எமிஸ்' மூலம் ஆசிரியர்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களை தடுத்து நிறுத்த ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள்...!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 12-03-2022
'எமிஸ்' என்னும் கல்வி மேலாண்மைத் தகவல் மையம் மூலம் ஆசிரியர்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களை தடுத்து நிறுத்த தி.மு.க. அரசை வலியுறுத்தல்
ஆசிரியர் தொழில் என்பது அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அற்புதமான தொழில். 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற நோக்கத்தின் அடிப்படையில் எதிர்கால குடிமக்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியருக்கு தரமான கல்வியை அளிக்கும் தன்னலமற்ற பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் வேலைப்பளு காரணமாக கல்வி போதிக்க முடியாத நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும், 'ஆணுக்குப் பெண் இளைத்தவரில்லை' என்பதற்கேற்ப, கல்வியில் பீடுநடை போட்டு வரும் பெண் குழந்தைகள் தற்போது தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
பள்ளிக் கல்வித் துறையில் தினம் ஓர் உத்தரவு என்று மாறி, மாறி வரும் உத்தரவுகளால் ஆசிரியர்கள் பெருத்த இன்னல்களுக்கு ஆளாவதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வி மேலாண்மைத் தகவல் மையம் எமிஸ் எனப்படும் பதிவு முறை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், இதில் மாணவ, மாணவியரின் பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், ஆசிரியர்கள் வருகைப்பதிவும் இதன்மூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது மாணவ, மாணவியரின் வருகைப் பதிவினையும் 'எமிஸ்' மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், இந்த உத்தரவின் காரணமாக ஆசிரியர்களின் முக்கியமான பணியான கல்விப் பணியை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மாணவ, மாணவியரின் வருகைப் பதிவினை பதிவு செய்யவே பாதி நாள் போய்விடுகிறது என்றும், மீதி இருக்கின்ற பாதி நாளில் என்ன செய்வது என்று புரியாமல் ஆசிரியர்கள் திகைத்துக் கொண்டிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. கல்விப் பணியைத் தவிர பிற பணிகளை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களுக்கு அவற்றைச் செய்வதற்குரிய நேரம் இருக்கிறதா என்பதை அறிந்து அதற்கேற்ப அரசு செயல்பட வேண்டுமென்றும், இதுபோன்ற தொடர் பணியை மேற்கொள்ள தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல், மாணவ, மாணவியரின் உணவு விவரங்கள், சுகா££ரத் தகவல்கள், பெண் குழந்தைகளின் இயற்கை சார்ந்த விவரங்களை எல்லாம் 'எமிஸ்' மூலம் பதிவு செய்யச் சொல்லுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெண் குழந்தைகள் தங்களின் இயற்கை சார்ந்த விவரங்களை தங்கள் தாயிடமோ அல்லது பெண் மருத்துவரிடமோ சொல்வார்களே தவிர, ஆசிரியர்களிடம் சொல்லத் தயங்குவார்கள். இதுகுறித்து ஆசிரியர்கள், குறிப்பாக ஆண் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளிடம் விவரங்களை கேட்பது என்பதோ அல்லது அவர்களிடம் பெண் குழந்தைகள் சொல்வது என்பதோ ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. இந்த விவரங்களை மாணவர்கள் அறிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இன்னும் சொல்லப் போனால், சக மாணவிகளே இதுபோன்ற விவரங்களை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். இந்த உத்தரவு மாணவியரிடையேயும், ஆசிரியர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் இயற்கை தொடர்பான கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பரவலாக நிலவுகிறது.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தொடர்புடையோரை அழைத்துப் பேசி பெண் குழந்தைகளின் இயற்கை சார்ந்த விவரங்கள் கேட்கப்படுவதைத் தவிர்க்கவும், மாணவ, மாணவியருக்கு கல்வி போதிப்பதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்தும் வகையில் ஆசிரியர்களின் கூடுதல் சுமையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
ஓ. பன்னீர்செல்வம். கழக ஒருங்கிணைப்பாளர்,தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்