ஆசிரியர்களுக்குத் தெரிந்ததைக் கொடுப்பதல்ல கல்வி. ,மாணவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பதே கல்வி..
தமிழக அரசுக்கு மனம் திறந்த மடல்* என்கிற தலைப்பில் சமூக வலைத்தளங்களை திணறடிக்கும் ஓர் ஆசிரியரின் கடிதம்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான சிகரம்சதிஷ் எனப்படும் சதிஷ்குமார் தமிழக அரசுக்கு இன்றைய கல்விநிலை குறித்து அனுப்பியிருக்கும் கடிதம் சமூக வலைத்தளங்களில்
ஆசிரியர்களாலும்,
கல்வியாளர்களாலும் பகிரப்பட்டு, வைரலாகி வருகின்றது.
அக்கடிதத்தின் சாராம்சம் இதுதான்.
ஒரு நாட்டின் கட்டமைப்பைச் சீர்குலைக்க வேண்டுமெனில்,
அந்த நாட்டின் கல்விமுறையின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என எங்கோ படித்த நினைவு இப்பொழுது எட்டிப்பார்க்கின்றது.
கொரோனா காலத்தில்
கற்றல் இடைவெளி என்பது மாணவருக்கும்,
கற்பித்தல் இடைவெளி என்பது ஆசிரியருக்கும் பெருமளவு ஏற்பட்டதன் பலனை நாம் இப்போது அறுவடை செய்துகொண்டிருக்கின்றோம்.
மாணவர்களது
உடல்வயது குறைவாக இருந்தாலும்,
மனவயதில் தேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.
காட்சி ஊடகங்களும் சரி,
சமூக ஊடகங்களும்
அவர்களுக்கு அத்தனையும் கற்றுக்கொடுத்திருக்கின்றன.
மாணவர்களைக் தண்டிக்கக்கூடாது என்னும் உத்தரவை ஆசிரியர்கள் கண்டிக்கவே கூடாது என்னும் மனநிலைக்கு மாணவர்கள் வந்திருக்கின்றனர்.
இன்றைக்கு
ஆசிரியருக்கு
ஆபாச செய்தி அனுப்பும் மாணவன்,
ஆசிரியரை அடிக்கத்துணியும் மாணவன்,
மதுகுடிக்கும் மாணவி,
போதையுடன் பள்ளிக்கு வரும் மாணவன்,
கத்தியுடன் பள்ளிக்கு வரும் மாணவன்,
பள்ளி வயதில் தன்னை இழக்கும் மாணவிகள் என இப்படியான நடத்தைக் கோளாறுகள் மாணவ,மாணவியரிடம் அதிகரித்து விட்டன.
என்ன செய்தாலும்
நம்மை யாரும் தண்டிக்க முடியாது என்னும் மனநிலைக்கு ஆட்பட்டுவிட்டனர் மாணவ,மாணவியர்.
இதற்குக் காரணம் தவறு செய்த மாணவர்கள் மீது,
நாம் இதுவரை
துறைரீதியாக பெரிய அளவில் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்யவில்லை என்பதை,
நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஆசிரியரைத் தாக்கிய மாணவனை மீண்டும் அதே பள்ளிக்கு அனுமதித்தால் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கும்? சக மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
நடத்தைக் கோளாறுகளுக்கு ஆட்பட்ட மாணவ,மாணவியரை இந்நேரம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
ஆசிரியர்களைக் கண்டு மாணவர்கள் பயந்த நிலை மாறி,
மாணவர்களைக் கண்டு ஆசிரியர்கள் பயப்பட வேண்டிய சூழலுக்கு நம் தமிழகப்பள்ளிகள் தள்ளப்பட்டு விடக்கூடாது. இனியும் தாமதித்தால் மேற்கத்திய நாடுகளைப் போல,
வகுப்பறை வன்முறைகள் அரங்கேறத் தொடங்கிவிடும்.
அரசுப் பள்ளி ,கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான நடத்தைவிதிகளை மட்டுமல்ல, மீறினால் அதற்கான தண்டனைகளையும் வரையறை செய்து உடனே அதற்கான அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு.அரசு முன்வர வேண்டும்.
முன்பெல்லாம்
10 பேர் தவறு செய்தவர்கள் என்றால் ,
அதில் 9 பேர் படிக்காதவர்களாக இருந்தனர்.
ஆனால்
இன்றைக்கு
10 பேர் தவறு செய்துள்ளார்கள் என்றால்,
அதில் 10 பேருமே படித்தவர்களாகவே இருக்கின்றனர் என்பது நாம் நம்முடைய கல்விமுறையின் மீது கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகின்றது.
மாணவ,மாணவியருக்கு அறிவைக் கொடுக்க பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால்
அறத்தைக் கற்பிக்க அறவே மறந்துவிட்டோம்.
மாணவர்களிடம்
அலைபேசிக்குத் தடைசொன்ன நாம்
இன்றைக்கு அலைபேசியை அத்தியாவசிய கற்றல் உபகரணமாக மாற்றி இருக்கின்றோம்.
நீதி போதனை வகுப்புகள் இன்றைக்கு பள்ளிகளில் அறவே இல்லை. மாணவர்களுக்கு அறம் என்றால் என்னவென்று தெரிவதற்கு வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.
விதிமுறைகளுக்குக் கட்டுப்படும் விளையாட்டு வகுப்புகள் இன்றைக்கு பாடவேளைப் பட்டியலில் மட்டுமோ,
அல்லது இன்னொரு பாடத்திற்கு தாரை வார்க்கபடும் பாடவேளையாக மட்டுமோ இருக்கின்றன.
உடலையும், மனதையும் ஒருநிலைப்படுத்தும் விளையாட்டுக்களுக்குப் பள்ளியில் விடுமுறை விட்டால்,
மாணவர்களுக்கு நல்லொழுக்க நெறிகள் எங்கிருந்து வரப்போகின்றது.
கற்றல் இணைச் செயல்பாடுகளான
ஓவியம், பாட்டு,தோட்டம் அமைத்தல் போன்றவற்றிற்கும் பாடவேளைகளில் இடமளிக்க வேண்டும்
Scout, JRC, NSS போன்றவற்றை மாணவர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சம் அதற்கென தனி மதிப்பெண்களையாவது அளித்து, அதற்கொரு முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்.
வெறுமனே சம்பிராதயத்திற்கான நடைமுறையாக இருந்தால்,
இங்கு எதையும் நகர்த்த முடியாது.பள்ளிகளில் வகுப்பறையைச் சுத்தம் செய்தல்,
வளாகத் தூய்மைப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுவதை என்றைக்கு இந்தச் சமூகம் தடுக்கத் தொடங்கியதோ, அதற்கான விலையை இன்று கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
மண்ணைக் கீறாமல்
விவசாயம் கிடையாது.
மனதைக் கீறாமல்
கல்வி கிடையாது.
ஆசிரியர்களின் பிரம்புகளுக்குத் தடைவிதித்தால்,
காவல்துறையின் லத்திகளுக்குப் பதில்கள் சொல்ல வேண்டியிருக்கும்.
ஆசிரியர்கள் முன்னால் கைகட்டுவதைத் தடுக்கப் பார்த்து,
குற்றவாளிக்கூண்டில் கைகளைக் கட்ட தயார்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.
பாடசாலைகளுக்கு கட்டுப்பாடுகளைப் போதித்து, சிறைச்சாலைகளின் கதவுகளைத் திறக்கத் தொடங்கியிருக்கின்றோம்.
நிறைவாக சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான்.
கல்விமுறை என்பது அறிவாளிகளை உருவாக்கவிட்டாலும் பரவாயில்லை.
ஒருபொழுதும் குற்றவாளிகளை உருவாக்குவதாக இருக்கக்கூடாது.
மாணவர்களின் எதிர்காலத்தின்மீது
உண்மையிலேயே நாம் அக்கறை கொள்கின்றோம் என்றால்,
நடத்தைவிதிகளை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கும் அறிவிப்பை வெளியிடுங்கள்.
மாணவர்களது தேர்ச்சியின் மீது கட்டுப்பாடுகளை விதியுங்கள்.
ஆசிரியர்களைக் குறைசொல்லி,
மாணவர்களது எதிர்காலத்தின்மீது மண் அள்ளிப்போடுவதை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்குத் தெரிந்ததைக் கொடுப்பதல்ல கல்வி,
மாணவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பதே கல்வி..