மாம்பழத்திற்கு 18 இடங்களில் வெற்றி வாய்ப்பு...?!
ஓட்டுப்போட்ட அன்றைக்கு மாம்பழக் கட்சி 13 இடத்துல ஜெயிச்சிடும்னு தகவல் கேட்டு பலருக்கும் எரிச்சல் எனக்கு கிடைத்திருக்கிற தகவல்படி மாம்பழக் கட்சி 16 முதல் 18 இடங்களில் ஜெயிக்குமாம். மே 2ஆம் தேதி இது நிஜமாகும் போது பலருக்கும் இன்னும் அதிகமா எரியும் என்று டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் தூக்கத்தை தொலைத்துள்ளனர். மே 2ஆம் தேதி வரை பலருக்கும் பக் பக் மனநிலைதான். அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாமக 16 முதல் 18 இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கையாக கூறி வருகிறார். அவர் தனது முகநூர் பக்கத்தில் ராதாபாட்டி, சீதா பாட்டி என்ற தலைப்பில் ஒரு உரையாடலை பதிவிட்டுள்ளார். அதில் நமது வெற்றியைப் பார்த்து வயிறு எரியும் நபருக்கு ஜெலுசில் கொடு என்று சொல்கிறார் ராதாபாட்டி.
ராதா பாட்டி: அக்கா... கோடை வெயில் அதிகமாக கொளுத்துமா... இல்லை... அடுத்தவர் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாதவரின் வயிற்றெரிச்சல் அதிகமாக கொளுத்துமா அக்கா?
சீதா பாட்டி: அடியே இரும்பு அடிக்கிற இடத்துல எறும்புக்கு என்ன வேலைடி. எரியறது, கொளுத்துறது பத்தில்லாம் உனக்கு என்னடி கவலை. நீ ஏன்டி அதைப் பத்தி கவலைப்படுறே?
ராதா பாட்டி: அய்யோ... அது இல்லைக்கா. என் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டுல குடியிருக்கிறவரு பொறாமைய மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவரு. தனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை... அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போகணும்னு துடிப்பாரு.
சீதா பாட்டி: அடேங்கப்பா... எவ்வளோ பெரிய மனசு. சரி. அதுக்கு இப்போ என்ன?
ராதா பாட்டி: அந்த ஆளிடம் போய் யாரோ பா.ம.க. 12, 13 இடத்துல ஜெயிச்சுடும்னு சொல்லிட்டாங்க போலிருக்கு. அதைக் கேட்டதிலிருந்து அந்த ஆளு ஒரே புலம்பல் அக்கா. அவர் வீட்டிலிருந்து ''அய்யோ குத்துதே, குடையுதே, வயிறு எரியுதேன்னு'' ஒரே கூச்சல் சத்தம் வருதுக்கா. அதான் கோடைவெயில் கொளுத்துமா.... பொறாமை பிடித்தவர்களின் வயிற்றெரிச்சல் கொளுத்துமான்னு கேட்டேன்க்கா.
சீதா பாட்டி: என்ன ஜென்மம்டி அவன். அது சரி அவனுக்கு ஏன் மாம்பழம் கட்சி மேல இவ்வளவு எரிச்சல்?
ராதா பாட்டி: மாம்பழம் கட்சியியோட அய்யா வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்துட்டாராம். அதனால வன்னியர்கள் எல்லாம் முன்னேறி விடுவாங்களாம். அவங்க எல்லாம் படிச்சி, வேலைக்கு போயிட்டா நம்மளுக்கு வேலை செய்ய யார் இருப்பாங்கங்க என்பது தான் எரிச்சலுக்கு காரணமாம்.
சீதா பாட்டி: அப்ப அடுத்தவங்க முன்னேறவே கூடாதாமா?
ராதா பாட்டி: அதுமட்டுமில்ல அக்கா. இப்ப சட்டசபையில மாம்பழக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை. இப்பவே அந்தக் கட்சி சொல்றது தான் நடக்குது. மாம்பழக் கட்சி 12, 13 இடத்துல ஜெயிச்சி சட்டசபைக்கு போயிட்டா அந்தக் கட்சி சொல்றது எல்லாமே நடக்குமாம். அது தான் அவரது வயிற்றுப் புகைச்சலுக்கு காரணமாம்.
