தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்போது? - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.பி சாமி கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அதற்கடுத்த நாள் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார். இதனால் இரண்டு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக சட்டமன்ற தொகுதி காலியாக இருந்தால் அடுத்த ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்.
அதன்படி திருவொற்றியூர் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு முன்பாகவும், குடியாத்தம் தொகுதிக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு முன்பாகவும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் தேர்தல் நடத்த ஏதுவான சூழல் இல்லை.
அடுத்த ஆண்டு(2021) தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு சில மாதங்களே இருப்பதால் இடைத்தேர்தல் நடைபெறுமா என்று கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ஆம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மக்கள் நலன் கருதி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு 7 மாதங்களே இருக்கின்றன. அதற்குள் கொரோனா பாதிப்பின் நிலை கட்டுக்குள் வந்தால் தேர்தல் நடத்த வாய்ப்பு ஏற்படலாம். ஆனால் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதிதாக தேர்தல் நடத்தப்பட்டுவிடும். இடைத்தேர்தலுக்கு வேலையில்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.