இன்னைக்கு என்ன ரில் விடப் போகிறார்களோ ......?
தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்க போகிறார்கள்? என்பதும் மக்கள் யாருக்கு சாதகமாக அதிகமாக ஓட்டுக்களை போட்டுள்ளனர் என்பதும் இன்று நமக்கு ஓரளவு தெரிய வாய்ப்புள்ளது.. காரணம், எக்ஸிட் போல்கள் இன்று மாலை வெளியாக கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
வழக்கமாக தேர்தல்களில் "கருத்து கணிப்புகள்" ஒரு முக்கிய இடத்தை வலுவாக பெற்று விடுகின்றன.. இந்த கணிப்புகள் அரசியல் களத்தையே சில சமயங்களில் ஆட்டி படைத்தும் விடுகின்றன..
அந்த வகையில், தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளும் சரி, மற்றொன்று, வாக்கு பதிவுக்கு பிந்தையை கணிப்புகளும் சரி தவிர்க்க முடியாததாகி விட்டன.
தேர்தல் களத்தில் நிலவரம் எப்படி இருக்கிறது.. யாருக்கு சாதகமாக இருக்கிறது, எந்த கட்சிக்கு வாய்ப்பு அதிகம் என்பதையே வலியுறுத்துவது தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் ஆகும்.. ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாரும் ஓட்டுப்போட்ட பிறகு வெளியிடப்படுவதுதான் பிந்தைய கருத்துக் கணிப்புஆகும்... இதுதான் எக்ஸிட் போல்.
குறிப்பாக, எந்த கட்சி ஆட்சியமைக்க போகிறது என்பது இதில் ஓரளவு தெரியும்.. வாக்குப்பதிவு அன்று, ஓட்டுப்போட்டு விட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்கப்படும்.. அதை வைத்துதான், இத்தகைய முடிவுகள் வெளியாகும்... இதை பல நிறுவனங்கள் பிரதான வேலையாகவே எடுத்து செய்து வருகின்றன.
எனினும், இந்த எக்ஸிட் போல்கள், பலமுறை விவாதத்திற்கும், சலசலப்புக்கும் உள்ளாகி இருக்கின்றன. இதற்கு காரணம், இந்த எக்ஸிட் போல்கள் எல்லாம் ஒருதலைப்பட்சமாகவே இருப்பதாகவும், போட்டியாளர்களுக்கு எதிராக வேண்டுமென்றே தவறான கணிப்புகளை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இந்தியாவில் இருந்து உள்ளன.. அதற்கேற்றார்போல், எக்ஸிட் போல்கள் சொல்வதில், பலமுறை மாறுபட்ட தேர்தல் முடிவுகளும் நமக்கு கிடைத்துள்ளன.
ஆனால், எத்தனைதான் விமர்சனங்கள் வந்தாலும், எக்ஸிட் போல்களுக்கான முடிவுகளை தெரிந்து கொள்வதில் வாக்காளர்கள் ஆர்வம் காட்டிதான் வருகிறார்கள்.. அந்த வகையில் இந்த முறையும் ஆர்வம் பெருகி உள்ளது.. வாக்குப்பதிவு தினத்தன்று பல நிறுவனங்கள், டிவி சேனல்கள் இத்தகைய எக்ஸிட் போல்களை நடத்தி முடித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் கையை கட்டிப்போட்டுவிட்டதால்,எதையும் வெளியிட முடியாத நிலைமை உள்ளது.
காரணம், மேற்கு வங்காளத்தில் இன்றுதான், அதாவது 29-ம் தேதிதான் கடைசி கட்ட தேர்தல் முடிகிறது.. அதனால், நாளை இரவு 7 மணி முதல் 7.30 வரை எக்சிட் போல் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது... எனவே, 7.30 மணிக்கு பின்னரே, தமிழகம் உள்பட 5 மாநிலத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவானது மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டிருந்தது. எனவே, இன்று, மார்ச் 29ம் தேதி இரவு 7.30 மணிக்கு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. எக்ஸிட் போல் என்பது ஒரு குத்துமதிப்பான கணிப்பு என்றாலும், 5 மாநிலங்களில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்று ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்.. அவ்வளவுதான்.. மற்றபடி, மக்கள் "தீர்க்கமாக" எழுதி வைத்த முடிவை எந்த கணிப்புகளாலும் உடைக்க முடியாது..!