கோவில் முன்பே தாலி கட்டிய ஜோடி..... கோவில்களில் திருமணத்தை நடத்த முடியாமல் திணறல் -
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வது மணமக்கள் வாழ்கையை மிகவும் இனிமையாக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இதனால் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மிகவும் வசதிபடைத்தவர்களும் கோவிலில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு விருந்து உள்ளிட்ட நிகழ்வுகளை திருமண மண்டபத்தில் நடத்துவார்கள்.சில சுபமுகூர்த்த நாட்களில் 100 திருமணங்கள் வரை நடைபெறும்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பது பற்றி அறியாமல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று திருமணத்தை நடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பே 12 குடும்பத்தினர் பதிவு செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்றே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட சில திருமண கோஷ்டியினர் இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிவரையிலான உள்பட 3 முகூர்த்த நேரத்தில், திருமணத்தை நடத்துவதற்காக கோவில் முன்பு திரண்டனர்.
இன்று முழு ஊரடங்கு என்பதாலும் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதாலும் கோவிலுக்குள் ஒரு திருமணம் முடிந்த பின்னரே, அடுத்த திருமண கோஷ்டியை அனுமதிக்க முடியும் என்று கோவில் ஊழியர்கள் உறுதிபட கூறிவிட்டனர்.
இதனால் குறிப்பிட்ட முகூர்த்த நேரம் முடிந்து விடும் என திருமண கோஷ்டியினர் தெரிவித்து தங்களை கோவிலுக்குள் அனுமதிக்கும்படி வற்புறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஒரு ஜோடி முகூர்த்த நேரம் முடித்துவிட கூடாது என்று தங்களின் திருமணத்தை உற்றார் உறவினர் முன்னிலையில் கோவிலுக்கு முன்பே நடத்தி கொண்டனர். இதனால் பிரச்சினை எதுவும் இல்லாமல் திருமணங்கள் நடந்தேறின.
மணமக்களின் உறவினர்கள் ஊரடங்கு காலத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு திருமணம் செய்ய முடிந்ததே என்று மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.