ஏ.டி.எம். பணம் எடுப்பதில் புதிய விதிமுறை!
ஜூலை 1 முதல் ஏடிஎம் உள்ளிட்ட வங்கிப் பரிவர்த்தனைகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அது குறித்துப் பார்க்கலாம் வாருங்கள்...
மார்ச் 25ஆம் தேதியில் கொரோனா பீதியால் ஊரடங்கு விதிக்கப்பட்ட பின்னர் பொதுமக்களுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, வங்கிக் கடன் செலுத்துவதில் கால அவகாசம், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கூடுதல் கட்டணம் ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி அளித்திருந்தது. குறிப்பாக ஆறு மாதங்களுக்கு ஈ.எம்.ஐ. கட்டத் தேவையில்லை என்ற அறிவிப்பு பெரும்பாலான மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு இது சற்று ஆதரவாக இருந்தது. குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான அபராதமும் நீக்கப்பட்டது.
தற்போது கொரோனா ஊரடங்கு தளர்ந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மக்களுக்கான பணப்பரிவர்த்தனைகள் கடுமையாகவுள்ளன. ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு இனி வாடிக்கையாளர்கள் கூடுதலாகச் செலவிடவேண்டியிருக்கும். ஜூலை 1 முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், ஜூலை 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
ஊரடங்கு காலத்துக்கு முன்னர் இருந்த விதிமுறைகள் அப்படியே மீண்டும் அமலுக்கு வருகின்றன. அதாவது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கட்டணம் வசூலித்தனவோ, அதே கட்டணம் ஜூலை 1 முதல் மீண்டும் வசூலிக்கப்படும். வெவ்வேறு வங்கிகளைப் பொறுத்து ஏடிஎம் கட்டணங்கள் மாறுபடுகின்றன. உதாரணமாக, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், 5 பரிவர்த்தனைகள் எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 3 பரிவர்த்தனைகள் இதர வங்கிகளிலும் இலவசமாக மேற்கொள்ளலாம். அதன் பின்னர் எடுக்கும் பணத்துக்கு ஒரு முறைக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும். அதோடு ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. பணமில்லாத இதர பரிவர்த்தனைகளுக்கு ரூ.8 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூல் செய்யப்படுகிறது.