கொரோனவால் தீவிர சுவாசக்கோளாறுக்கு உள்ளாகும் ரத்த வகை எது..?
கொரோனா நோயால் தற்போது பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக நாடுகளையே நடுங்க வைத்துள்ளது. இந்த கொரோனா. தற்போது வெளியான ஆய்வு ஒன்றில் ஏ வகை ரத்த பிரிவு உள்ளவர்களுக்கே கொரோனாவால் சுவாச கோளாறுகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா ஆய்வு
கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிக சுவாச கோளாறு ஏற்படுவதற்கு ரத்தவகை ஒரு காரணியாக இருக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வை இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள ஐரோப்பிய கொரோனா மையப்பகுதி மருத்துவர்களும் ஜெர்மன் மற்றும் நார்வே விஞ்ஞானிகளும் நடத்தியுள்ளனர்.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் இல் உள்ள நகரங்களில் 1600 கொரோனா நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,610 நோயாளிகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பின்னர், கடுமையான அறிகுறிகளுக்கு ஆளானவர்கள் ஆவர்.
ஏ- பாசிடிவ்
இந்த ஆய்வின் போது, சார்ஸ்-கோவ் -2 நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் கடுமையான சுவாச நோயை உருவாக்கியவர்களில் மரபணுக்கள் பொதுவானவையா என்பதை தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்கள் மரபணு அளவிலான பகுப்பாய்வை மேற்கொண்டனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் குறைந்தது இரண்டு குறிப்பிடத்தக்க இணைப்புகளை கண்டறிந்தனர்.
அவற்றில் ஒன்று, ரத்த பிரிவு ஏ- பாசிடிவ் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் துணை அல்லது வென்டிலேட்டர் தேவைப்படும் அளவிற்கு சுவாச கோளாறு பிரச்னை ஏற்படுகிறது என்றும் ரத்த பிரிவு ஓ பாசிடிவ் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாச கோளாறு ஏற்படும் வாய்ப்பு குறைவே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ப்ரீ பிரிண்ட் சர்வர் மெட்ரிஸ்விக்கில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.