சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் இல்லை.. பாரபட்சம் காட்டவேண்டாம்”: காவல்துறைக்கு முதல்வர் போட்ட உத்தரவு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் நாள் கூட்டம், இன்று (10-3-2022) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முதலில், மாநாட்டிற்கு வருகை புரிந்தோரை தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய தலைமை உரை:- புதிய முதலீடுகள் வருவதற்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பதற்கும், அதன் வழியாக நாம் விரும்பும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கினை அடைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்யவும் சட்டம் ஒழுங்கு மிக மிக முக்கியமாகும்!
தமிழ்நாட்டில் எப்போதும் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும்! சட்டம் ஒழுங்கு விஷயத்திலே நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். அதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாயத்தில் அமைதி நிலவுவதை உறுதிசெய்திடக்கூடிய வகையில் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க நாம் அனுமதித்துவிடக் கூடாது.
எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்ற சமத்துவ சமூகமே – நமது அரசினுடைய குறிக்கோள்! கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற பொதுமக்களை பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்குவதில் காவல்துறை எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய சமூகவிரோத சக்திகளை கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் அமைதியில்தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.