தமிழ்நாட்டில் ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தொடருமா?: முதலமைச்சர் முடிவு என்ன?
ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தொடருமா என்பது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை, மத்திய அரசின் அறிவுறுத்தலுக்குப் பிறகு முடிவுசெய்யப்படும் என தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோய்ப் பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு சரியாகப் பின்பற்றுவதால், இங்கு கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்தார்.
ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் பரவல் அதிகம் ஏற்பட்டு அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உயிரிழப்பு குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு தொடருமா எனக் கேட்டபோது, "திங்கட்கிழமையன்று மீண்டும் மருத்துவ நிபுணர்களின் கூட்டம் கூட இருக்கிறது. அவர்களது ஆலோசனை, மத்திய அரசின் அறிவுரையைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்" எனக் கூறினார்.
கொரோனா விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வாய்ப்பு இல்லை என்றும் மற்றொரு மாநிலத்துடனான பிரச்சனை என்றால் எல்லா கட்சிகளையும் அழைத்துப் பேசலாம். இது சுகாதாரம் தொடர்பான பிரச்சனை. ஆகவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தத் தேவையில்லை எனவும் முதல்வர் தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பது குறித்துக் கேட்டபோது, பழைய நடைமுறையே தொடர வேண்டுமென மத்திய அரசிடம் சொல்லியிருப்பதாகத் தெரிவித்த முதல்வர், விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் 35,000 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஒவ்வொரு மாதமும் 12 - 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு இருக்குமென்றும் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிற்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு இருக்குமென்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.