இந்தியாவின் ராஜதந்திரம்! சீனாவிலிருந்து வெளியேறும் கம்பெனிகளை ஈர்க்க திட்டம்!
2008-ல் பொருளாதார நெருக்கடி வந்த போது, ஒட்டு மொத்த உலகத்தின் வியாபார போக்கும் மாற்றம் கண்டது. உதாரணமாக: 2008-க்கு முன், இந்தியா அமெரிக்காவுக்கு மட்டுமே அதிக அளவில் செய்து வந்தது. 2008-க்குப் பின், இந்தியா ஏற்றுமதியை, மற்ற நாடுகளுக்கும் செய்ய அதிகம் கவனம் கொடுக்கத் தொடங்கியது. அதே போல, இன்று கொரோனா வைரஸ் உலக வர்த்தகம் மற்றும் வியாபாரங்களை மாற்றிக் கொண்டு இருக்கிறது. அதில் மிக முக்கியமான விஷயம் சீனா. ஏன் சீனாவில் என்ன பிரச்சனை? வியாபாரிகள் கருத்து என்ன? விரிவாகப் பார்ப்போம்.
உலகத்தின் உற்பத்தி ஆலை என்றால் சீனாவைச் சொல்லலாம். அந்த அளவுக்கு சீனாவில் உற்பத்தி வசதிகள் பிரமாதமாக இருக்கின்றன. ஆனால் அந்த நாட்டில் முதன் முதலில் கொரோனா வந்த போது, பல கம்பெனிகளுக்கு சீனாவில் இருந்து வர வேண்டிய சரக்குகள் வரவில்லை. வியாபாரம் தேக்கம் கண்டது.
இனி இப்படி ஒரு தேக்கத்தை பார்க்கக் கூடாது என, தங்கள் உற்பத்திகளுக்கு, சீனாவை மட்டும் அதிகம் சார்ந்து இருப்பதை, பல்வேறு கம்பெனிகளும் குறைக்க விரும்புவதாக, எகமானிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதனால் சீனாவுக்கு பதிலாக அல்லது சீனாவுக்கு அடுத்தபடியாக தங்கள் உற்பத்தி ஆலைகளை நிறுவ கம்பெனிகள் இடம் பார்த்துக் கொண்டு இருக்கின்றன.
இந்த வாய்ப்பை, இந்தியா கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள அரசு தரப்பில் வேலை பார்த்து வருகிறார்களாம். சீனா வேண்டாம் என வெளியே வரும் கம்பெனிகள் மற்றும் சீனாவைத் தாண்டி தங்கள் உற்பத்தி ஆலைகளை நிறுவ விரும்பும் கம்பெனிகளுக்காக இந்தியாவில் சுமாராக 4.61 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு தொழில் துறையினருக்கான நிலங்களை பார்த்து வைத்து இருக்கிறார்களாம்.
அதிலும் குறிப்பாக, ஏற்கனவே தொழில் துறையில் முன்னணியில் இருக்கும் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மட்டும் சுமாராக 1.15 லட்சம் ஹெக்டேர் தொழில் துறைக்கான நிலங்களைப் பார்த்து வைத்திருக்கிறார்களாம். நிலம் என்ன அவ்வளவு முக்கியமா..? அதைக் காட்டினால் கம்பெனிகள் வந்துவிடுமா..? என்றால் ஆம். வந்துவிடுவார்கள் என்பது தான் பதில்.
இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் கம்பெனிகளுக்கு பெரிய தடையாக இருக்கும் விஷயம் நிலம் தான். இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் கம்பெனிகள், சொந்தமாக நிலம் வாங்கி, அதில் தங்கள் உற்பத்தி ஆலைகளைக் கட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்.
ஒரு பெரிய அளவிலான நிலத்தை கையகப்படுத்தும் போது, பல சின்ன சின்ன நில உரிமையாளர்களிடமும் பேசி, சம்மதிக்க வைக்க வேண்டி இருப்பதால், ஒட்டு மொத்த முதலீடும் தாமதமாகிறதாம். அந்த சிக்கல் எல்லாம் இந்த முறை இருக்கக் கூடாது என ஏற்கனவே 4.61 லட்சம் ஹெக்டேர் நிலங்களை பார்த்து வைத்து இருக்கிறது இந்திய அரசு.
அது போக, சிறப்பு பொருளாதார மண்டலங்களில், மின்சாரம், நீர், சாலை போக்குவரத்து... வசதிகள் போன்ற எல்லா அடிப்படைக் கட்டமைப்புகளுடன் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நில விவரங்களையும் விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்களாம். அதோடு இந்த மாத இறுதிக்குள், வெளிநாட்டு முதலீடுகளை கவர ஒரு விரிவான திட்டத்தையும் தயார் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
எலெக்ட்ரிக்கல், பார்மா, மருத்துவ சாதனங்கள், எலெக்ட்ரானிக்ஸ், கடினமான பொறியியல் சார்ந்தவைகள், சோலார் கருவிகள், உணவு பதப்படுத்துதல், ரசாயனம், டெக்ஸ்டைல் என சில துறைகளை மத்திய அரசே தேர்வு செய்து இருக்கிறார்களாம். இந்த துறையில் எல்லாம் உற்பத்தியை மேம்படுத்த கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.
அவ்வளவு ஏன், வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களில் கூட, மேலே சொன்ன துறைகளில் வியாபாரம் செய்ய விரும்பும் கம்பெனிகளை கண்டு பிடிக்கச் சொல்லி இருக்கிறார்கள் என்றால் இந்தியா, கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி முதலீடுகளை ஈர்க்க எவ்வளவு சீரியஸாக இருக்கிறது எனப் புரியும்.
இன்வெஸ்ட் இந்தியா என்கிற அரசின் முதலீட்டு ஏஜென்ஸிக்கு, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா, சீனா போன்ற நாட்டு கம்பெனிகளில் இருந்து இந்தியாவில் வியாபாரம் செய்ய விசாரித்துக் கொண்டு இருக்கிறார்களாம். ஏற்கனவே இந்த 4 நாடுகளும், இந்தியாவின் டாப் 12 வர்த்தக நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கொரோனா பரவியதால் தங்கள் வியாபாரம் அடி வாங்குவதாக எண்ணி, கம்பெனிகள் சீனாவை விட்டு வெளியேறுவதை எப்படி தடுப்பது..? என தலையை சொறிந்து கொண்டு இருக்கிறது சீன அரசு. ஆனால் இந்த வாய்ப்பை கூடுமான வரை சாதகமாக, சத்தம் காட்டாமல் ராஜ தந்திரமாக பயன்படுத்திக் கொள்ள வேலை பார்த்து வருகிறது இந்தியா.