தண்ணீரில் பூரி சுடலாம்; ஒரு சொட்டுகூட எண்ணெய் வேண்டாம்

தண்ணீரில் பூரி சுடலாம்; ஒரு சொட்டுகூட எண்ணெய் வேண்டாம்....!



’ பூரி ஒரு தென்னிந்திய உணவு இல்லையென்றாலும் பலரும் விரும்பி உண்கிறார்கள். இருப்பினும் பூரியில் அதிக அளவு எண்ணெய் காணப்படுவதால் சிலர் தவிர்கின்றனர். மேலும் உடல் எடை, சர்க்கரை நோய், கொழுப்புச்சத்து போன்ற பல உபாதைகள் வரும் என்ற பயம் ஏற்படுவதால் முற்றிலும் தவிர்க்க முயல்கின்றனர்.

எண்ணெய் இல்லாமல் பூரி செய்வது பற்றி பெரும்பாலும் நாம் அறிந்திருக்க மாட்டோம். என்னது எண்ணெய் இல்லாத பூரியா? என்ற கேள்வி இங்கு உங்களுக்கு கண்டிப்பாக எழும். ஆம், நாம் தயார் செய்யவுள்ள பூரிக்கு ஒரு சொட்டுகூட எண்ணெய் கூட தேவையில்லை. சரி எண்ணெய் இல்லாத பூரி தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள் மற்றும் செய்முறையை இங்கு பாப்போம். 

தேவையான பொருட்கள் 

கோதுமை மாவு அல்லது  ராகி மாவு அல்லது கம்பு மாவு அல்லது சத்துமாவு (இவற்றில் ஏதேனும் ஒன்று) – 150 கிராம்

காய்கறிச் சாறு அல்லது கீரைச் சாறு அல்லது மூலிகைச் சாறு (இவற்றில் ஏதேனும் ஒன்று) – 50 கிராம் இந்துப்பு அல்லது கறுப்பு உப்பு அல்லது எலுமிச்சைச் சாறு அல்லது  நெல்லிப்பொடி (இவற்றில் ஏதேனும் ஒன்று) – தேவையான அளவு

தேங்காய்த் துருவல் – அரை மூடி அல்லது முளைதானியப் பால் – தேவையான அளவு. 

உலர் பழங்கள் அல்லது கரும்பு வெல்லத்தூள் அல்லது பனை வெல்லத்தூள் அல்லது தேன் அல்லது பேரீச்சை துண்டுகள் (இவற்றில் ஏதேனும் ஒன்று) – 100 முதல் 150 கிராம் வரை (அல்லது)  

கூட்டு அல்லது பொரியல் அல்லது சட்னி வகை அல்லது தக்காளி குருமா ( இவற்றில் ஏதேனும் ஒன்று) – 200 கிராம்

5 லிட்டர் கடாய் அல்லது அகன்ற பாத்திரம் – 1

ஜல்லிக்கரண்டி அல்லது கண் கரண்டி – 1

மாவு பிசைவது எப்படி 

பூரிக்கு மாவு பிசையும்போது நாம் பெருபாலும் சமையல் எண்ணெய் அல்லது மைதா மாவு போட்டு தயார் செய்வோம். அவற்றுக்குப் பதிலாக இங்கு நாம் காய்கறிச்சாறுகளை பயன்படுத்தி பிசைய உள்ளோம். இவற்றோடு சிறிதளவு கெட்டித் தேங்காய்ப் பால் அல்லது முளைதானியப் பாலைவிட்டு பிசைந்துகொள்ளலாம்.  

உப்பு சுவைக்கு கடல் உப்புக்குப் பதிலாக இந்துப்பு அல்லது கறுப்பு உப்பு அல்லது எலுமிச்சைச் சாறு அல்லது நெல்லிப்பொடி இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக்கொள்வதால் சோடியத்துக்குப் பதிலாக பொட்டாசியம் கிடைக்கும்.

இப்போது பிசைந்த மாவை பூரிக்கட்டையில் வட்டமாகத் தேய்க்கவேண்டும். இவற்றுடன் மைதா மாவு சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. 

நீங்கள் செய்ய வேண்டியவை 

பூரி பொரித்து எடுக்க பெரும்பாலும் நாம் கொதிநிலையில் இருக்கும் எண்ணெயை தான் பயன்படுத்துவோம். ஆனால் இங்கு எண்ணெய்க்குப் பதிலாக நாம் தண்ணீரை பயன்படுத்த உள்ளோம்.

ஒரு அகன்ற பாத்திரம் எடுத்து அவற்றில் முக்கால் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது கரண்டியில் உருட்டித் தேய்த்த மாவை வைத்து கொதிநீரில் கரண்டியுடன் இறக்கி இரண்டு நிமிடம் நீரில் வேகவைத்து அப்படியே, கரண்டியுடன் வெளியே எடுத்துவிடவும். 

பின் குறிப்பு

தண்ணீர் கொதிநிலையில் இருக்கும்போது மட்டுமே மாவு வேகும். அதாவது பூரிப் பதத்துக்கு வரும். கேரட் சாறு, தக்காளிச் சாறு ஆகியவற்றில் செய்தால் மாவு சிவப்பாகவும், கீரைச் சாற்றில் செய்தால் மாவு பச்சையாகவும் இருக்கும். தேங்காய்த் துருவலை சமைக்காமல் பயன்படுத்துவதால், கொலஸ்ட்ரால் தொல்லை இருக்காது. 

இப்படி தண்ணீரில் வேக வைத்த பூரியை தக்காளி தொக்கு, அல்லது சட்னி போன்றவற்றோடு சேர்த்து சாப்பிடலாம். அல்லது உலர்ந்த  பழங்கள், பனை வெல்லத்தூள், கரும்பு வெல்லத்தூள், பேரீச்சை மற்றும் தேன் ஆகியவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம். 

பூரி சாப்பிட்டால் சர்க்கரை, கொழுப்பு ,பிபி அதிகரிக்கும் என்கிறார்கள் அதற்கு காரணம் அது எண்ணெயில் சுட படுவதால். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் இனிமேல் சும்மா விடமாட்டார்கள்....!