தி.மு.க.வினர் செய்யும் பொய் பித்தலாட்ட பிரச்சாரம்: பதிலடி தரும் பா.ஜ.க...!
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று சொல்லி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோபாலபுரம் வரை நடைப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்... அதற்கு கனிமொழி, முதலில் பாரத பிரதமர் தேர்தல் வாக்குறுதியாக தருவதாக சொன்ன 15 லட்சம் பணத்தை பாஜகவினர் முதலில் தரட்டும், அதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கிண்டலாக பதிலளித்திருந்தார்.
கனிமொழியின் இந்த பதிலை கண்டு, தமிழக பாஜக கொந்தளித்துள்ளது.. இந்த 15 லட்சம் சம்பந்தமாக, கடந்த 8 வருடங்களாகவே, மற்ற கட்சிகள் கேள்வி கேட்டு வருகின்றன.. நெட்டிசன்களும், அந்த 15 லட்சம் ரூபாய் என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக எத்தனையோ மீம்ஸ்களை இணையத்திலும் உலாவ விட்டு வருகின்றனர்.. சுவிஸ் வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு அதை ஏழை வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னீர்களே? அது என்னவாயிற்று? அந்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள்? என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும் பிரதமர் மோடி அப்படி எந்த இடத்திலும் சொல்லவே இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகின்றனர்... ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அந்த கேள்வியை கேட்டுக் கொண்டே வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் இது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம் என்று பிரதமர் சொன்னதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசியிருக்கிறார். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எடுத்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்த முடியும் என்றுதான் சொன்னார். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று அவர் சொல்லவில்லை.. இதை பெரியகருப்பன் நிரூபிக்கவில்லை என்றால் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் அவரது வீட்டின் முன்பாக நின்று போராடுவோம் என்று ஒருமுறை எச்.ராஜாவும் ஆவேசமாக கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் கனிமொழியே இதை பற்றி மீண்டும்பேச, பாஜக திடீரென கனிமொழி மீது கோபம் கொண்டுள்ளது. இதற்கு முதலில் எதிர்வினையாற்றியது, தமிழிசை சவுந்தராஜன்தான்.. 'இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவேன் என்று பிரதமர் மோடி சொன்னதாக கூறுபவர்கள், அதை நிரூபிக்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.. 'கருப்பு பணமும், வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் பணமும் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் போடக்கூடிய அளவுக்கானது என்று சொன்னாரே தவிர, வாக்குறுதியாக தரவில்லை' என்ற பிரச்சாரத்தை பாஜகவினர் தற்போது சோஷயல் மீடியாவில் பதிவு செய்து வருகிறார்கள்.