அதிமுக தனித்து போட்டியிட முடியும்..! ’பல்ஸ்’ பார்க்கும் இபிஎஸ்!!
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்றுக் கொண்டிருந்தாலும் அமித்ஷா உடனான ஓபிஎஸ் -ன் சந்திப்பால் அதிருப்தி அடைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிமுக தனித்துப் போட்டி என்ற அஸ்திரத்தை மீண்டும் எடுத்து மாஜி அமைச்சர்கள் மூலம் பேச வைத்து பாஜகவின் 'பல்ஸை' பார்ப்பதாக கூறுகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் இன்னும் சில தினங்களுக்குள் கிளைமாக்ஸ் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றாலும் தேர்தல் ஆணையத்தின் பங்கும் இதில் குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது.
ஒருவேளை உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தால் தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என இரு தரப்புமே நம்புகிறது. பாஜக தலைமையின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியாக சந்திக்காமல் மதுரை விமான நிலையத்தில் ஒன்றாக வைத்து சந்தித்தார். மேலும் எடப்பாடி தரப்பிலும் ஓபிஎஸ் தரப்பிலும் சரிசமமாக நிர்வாகிகள் பிரதமரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பாஜக தலைமை இருவருக்குமே ஆதரவளிப்பதாகவும், இருவரும் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலை சந்தித்தால் தான் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற முடியும் என நினைக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
அதே நேரத்தில் . பன்னீர்செல்வத்துடன் சேரவே முடியாது, தனித்து நின்று குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற முடியும் அதனை நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன் என முழங்கி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதன் வெளிப்பாடாகவே நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமையில் 'மெகா கூட்டணி' அமைக்கப்படும் என்றும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என முழங்கினார். இதனை கவனித்த பாஜக தரப்பு சற்று அதிர்ச்சி அடைந்தாலும் அதிமுக தான் பெரிய கட்சி அதன் தலைமையை ஏற்றுக் கொள்கிறோம் என அண்ணாமலை கூறியிருந்தார்.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் பேச்சு அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு கால இடைவெளி இருக்கும் நிலையில் தற்போதைய கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன எனவும் சில மூத்த பாஜக நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் சென்னை வந்த அமித்ஷா ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் மறைமுகமாக பாஜக தலைவர்களுடன் ஓ பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே அமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்ததாக கூறுகின்றனர்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதன் வெளிப்பாடாக அதிமுக தனித்துப் போட்டி என்ற அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது அதன் வெளிப்பாடாகவே நேற்று செங்கோட்டையன் பேசினார் என்கின்றனர் அதிமுகவினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் பாஜகவை மறைமுகமாக தாக்கி பேசினார். இது தான் பாஜக தலைவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
தொண்டர்களிடையே பேசிய அவர் வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவால் தனித்து நிற்க முடியும். வேறு எந்த கட்சியாலும் முடியாது. காரணம் அதிமுக ஓட்டு வங்கி அப்படியே இருக்கிறது. தொண்டர்கள் உற்சாகமாக வேலை செய்கின்றனர். இது பாஜகவை வெறுப்பேற்றும் பேச்சு என கூறி வருகின்றனர் அதிமுகவினர். அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர்களின் பேச்சுக்களையும் பாஜக கவனித்து வருவதாகவும் இது தொடர்பாக அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறுகின்றனர் பாஜக நிர்வாகிகள்.