முதல்வர் ஸ்டாலினை ஓரம் கட்டும் திமுக எம்எல்ஏக்கள்; அடுத்த தலைவர் உதயநிதி...?!

முதல்வர் ஸ்டாலினை ஓரம் கட்டும் திமுக எம்எல்ஏக்கள்; அடுத்த தலைவர் உதயநிதி...?!

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் இடைவெளி இல்லாமல் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

திமுக ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏவும் தங்களது தொகுதியின் தேவைகள் குறித்து பேசி வருகிறார்கள். அப்போது பேசத் தொடங்கும்போது உதயநிதி ஸ்டாலினை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து வருகிறார்கள்.

பால்வளத் துறை அமைச்சர் நாசர் சட்டப்பேரவையில் பேசும்பொழுது சேப்பாக்கத்தில் தோனியை மிஞ்சியவர் உதயநிதி ஸ்டாலின் என்று பேசினார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில் ஒற்றை செங்கலை வைத்து செங்கோட்டையை அதிர செய்தவர் உதயநிதி என்று பாராட்டி பேசினார்.

விட்டுவசதி வாரிய அமைச்சர் முத்துசாமி பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார்” என்று பேசினார். இதேபோல கடந்த கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எவ வேலு, “அண்ணா கலைஞர் வழியில் திராவிட கருத்துகளை திரைப்படங்களில் எடுத்துக் கூறியவர் உதயநிதி” என்றார்.

இதனைத் தொடர்ந்து  சட்டப்பேரவையில் பேசிய காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ எழிலரசன், “திமுகவின் அடுத்த தலைவர் முக ஸ்டாலின்” என்று தனது பேச்சை தொடங்கினார். திமுக தலைவராக முதல்வர் முக ஸ்டாலின் இருக்கும்போதே இப்படி பேசுகிறாரே என்று சலசலப்பு ஏற்பட்டாலும் பலர் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.


வெளிப்படையாக சட்டமன்றத்திற்குள் இப்படி என்றால் உள்ளுக்குள் ஆயிரம் கூத்துக்கள் நடக்கின்றது திமுகவில்.  உடன்பிறப்புகளின் சட்டைப்பையில் அண்ணா, கலைஞர், மு க ஸ்டாலின்  ஆகியோர்களின் புகைப்படங்கள் மட்டுமே இருந்த காலம் மாறி உதயநிதியின் படம் இருந்தால் தான் இனி கட்சிகுள் வாழ்க்கை நடத்த முடியும்  என்கிற நிலை  ஏற்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ளார்களாம்  மூத்த உடன்பிறப்புக்கள்.