இளையராஜாவிற்கு எம்.பி. பதவி....?!
கடந்த 1975ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக தனது இசையால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் இசைஞானி இளையராஜா இந்த 2022ஆம் ஆண்டு சில தினங்களுக்கு முன்பு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாமனிதன், சிபி சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த மாயோன் உள்ளிட்ட திரைப்படங்கள் வரை இடைவிடாமல் இசை மழையில் நனைத்து வருகிறார்.
உலக இசை மேதைகளில் ஒருவராக திகழும் இசைஞானி இளையராஜா இந்திய திரையிசையின் ஜாம்பவானாக இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளிலும் பல்லாயிரம் பாடல்களை கொடுத்தவர். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுகளை பெற்ற இளையராஜா, 5 தேசிய விருதுகள், 5 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.
அந்தவகையில் இசைஞானிக்கு மற்றொரு மகுடமாக தற்போது மாநிலங்களவையின் உறுப்பினராக மத்திய அரசு இளையராஜாவை தேர்வு செய்துள்ளது. வழக்கமாக கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு சமுக சேவையில் சிறந்து விளங்கியவர்களுக்கு மாநிலங்களவையில் நியமனான எம்.பி., பதவி வழங்கி மத்திய அரசு தொடர்ந்து கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை ஆசிரியரும் இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் மற்றும் சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரையும் மக்களவையின் நியமன எம்.பி.,-களாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜா மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன