கடலில் நீச்சலடிப்பதும்... மாணவர்களுடன் தண்டால் எடுப்பதும் தலைவருக்கு அழகல்ல - ராகுலை கிண்டலடிக்கும் குஷ்பூ
: ஒரு தலைவர் தான் என்னசெய்யப்போகிறார் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். அதைவிட்டு, கடலில் குதித்துநீச்சல் அடிப்பதோ, மாணவர்களுடன் சேர்ந்து தண்டால் எடுப்பதோ ஒரு தலைவருக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார் குஷ்பு. ராகுல்காந்தி கேரளா மீனவர்களுடன் படகில் போகும் போது கடலில் குதித்து நீச்சலடித்தார். தூத்துக்குடி மாணவர்கள் மத்தியில் பேசும் போது தண்டால் எடுத்தார். இதைத்தான் குஷ்பு கிண்டலடித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதிப்பங்கீடு நடந்தாலும், பேரணிகளும், தேர்தல் பிரச்சாரங்களும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.
திருநெல்வேலியில் பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட தலைவர் மகாராஜன், குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக பாஜக இடையேயான கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும், அந்த நம்பிக்கையில்தான் தேர்தலில் இறங்கியுள்ளோம். நம்பிக்கைதான் வாழ்க்கை. அந்த நம்பிக்கை எங்களுக்கு நிறைய இருக்கிறது.
பாஜக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நிதியாண்டின் தொடக்கம் மற்றும் இறுதியில் எரிபொருள் விலை உயர்வது இயல்பு.
அதிமுக ஆட்சியில் குற்றம்சாட்ட எதுவுமே இல்லை. முதல்வர் பழனிசாமி மீது எவ்வித ஆதாரபூர்வ குற்றச்சாட்டும் இல்லை என்று கூறிய குஷ்பு பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்றார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவதாகவும் கூறினார்.
ஒரு தலைவர் தான் என்னசெய்யப்போகிறார் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். அதைவிட்டு, தண்ணீரில் குதித்துநீச்சல் அடிப்பதோ, மாணவர்களுடன் சேர்ந்து தண்டால் எடுப்பதோ ஒரு தலைவருக்கு நல்லதல்ல என்று ராகுல்காந்தியை சாடினார்.
திருநெல்வேலி தொகுதியில் யார் போட்டியிடுவர் என்பதனை மேலிடம் முடிவு செய்யும். நயினார்நாகேந்திரன் போட்டியிட்டால் எங்களுக்கு சந்தோஷம்தான். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். பெண் ஐபிஎஸ் அதிகாரி மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது எனக் கூறினார்.