அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
தமிழகத்திலுள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 58,897. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும், 9,392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 5,788 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் உள்ளன.
அரசுப் பள்ளிகளை பொருத்த வரை 24,310 தொடக்கப் பள்ளிகள்; 7,024 நடுநிலைப் பள்ளிகள்; 3,135 உயர்நிலைப் பள்ளிகள்; 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ளன.
தனியார்ப் பள்ளிகளைப் பொருத்த வரை தொடக்கப் பள்ளிகள் 5089, நடுநிலைப் பள்ளிகள் 763, உயர்நிலைப் பள்ளிகள் 2046, மேல்நிலைப் பள்ளிகள் 3764 உட்பட மொத்தம் 12,382 பள்ளிகள் உள்ளன.
அரசு உதவிப் பெறும் பள்ளிகளைப் பொருத்த வரை தொடக்கப் பள்ளிகள் 5021, நடுநிலைப் பள்ளிகள் 1508, உயர்நிலைப் பள்ளிகள் 589, மேல்நிலைப் பள்ளிகள் 1210 உட்பட மொத்தம் 8328 பள்ளிகள் உள்ளன.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் உள்ள 5.6 லட்சம் ஆசிரியர்களில், 2.27 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளிலும், 77 ஆயிரம் பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், 2.53 லட்சம் பேர் தனியார்ப் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
மொத்தம் 37,579 அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இது தான் அரசுப் பள்ளிகளின் நிலைமை.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 45,93,422 பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,25,308 பேரும், தனியார்ப் பள்ளிகளில் 64,15,398 பேரும், மற்ற பள்ளிகளில் 83,755 மாணவ, மாணவிகளும் உள்ளனர்.
மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ள அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவ, மாணவிகள் தான் படிக்கின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவ, மாணவிகள் தான் படிக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் தனியார் பள்ளிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், தமிழகத்தில் 2,391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அரசின் கணக்கின்படியே பள்ளிகளின் நிலைமை இவ்வளவு மோசம் என்றால், உண்மை நிலவரம் இதைவிட மோசமாக இருக்கும். பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் படி, 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிவறையும், 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிவறையும் இருக்க வேண்டும். இந்த அரசாணைகள் எல்லாம் காகிதத்தில்தான் உள்ளது. நடைமுறையில் எந்த பள்ளிக் கூடத்திலும் அமலாக்கத்திற்கு செல்லவில்லை.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்கு செல்வது குறைவதன் மூலம், தமிழ்நாட்டின் இடைநிற்றல் விகிதமும் அதிகரிக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அதாவது, 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. இவர்கள் 9,10-ம் வகுப்போடு தங்களின் பள்ளிக் கனவையே இழக்கின்றனர். 2019-20-ல் தமிழ்நாட்டின் மொத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.6 % ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 16% ஆக உள்ளது. இப்படி பல மாணவ, மாணவியர் இடைநிற்றலுக்கு உள்ளாவதால், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருகிறது.
இந்தளவுக்கு இடைநிற்றல் மாணவ மாணவியர் அதிகரிப்பதன் பின்னணியில் வேலைவாய்ப்பின்மையால் குடும்பத்தில் நிலவும் வறுமை உட்பட வெவ்வேறு குடும்ப சூழ்நிலை போன்றவை உள்ளது. 10-ம் வகுப்பு முடித்தவுடன் பலர் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளராக சென்று விடுகின்றனர்.
தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி சம்மந்தமான சில விவரங்கள் பின்வருமாறு :
பள்ளிக் கல்விக்கு மொத்தமாக ரூ.32,599.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக் கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் 13.22 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.
2025-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் எண்ணும் எழுத்தும் இயக்கம் ரூ.66.70 கோடி மதீப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ.114.18 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.20.76 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும்.
மேலே கூறியவைகளில் இருந்து பார்க்கும் போது, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான கழிவறை, குடிநீர், காற்றோட்டமான அறைகளை ஏற்படுத்துவது மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமிப்பதுதான் தற்போது உள்ள அவசியமான மற்றும் அத்தியவசியமான தேவை. அதைப் பற்றி எல்லாம் இந்த பட்ஜெட் கவலைப்படவில்லை. இடைக்காலப் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.34,161 கோடி தற்போது இந்த பட்ஜெட்டில் ரூ.32,599 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 37,579 பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வருடந்தோறும் ஒரு பள்ளிக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.3,758 கோடி ஒதுக்கினாலே போதும், 5 வருடத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசுப் பள்ளிகளிலும் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்ட சிந்தனை முறையும் இந்த அரசுக்கு கிடையாது.
அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுவது எல்லாம் வெற்று வாய்ச்சவடால்தான்.
இப்படிப்பட்ட நிலைமைகளில் அரசுப் பள்ளிகளில் கல்வி சொல்லிக் கொடுப்பதை சேவையாக கருதும் சமூக அக்கறை உள்ள ஆசிரியர்களால்தான், சில பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அரசின் உதவி இல்லாமல் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனால், அனைவருக்கும் தரமான, இலவசமான, விஞ்ஞானப்பூர்வமான கல்வி கொடுக்க வேண்டிய அரசானது அக்கடமையிலிருந்து விலகி நிற்கிறது. இதை என்றைக்கு அரசும் அரசு பள்ளி ஆசிரியர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும் அப்போது அரசு பள்ளிகளின் தரம் உயரும்.
தற்போது அரசு பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் என்று காட்டுகின்ற தோரணை எல்லாம் பொய் தோற்றம்தான். பள்ளிகள் முழுமையாக திறந்தால் தான் யார் எங்கு இருக்கிறார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியும். அதுவரை வீண் ஜம்பம் வேண்டுமானால் விட்டுக் கொள்ளலாம்.