தொடர்ந்து இரண்டு மணி நேரம் சிலம்பம் மற்றும் குத்து வரிசை செய்த மாணவ மாணவியர் உலக சாதனை படைத்து அசத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வரர் நகரில் அகத்தியர் வீர சிலம்ப பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவியர் சிலம்பம் மற்றும் குத்து வரிசை தற்காப்பு கலையில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யா உலக சாதனை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
காலை 11:10 மணிக்கு 100 மாணவ மாணவியர் உலக சாதனைக்காக குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் உதய் மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் தொடர் சிலம்பம் சுற்ற துவங்கினர். ஒன்றரை மணி நேரம் சிலம்பமும் அடுத்த அரை மணி நேரம் குத்து வலசை கலையும் செய்து தொடர்ந்து இரண்டு மணி நேரம் தற்காப்பு கலையை செய்தனர். இதை குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு மூலம் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ மாணவியருக்கு உலக சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாநகராட்சி கவுன்சிலர்கள் மாதேஸ்வரன், தேவி மாதேஷ், இந்திராணி மற்றும் அகத்தியர் வீர சிலம்பபள்ளி ஆசிரியர் லோகநாதன், நெய்வேலி சிலம்பாட்ட கழகத் தலைவர் கலைச்செழியன், ஞானப்பிரகாசம், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.