ஜூன் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – அரசு தேர்வுத்துறை தகவல்!!
தமிழகத்தில் கொரோனா பரவல், சட்டமன்ற பொதுத்தேர்தல் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்வு ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முன்னதாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டன. போதிய வசதியின்மை காரணமாக பல மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள இயலவில்லை. மேலும் சிலர் படிப்பை உதறிவிட்டு குடும்ப நிலையை கருத்தில் கொண்டு பணிக்கு செல்ல தொடங்கினர்.
இதனால் பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ஆலோசனைகள், கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்திய தமிழக அரசு ஜனவரி 19 முதல் பள்ளிகளை திறந்தது. அதன்படி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா 2வது அலை வேகமெடுக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து 12ம் வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கு கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து, ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வுகளை நடத்தலாம் என ஆசிரியர் சங்கம் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மேலும் மே 2ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் பிரச்சார பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை முன்னர் வைக்கப்பட்டது. ஆனால் இதனை அரசு ஏற்கவில்லை.
தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் கிடுகிடுவென உயரத் தொடங்கி உள்ளது. இதனால் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை மே மாதம் நடத்த வாய்ப்புகள் இல்லை. எனவே ஜூன் மாதம் நடத்தப்படலாம் என பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது.