அச்சத்தோடும் அர்ப்பணிப்போடும் வேலை செய்வார்கள் எனத் தலைமை திட்டமிட ஆரம்பித்துள்ளது.
அ.தி.மு.க தலைமை அலுவலகம்அ.தி.மு.க தலைமை அலுவலகம்
மேலும், எவ்வளவு கரன்சியை நாம் செலவழித்தாலும் அது சேரும் இடத்திற்கு ஒழுங்காகச் சென்று சேர வேண்டும். அதற்குக் கட்சியின் கட்டமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதோடு, வேட்பாளர்கள் தேர்விலும் சில புதிய நடைமுறைகளைப் புகுத்தவும் திட்டமிட்டுள்ளார் எடப்பாடி.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த மாற்றங்களையெல்லாம் நடத்திவிட்டு, அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் எடப்பாடி." என்றனர்.
அதிகாரம் இருக்கும்போது எடப்பாடியிடம் காட்டும் பணிவைத் தேர்தலுக்கு முன்பாக அனைவரும் காட்டுவார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அதற்கு எடப்பாடியின் திட்டம் என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.