ஓடும் பேருந்தில் பீர் குடித்த அரசுப் பள்ளி மாணவிகள்: கொதிக்கும் தமிழகம்...?!
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான மாணவ மாணவிகள் பயன்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தினமும் பேருந்துகளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவிகள், பேருந்தில் பயணிக்கும் போதே, பேருந்துக்குள் மது அருந்தி அட்டகாசம் செய்தபடி சென்றுள்ளனர். இதனை அப்பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும், இவர்களின் இந்த வரம்பு மீறிய செயலை பேருந்தில் பயணித்த ஒருவர் தனது கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
மேலும், மாணவர்களின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “நேற்று பார்த்து அதிர்ந்த செய்தி. செங்கல்பட்டு மாவட்டத்தில் பீர் குடித்துக் கொண்டே மாணவ மாணவிகள் அரசு பேருந்தில் பயணம் செய்கிறார்கள். அரசே மதுக்கடைகளை நடத்துவதால் மாணவ மாணவிகள் அரசிற்கு வருவாய் ஏற்படுத்துகிறார்கள் என்று நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டுமா?. பெற்றவர்கள் வயிறு எரிகிறது.
ரூ 40,500 கோடி வருமானம் ஈட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடும் அரசிற்கு டாஸ்மாக் வருமானம் அதிகமாவது மகிழ்ச்சியான செய்தியே.
அதிமுக ஆட்சியின் போது மது விலக்கு அமல்படுத்தபட்டால் தாங்கள் நடத்தும் மது ஆலைகளை மூடத் தயார் என்று பேசினார் கனிமொழி. தற்போது தங்களது ஆட்சி நடக்கிறது. ஆனால், நீங்கள் மது குறித்து வாயே திறக்காமல் மௌனம் காத்து வருகிறீர்கள். இப்படி ஒரு அரசியல் தேவையா? முதல்வர் ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து போராடினார். உங்கள் பேச்சு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்கானது மட்டுமே தவிர உண்மையானது அல்ல.
அரசு நடத்தும் போதை மறுவாழ்வு மையங்கள் மூன்று மட்டுமே. ஆனால் டாஸ்மாக் கடைகள் 5300க்கும் அதிகம். மக்களின் கல்லீரலை அழுக வைத்து கஜானாவை நிரப்ப வேண்டுமா? வேதனை.
வைரல் வீடியோவை பார்த்தால் மாணவர்களை உடனே அழைத்து பாராட்டும் முதல்வர், பேருந்தில் பீர் குடித்து கொண்டே பயணம் செய்த மாணவ மாணவியர்களை அழைத்து அறிவுரை கூறப் போகிறீர்களா? அல்லது அரசிற்கு வருவாயை பெருக்குகிறீர்கள் என்று பாராட்ட போகிறீர்களா?
21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதி கூட செயல்படுத்தப்படுவதில்லை. மாறவேண்டியது மக்கள் தான். நம் அடுத்த தலைமுறையை காக்க நாம் எல்லோரும் சிந்திக்க தொடங்க வேண்டும். அதேசமயம், பள்ளிச் சீருடையிலோ, 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களோ மது வாங்க வந்தால், அவர்களுக்கு மது விற்கும் மதுக் கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.