ஜாதி வாக்குகள் கைகொடுக்கவில்லை...... .துரைமுருகனை காப்பாற்றிய தபால் வாக்குகள்.....!

ஜாதி வாக்குகள் கைகொடுக்கவில்லை...... .துரைமுருகனை காப்பாற்றிய தபால் வாக்குகள்.....!

 காலம் காலமாக நம்பிக் கிடந்த சாதி ஓட்டுக்கள் கூட துரைமுருகனுக்கு கை கொடுக்காமல் போய்விட்டது என்றே தெரிகிறது.. இல்லாவிட்டால், திமுகவின் மிக மூத்த தலைவர், இப்படி சிலநூறு வித்தியாசத்தில் வெற்றி பெறும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்.

தொடர்ந்து 13-வது முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்... எப்படியும் கட்டாயம் வெற்றி பெறுவார் என்றுதான் திமுக தரப்பில் பலமான நம்பிகை வைத்திருந்தனர்.

அதேபோல நேற்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே துரைமுருகன் பின்னடைவை சந்தித்தார்...அந்த தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமு தொடர்ந்து முன்னிலை வகித்தார்.. நடுநடுவே துரைமுருகன் முன்னிலை பெற்றாலும் அது அதிக நேரம் நீடிக்கவில்லை..

9-வது சுற்று வரும்போது, துரைமுருகன், அதிமுக வேட்பாளர் ராமுவை விட 57 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். அதேபோல, 18-வது சுற்றிலும் துரைமுருகன் முன்னிலை வகித்தார். எப்போதெல்லாம் துரைமுருகன் முன்னிலை என்று வருகிறதோ அப்போதெல்லாம் ஓட்டு எண்ணிக்கையின்போது பரபரப்பு ஏற்பட்டது..

ஓட்டு மெஷின்

ஒருவழியாக இரவு தபால் ஓட்டு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. அதில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 1,778 வாக்குகள் பெற்றிருந்தார். ராமு 608 வாக்குகள் பெற்றிருந்தார்... இப்படி திடீரென நிலைமை தலைகீழானது.. இப்படிப்பட்ட சமயத்தில்தான் ஓட்டு மெஷினில் ரிப்பேர் ஆகிவிட்டது.. அதனால், அவை சரிசெய்யப்பட்டு மீண்டும் எண்ணப்பட்டன. இறுதியில், துரைமுருகன் 85 ஆயிரத்து 140 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராமு 84,394 வாக்குகளும் பெற்றனர்...


     
பீதி

அப்போதுதான் திமுக தரப்புக்கு நிம்மதி ஏற்பட்டது.. அதுவரை ஒருபீதியிலேயே இருந்தனர்.. ஆனால், துரைமுருகன் பலமாக நம்பிய சாதி ஓட்டுக்கள் பெரிதும் கைகொடுக்கவில்லை என்றே தெரிகிறது.. இவ்வளவு காலம், வன்னியர்களும், முதலியார்களும் எப்படி திரண்டு வந்து ஓட்டு போட்டார்களோ, இந்த முறையும் அப்படியே ஓட்டு போடுவார்கள் என்று எதிர்பார்த்தார். மொத்தமும் சொதப்பலாகி விட்டது...!

எனினும் துரைமுருகனுக்கு இதெல்லாம் தேவையா? கருணாநிதியை தவிர்த்துவிட்டு தமிழக அரசியலை எப்படி எழுத முடியாதோ, அதுபோல திமுகவின் வரலாற்றை துரைமுருகனை தவிர்த்துவிட்டு எழுத முடியாது... எத்தனையோ தருணங்களில் துரைமுருகனின் பணி கருணாநிதிக்கு பலமாக இருந்திருக்கிறது... பல்வேறு தருணங்களில் "துரை.. துரை".. என்று கூப்பிட்டு கருத்து கேட்கும் அளவுக்கு கருணாநிதியின் இதயத்தில் குடிபுகுந்தவர்.

துரைமுருகன்

"நான் கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டவன். ஆனால், என்னை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்" என்று கருணாநிதியை வைத்துக்கொண்டே மேடையில் சொல்லும் தைரியம் துரைமுருகனுக்கு மட்டுமே உண்டு. அந்த அளவுக்கு துணிச்சல் நிறைந்த துரைமுருகன், சாதி ஓட்டுக்களை மட்டுமே நம்பினாரா? என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

சலிப்பு

கால் நூற்றாண்டு காலம் காட்பாடியை கைப்பிடியில் வைத்திருந்தவர், இப்படி போராடி ஜெயிச்சது மிகப் பெரிய அதிர்ச்சிதான். திமுக சார்பில் இவர் மட்டுமே போட்டியிட்டு வென்றுள்ளார்... இவருக்கு முன்பு 67 தேர்தலில் ஜி. நடராஜன் என்பவர் திமுக சார்பில் வென்றார். அதன் பிறகு இவர் மட்டுமே அங்கு திமுக எம்எல்ஏ. 96 முதல் இவரிடம்தான் இருக்கிறது தொகுதி..

நலத்திட்டம்

அப்படியானால் தொகுதிக்கு இவர் எதுவுமே செய்யவில்லையா? அல்லது நலத்திட்டங்களைவிட அதிருப்திகளை மக்களிடம் ஏராளமாக பெற்றவிட்டாரா? அல்லது "83 வயசுல இந்த ஆசை தேவையா? 13வது முறையா மறுபடியும் போட்டியிடணுமா? இளைஞர்கள் எல்லாம் திமுகவில் இப்படியே அடிமட்டத்தில் இருப்பதுதானா" என்று 213 பேர் அறிவாலயத்துக்கு லெட்டர் எழுதியதன் தாக்கமா? அல்லது காட்பாடியில் ஏற்கனவே 12 முறை வெற்றி பெற்று பதவியில் இருந்துவிட்டதால், ஒருவித சலிப்பு தொகுதி மக்களிடம் ஏற்பட்டுவிட்டதா? அல்லது அமைச்சர் கேசி வீரமணியுடனான நெருக்கத்தினால் மக்கள் ஏதாவது கணக்கு போட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை? எதுவுமே விளங்கவில்லை.

ஆனால், பொதுப்பணித்துறை என்றாலே துரைமுருகன் என்று சொல்லுமளவுக்கு, அனைத்து தகவல்களையும் தன் விரல் நுனியில் அடக்கி வைத்திருக்கும் துரைமுருகனுக்கு இன்று கிடைத்துள்ளதை "வெற்றி" என்றே சொல்லலாகாது..!