ஏப்ரல் 1 முதல் இந்த எட்டு வங்கிகளின் செக்புக் மற்றும் பாஸ்புக் செல்லாது
பொதுத்துறை வங்கிகள் சிலவற்றின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை ஆகஸ்ட் 2019இல் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஓரியண்டல் வங்கி (ஓபிசி) மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. அதேபோல சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இதே திட்டத்தின்படி அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடனும், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவை பாங்க் ஆஃப் பரோடாவுடனும் இணைக்கப்பட்டன.
இந்த இணைப்பு திட்டத்தைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இணைப்புக்குள்ளான எட்டு வங்கிகளின் காசோலைகள் மற்றும் பாஸ்புக்குகள் செல்லுபடியாகாது எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய வங்கிகளின் காசோலைகளை ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த எட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் மொபைல் எண், முகவரி, பெயர் போன்ற கணக்கு விவரங்களையும் இணைக்கப்பட்ட வங்கிகளிடம் புதுப்பிக்க வேண்டும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு, வாடிக்கையாளர்கள் புதிய காசோலை புத்தகம் மற்றும் பாஸ்புக் ஆகியவற்றைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.