சீதா பாட்டி: அட.... சரியான ஆம்பள காந்தாரியா அவன் இருப்பான் போலிருக்கே? மாம்பழக் கட்சி ஜெயிச்சா அவனுக்கு எங்க வலிக்குதாம்?
ராதா பாட்டி: இல்லக்கா... வன்னியர்கள வச்சி தான் அந்த ஆளு இவ்வளவு நாள் பிழைப்பு நடத்திகிட்டு இருந்தாரு. 10.50% இட ஒதுக்கீட்டால வன்னியர் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு. அதனால அவருடைய பிடியில் இருந்த வன்னியர்கள் எல்லாம் விலகிப் போயிட்டாங்களாம். அதுமட்டுமில்லாம.... மத்த சமுதாய மக்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வாங்கித் தரப் போறதா மாம்பழக் கட்சி அய்யா வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். இலைக் கட்சி ஆட்சி வந்து மாம்பழம் வலிமையாக இருந்தால் நம்ம கூடாரம் காலியாகப் போய்விடுமோங்கிற அச்சம் தான் அந்த ஆளு புலம்பலுக்கு காரணமாம்.
சீதா பாட்டி: அடியேய்... நீ சொல்ற அந்த ஆளு யாருன்னு இப்ப புரியுதுடி. நம்ம பனியன் விளம்பரப் பார்ட்டி தானேடி?
ராதா பாட்டி: சரியா கண்டுபிடிச்சிட்டீங்க அக்கா. அவரே தான்க்கா. அவருடைய பத்து வருசப் பசி இந்த முறையும் அடங்காமல் போய்விடுமோன்னு நினைக்கிறாருக்கா. அதான் இவ்வளவு புலம்பலுக்கும், வயிற்றெரிச்சலுக்கும் காரணம்க்கா.
சீதா பாட்டி: சரி... எனக்கு செலவானாலும் பரவாயில்லை. நீ ஒண்ணு செய். எனது டேபிள் மேல ஒரு பேக் இருக்கு. அதுல அரை லிட்டர் ஜெலுசில் பாட்டில் இருக்கு. அதை நீ எடுத்துக்கிட்டு அந்த ஆளுக்கு கொடு. எரிச்சல் அடங்கும்.
ராதா பாட்டி: அக்கா... அவருக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தான்க்கா வயிற்றெரிச்சல் உச்சத்துல இருந்தது. இன்னிக்கு அவ்வளவு சத்தம் இல்லைக்கா. எரிச்சல் கொஞ்சம் அடங்கிடுச்சி போல. இந்த நேரத்துல எதுக்குக்கா இதை அவருக்கு கொடுத்து வீணடிக்கனும்.
சீதா பாட்டி: இல்லடி. எப்போதும் ஒரு தொலைநோக்கு பார்வை வேணும்டி. ஓட்டு போட்ட அன்றைக்கு மாம்பழக் கட்சி 12,13 இடத்துல ஜெயிச்சிடும்னு தானே அந்த ஆளுக்கு அவ்வளவு எரிச்சல். எனக்கு கிடைத்திருக்கிற தகவல்படி மாம்பழக் கட்சி 16 முதல் 18 இடங்களில் ஜெயிக்குமாம். மே 2ஆம் தேதி இது நிஜமாகும் போது அந்த ஆளுக்கு இன்னும் அதிகமா எரியும்டி. அப்ப அந்த ஆளுக்கு கொடுத்து குடிக்க சொல்றதுக்கு தான் எடுத்துப் போகச் சொல்றேன்டி..
ராதா பாட்டி: சரி தான்க்கா. ஆனா அன்னிக்கு குடிக்க அவருக்கு ஒரு பாட்டில் ஜெலுசில் பத்தாது அக்கா. ஏன்னா... நீங்க சொல்ற கணக்கைப் பார்த்தால் அவரது எரிச்சலை அடக்க ஒரு பீப்பாய் ஜெலுசில் சாப்பிட வேண்டியிருக்கும்க்கா!
மேலும் சென்னை செய்திகள்
இந்த உரையாடல் மூலம் டாக்டர் ராமதாஸ் யாரை வயிற்றெரிச்சல் பார்ட்டி என்றும் ஜெலுசில் குடிக்க கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார் என்று புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.