கொள்கை பிடிப்புடைய தொண்டன், தான் ஏற்றுக்கொண்ட தலைமையை விட்டு மாறமாட்டான்; கேபி முனுசாமி பேட்டி....!

 கொள்கை பிடிப்புடைய தொண்டன், தான் ஏற்றுக்கொண்ட தலைமையை விட்டு மாறமாட்டான்; கேபி முனுசாமி பேட்டி....!

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் திடீரென ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகின்றனர்.

இதனிடையே இபிஎஸ் ஆதரவாளராக கேபி முனுசாமி ஓபிஎஸ் பக்கம் தாவப்போவதாக தகவல் வெளியாகியது. இதற்கு சிவி சண்முகத்திற்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவமும், கேபி முனுசாமிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததும் காரணமாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து கேபி முனுசாமி கூறுகையில், நான் ஓபிஎஸ் பக்கம் செல்கிறேன் என்ற செய்தி வெளியாவது வருத்தத்தை தருகிறது. ஏனென்றால் கொள்கை பிடிப்புடைய தொண்டன், தான் ஏற்றுக்கொண்ட தலைமையை விட்டு மாறமாட்டான். அப்படி ஒருவர் தான் நான். சில விஷமிகள் செய்கின்ற விஷமத்தனமான வார்த்தைகள் பற்றி விளக்கமளிக்க வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்தார்.


தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, சிவி சண்முகம் என் தம்பி போன்றவர். அவர் குடும்பம் அதிமுகவுக்கு பலம் சேர்த்துள்ளது. நான் வயதில், அனுபவத்தில் மூத்தவன். என்னைப் போலவே சிவி சண்முகமும் உணர்ச்சிமிக்க தொண்டன். இது சில விஷமிகள் செய்யும் சித்து விளையாட்டு. தர்மமும், நியாமும் வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் கட்சியின் கதவுகள் திறந்து இருக்கிறது என்று ஜெயக்குமார் பேசிய கருத்துகள் குறித்த கேள்விக்கு, ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய வந்தாலும், அவரை இணைத்துக் கொள்ள வாய்ப்பில்லை. அதற்கான காலம் கடந்துவிட்டது. எந்த தியாகமும் செய்யாமல், ஓபிஎஸ் பல முக்கிய பதவிகளை வகித்தவர். அதிமுகவால் உயர்ந்தவர், அதிமுகவுக்கு எதிராக சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.

பின்னர் திமுகவின் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றி கேள்விக்கு, திமுக ஆட்சி 15 மாதங்கள் முடிவடைந்துவிட்டது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் ஏராளமானவை நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. தனது அமைச்சரவையை கூட கட்டுப்படுத்த முடியாமல் மு.க.ஸ்டாலின் திணறிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில், ஆட்சிக்கும் தனக்கும் கெட்டப்பெயர் வருவதை திசை திருப்ப, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்துகிறார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பாஜக தன எதிர்க்கட்சி என்று கூறிவருவது குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு, பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கிறது. அதற்காக அவர்கள் முன்னிலைப்படுத்தி வருகிறார்கள். கிராமங்களில் பிரச்சினை என்றால் ஒரு பக்கம் அதிமுகவும், இன்னொரு பக்கம் திமுகவும் தான் நிற்பார்கள். அதுதான் யதார்த்த நிலைப்பாடு. திமுக ஆட்சியில் இருக்கும் போது அதிமுக தான் எதிர்க்கட்சியாக இருக்கிறது. அதிமுக 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அதிமுகவின் கொள்கை திமுகவை எதிர்ப்பது என்று மு.க.ஸ்டாலின் சொன்னது சரிதான் என்று தெரிவித்துள்ளார்.