OPS இன் கீழ்த்தரமான செயல் - கே.பி.முனுசாமி காட்டம்!

 OPS இன் கீழ்த்தரமான  செயல் - கே.பி.முனுசாமி காட்டம்!

ஓ.பன்னீர்செல்வத்துடன் இத்தனை ஆண்டு காலம் இணைந்து பயணித்தது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

வெட்கம், வேதனை.. இந்த ஓபிஎஸ்ஸுடன் போய் இத்தனை வருசமா.. கீழ்த்தரமான செயல் - கே.பி.முனுசாமி காட்டம்!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனையே அம்பாக எய்து பேச வைக்கிறார் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கீழ்த்தரமான விமர்சனங்களைச் செய்ய ஊக்குவிக்கும் ஓபிஎஸ் மீது வருத்தமாக உள்ளது என ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல் தீவிரமடைந்து இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அதிமுகவின் ரகசியங்களை திமுகவினரிடம் கூறி வருகிறார் என்றும், அவர் திமுகவின் கைக்கூலியாகவே செயல்பட்டு வருகிறார் என்றும், முனுசாமியின் மகன் சதீஷுக்கு கிருஷ்ணகிரியில் பால்வளத் துறைக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு வழங்கி திமுக அமைச்சர் காந்தி தான் உதவி செய்துள்ளார். இந்த விவகாரம் மூலம் அதிமுகவின் ரகசியங்களை திமுகவிற்கு கூறும் கே.பி.முனுசாமியின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றம்சாட்டினார்.

கைக்கூலி

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.பி.முனுசாமி, 'நேற்றுவரை காங்கிரஸில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, ஆதாயம் தேடுவதற்காக பல்வேறு கட்சிகளில் இருந்து, இன்று ஓபிஎஸ்ஸிடம் கைக்கூலி பெற்று எங்கள் மீது கீழ்த்தரமான விமர்சனங்களைச் செய்வதற்கான வாய்ப்பை கோவை செல்வராஜுக்கு ஓபிஎஸ் கொடுத்துள்ளார். கோவை செல்வராஜ் கைக்கூலி, அவர் சொல்வதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால், அதனை ஊக்குவிக்கும் ஓபிஎஸ் மீதுதான் வருத்தம்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனையே அம்பாக எய்து பேச வைக்கிறார். அம்மாவின் தொண்டர்களில் ஒருவனாக கேட்கிறேன் என்று அவர் சொல்கிறார். நான் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்கிறேன். நான்காண்டு காலம் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து துணை முதல்வராகப் பயணித்தீர்கள். அப்போது இந்த சிந்தனை வரவில்லையா?

நீங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக தவறு செய்து தொண்டர்களின் நம்பிக்கையை இழந்துவீட்டீர்கள். நீங்கள் சுயநலத்தால் தவறு செய்துவிட்டு எங்களின் மீது இருக்கும் நற்பெயரையும் கெடுப்பதற்காக இதுபோன்ற கருத்துகளைச் சொல்கிறீர்கள். ஓ.பி.எஸ் உடன் இத்தனை ஆண்டுகாலம் ஒன்றாகப் பயணித்தது என்னைப் போன்றவர்களுக்கு வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது.

ஏன் விலகினேன்?

அதிமுகவும், திமுகவும் நீண்டகாலமாக எதிரெதிராக இருக்கிற சக்திவாய்ந்த கட்சிகள். எம்ஜிஆர் 1972ல் கட்சி ஆரம்பித்தபோது நான் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினேன். இத்தனை ஆண்டுகாலமாக ஜெயலலிதாவின் தொண்டனாக சிந்தனை மாறாமல் பணியாற்றி வருகிறேன். ஓபிஎஸ் திமுகவுடன் இணைந்து செயல்படுவது போன்ற சூழல் வந்ததால் அவரிடமிருந்து விலகினேன்.

வெளியில் சொல்லக் கூடாது

உட்கட்சிக்குள் நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்களை, மனக் கசப்பு வரும்போது அதைக் காட்டிக்கொடுப்பது என்பதைவிட ஒரு கேவலமான அரசியல் எதுவும் இருக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வத்தோடு நான் இணைந்து பணியாற்றியபோது நடந்த சம்பவங்கள் குறித்து ஒன்றைக்கூட நான் வெளியிட மாட்டேன்.' எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் மீது நடவடிக்கை?

ஓபிஎஸ் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமி வந்த பின்னர் ஜனநாயக முறைப்படியே கட்சியின் செயல்பாடுகள் இருக்கும். சர்வாதிகாரம் தலைத்தூக்காது. எனத் தெரிவித்துள்ளார்.