3 ஆயிரம் பள்ளிகளை மூடுவது நல்லது.....! பள்ளிக்கல்வித் துறைக்கு புதிய யோசனை....?!
சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் வளாகத்தில் நடைபெற்ற அந்த ஆசிரியர் சங்கங்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், 'தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
அதாவது 11 பள்ளிகளில் தலா ஒரே ஒரு மாணவரும், 24 பள்ளிகளில் தலா 2 மாணவர்களும், 41 பள்ளிகளில் தலா 3 மாணவர்களும், 50 பள்ளிகளில் தலா 4 மாணவர்களும், 77 பள்ளிகளில் தலா 5 மாணவர்களும், 114 பள்ளிகளில் தலா 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் தலா 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் தலா 8 மாணவர்களும், 153 பள்ளிகளில் தலா 9 மாணவர்களும், ஒரு மாணவர் கூட இல்லாமல் 22 பள்ளிகளும். இருக்கிறது.
இது 2021- 2022 ஆம் கல்வி ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கு. இந்த 2022 - 2023 ஆம் கல்வியாண்டு துவங்கும் போது இந்தப் பள்ளிகளில் மட்டுமல்ல இன்னும் இருக்கின்ற பள்ளிகளில் இவ்வளவு மாணவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.
ஏன் என்று சொன்னால் இந்த பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என்பதும் ஆசிரியர்கள் பற்றாக்குறையும் தான்.
அதுவும் வருகின்ற ஓர் ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வராத நிலைதான் நாள்தோறும் நீடித்து வருகின்றது. அதுவும் அந்த ஊரைச் சார்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமித்தால் அவர்களிடம் கேள்வி கேட்க முடியாத நிலை. எனவே அந்த கிராமத்தில் பள்ளி வயது குழந்தைகள் நிறைய பேர் இருந்தாலும் யாரும் அரசுப்பள்ளியில் சேர்க்க முன்வருவதில்லை.
அதனால் வரும் நாட்களில் இந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடுவது அரசுக்கும் மக்களுக்கும் நல்லது. ஏன் என்று சொன்னால் யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுவது என்கிற கணக்காக மாணவர்களே இல்லாமல் பள்ளியை எப்படி நடத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதை கணக்கில் கொண்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளிகளை எல்லாம் மூடுவது என்று மத்திய அரசும் மாநில அரசும் முடிவெடுத்து இருந்தது. அப்போது ஒரு சிலர் என் காமராஜர் திறந்த பள்ளியை, என் கருணாநிதி தொடங்கிய பள்ளியை எப்படி மூடலாம் என்று கூக்குரல் எழுப்பினார்கள். அதற்குள் Corona வந்தது அதனால் அந்த திட்டம் அப்படியே நின்றது. ஆனால் அதற்கான தேவை இப்போது எழுந்துள்ளது.
இந்த பள்ளிகளை நடத்துவதில் அரசுக்கு ஏராளமான சிக்கல்களும் பொருளாதார இழப்பும் உள்ளது. ஓராசிரியர் ஈராசிரியர் என்று வைத்துக் கொண்டால்கூட ஒரு பள்ளியை நடத்துவதற்கு வருடத்திற்கு பல லட்சங்கள் தேவைப்படுகிறது. மாணவர் எண்ணிக்கையும் இதையும் கணக்கிட்டு பார்த்தால் ஒரு மாணவனுக்கு ஒரு வருடம் கல்வி கற்பிக்க லட்சத்திற்கு மேல் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அவ்வளவு பணம் செலவழித்தாலும் தரமான கல்வி இவர்களுக்கு கிடைக்கிறதா என்று சொன்னால் நியமிக்ககின்ற ஆசிரியர்கள் ஒழுங்காக வந்து பணியாற்றுகின்றனரா என்று கேட்டால் அதற்கு சரியான பதிலையும் முறையான தீர்வையும் நம்மால் காண இயலாது.
எனவே இந்த சிக்கல்களை தீர்ப்பதற்கு எளிமையான வழி இருக்கின்றது. இந்த பள்ளிகளை எல்லாம் மூடி விட்டு இந்த மாணவர்களை தனியார் பள்ளிகள் வசம் ஒப்படைப்பது தரமான கல்விக்கு சிறப்பான வழியாக இருக்கும்.
இன்றைக்கு தொலைத்தொடர்பும், போக்குவரத்தும் வெகுவாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் சாலைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து கிராமங்களுக்கும் நல்ல தரமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வழித்தடங்களும் போக்குவரத்திற்கு எளிதாக அமைந்துள்ளது. அரசு பேருந்துகள் செல்லாத இடத்திற்கு எல்லாம் தனியார் பள்ளி பேருந்துகள் தாராளமாக சென்று வருகின்றது.
எனவே கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு யாருக்கும் எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் ஒற்றை இலக்கத்தில் மாணவர்களை வைத்துக்கொண்டு ஒரு பள்ளியை நடத்துவதற்கு லட்சக்கணக்கில் செலவழிப்பதை விட்டுவிட்டு ஒரு மாணவனுக்கு 10,000, 20,000 கொடுத்தால் போதும் நீங்கள் லட்சக்கணக்கில் செலவழித்து கிடைக்காத கல்வி செல்வத்தை குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி தர தனியார் பள்ளிகள் தயாராக உள்ளது.
எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தெளிவான ஒரு முடிவை எடுப்பது அவசியமாகும்.
எப்படி இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு வழங்கி அதற்கான கட்டணத்தை அரசு வழங்குவதை போன்று இது 20க்கு குறைவான மாணவர்களை வைத்துள்ள பள்ளிகளை எல்லாம் மூடி விட்டு அந்த மாணவர்களை தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மிச்சம் ஆவதோடு மட்டுமன்றி அந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும் வழி கிடைக்கும். தமிழக அரசு சிந்திக்குமா...?!