முதுகுளத்தூரில் ராஜகண்ணப்பன் தேறுவாரா.....?
1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சியில் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்தவர் ராஜ கண்ணப்பன். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பன் அந்த மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களிலும் அதிமுகவிவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்தார். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜ கண்ணப்பன், 2001-ல் மக்கள் தமிழ் தேசம் எனும் ஒரு கட்சியை துவக்கி, திமுக கூட்டணியில், இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். 'யாதவர்கள் கட்சி' என்கிற ஜாதி முத்திரை குத்தப்பட்டதால் அவரால் தொடர்ந்து அந்தக் கட்சியை நடத்த முடியவில்லை. பின்னர் 2001-ல் திமுகவில் இணைந்து, இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2009 ல் மீண்டும் அதிமுகவுக்குத் தாவினார்.
2011 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்தாலும், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட கண்ணப்பன் தோல்வியையே தழுவினார்.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் போட்டியிட சீட் கிடைக்காத ஏமாற்றத்தில் மீண்டும் திமுகவுக்குத் தாவினார். யாதவர் சமுதாயத்தில் செல்வாக்குடன் திகழ்வதால், திமுகவும் அவரை அரவணைத்துக் கொண்டது. மேலும் அவர் கேட்டபடியே முதுகளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் வழங்கியது.
இத்தொகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பாண்டி, 94,946 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி 81,598 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தேர்தலில். ராஜ கண்ணப்பனை எதிர்த்து அதிமுக சார்பில் மீண்டும் கீர்த்திகா முனியசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் சரவணக்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் நவபன்னீர் செல்வம் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
காங்கிரஸ் இந்த தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. அந்தக் கட்சி திமுக கூட்டணியில் உள்ள நிலையில், யாதவர் மற்றும் பட்டியலினத்து மக்கள் கணிசமாக இருக்கும் தொகுதி என்பதால், வாக்குப்பதிவுக்கு முன்பே கண்ணப்பனின் வெற்றி உறுதி என்றே அவரது ஆதரவாளர்கள் சொல்லி வந்தனர். மேலும் திமுக ஆட்சி அமைத்தால் கண்ணப்பன் அமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது அது நடப்பதாக தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மையம் பிரிக்கின்ற வாக்குகள் கீர்த்திகா வெற்றிபெறச் செய்துவிடும்.
அவர் அடிக்கடி தன் சுயநலத்திற்காக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வருவதால் யாதவ சமுதாயத்தில் கூட அவருக்கான நல்ல பேரை நிறையவே டேமேஜ் செய்துள்ளது எனவே அவர் பாடு திண்டாட்டம் தான்.