சசிகலா வருகை: பாஜக முடிவு என்ன தெரியுமா?

 சசிகலா வருகை: பாஜக  முடிவு என்ன தெரியுமா?



அதிமுக கூட்டணிக்குள் பாஜக, பாமக, தேமுதிக என ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பக்கம் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பது குறித்து தயக்கம் காட்டிவந்த பாஜக அது குறித்து வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து பேசியது. பாஜக தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வந்தபோது கூட்டணியையும் உறுதிப்படுத்தினார்.

இது ஒரு பக்கம் என்றால், சசிகலாவின் வருகை அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிர்வாகிகள் கட்சியைவிட்டு நீக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவின் வருகையை கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிலும் குறிப்பாக பாஜக எப்படி பார்க்கிறது என்பது முக்கியமானது.

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இது குறித்துப் பேசியுள்ளார்.
“தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்று எங்கள் கட்சியின் அகில இந்திய தலைமை முடிவெடுத்துள்ளது. எத்தனை இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எத்தனை இடங்களில் நாங்கள் கேட்கிறோம் என்பதை விட, எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதே முக்கியம்.

ஆட்சியில் பாஜக பங்கு கொள்வது குறித்து தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்வோம். தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக இரட்டை இலக்க எண்களில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் நோக்கம். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.
சசிகலா வருகை என்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம். இந்த விஷயத்தில் அதிமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு எங்களின் ஆதரவு உண்டு.
அதிமுக பெரிய கட்சி என்பதால் அவர்கள் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி, சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. இன்னும் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து அதிமுக முடிவு செய்யும்” என்று கூறினார்.