ஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்... எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மோடி
கொரோனா பரவத் தொடங்கியபோது, நண்பர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள், இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நிதியுதவி வழங்கியதாக பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி, பெரு முதலாளிகளின் நண்பர் என்றும் அந்த நண்பர்களுக்காக வாழ்வதாகவும், நண்பர்களுக்காக நாட்டை விற்றுக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-
நான் எனது நண்பர்களுக்காக உழைப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. நாம் யாருடன் வளர்ந்தோமோ அவர்கள் தான் நமது நண்பர்கள். நான் வறுமையில் வளர்ந்தேன். ஆகையால், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்ந்துவரும் ஏழைகளின் நிலையை நான் அறிவேன். ஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள். எனது நண்பர்களான அவர்களுக்காகத்தான் நான் உழைக்கிறேன். தொடர்ந்து உழைப்பேன்.
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியபோது, எனது நண்பர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள், இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நிதியுதவி வழங்கினேன். உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியின் விலை அதிகமாக இருந்தது. ஆனால், எனது நண்பர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக தடுப்பூசி போட ஏற்பாடு செய்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.