3 வேளை சோறு! காலை ரூ.1,000, மாலை ரூ.1,000...!!

3 வேளை சோறு! காலை ரூ.1,000, மாலை ரூ.1,000...!!ஈரோட்டில் நடக்கும் தேர்தல் தில்லு.... முல்லுகள்.....!!!!

இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், வாக்காளர்களுக்கு காலையில் 1,000; மாலையில் 1,000 ரூபாய், மூன்று வேளை உணவு என வாரி வழங்குகின்றனர்.

இது தவிர, குக்கர், வெள்ளிக் கொலுசு உட்படபரிசுப் பொருட்களும் வீடு வீடாக வினியோகிக்கப்பட்டு வருகின்றன. விதவிதமான பரிசு, கைச்செலவுக்கு தினமும் 200, 300 ரூபாய் என, புதுசு புதுசாக கவனிக்கப்படுவதால், வாக்காளர்களுக்கு நாள் முழுதும் கொண்டாட்டம் தான். 

பிரசாரம் நிறைவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ளதால், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டு வாக்காளர்களை முழுமையாக குளிப்பாட்டி வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதியில், வரும் 27ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள் இருந்தாலும், தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும், அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசுக்கும் இடையே, நேரடி போட்டி நிலவுகிறது.இருவருக்கும் ஆதர வாக தேர்தல் பணியாற்ற, தி.மு.க., - அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, இன்னாள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், அவர்களின் கீழ் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் என பல ஆயிரம் பேர் ஈரோடில் தங்கி உள்ளனர். ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இத்தொகுதி மற்றும் மாவட்டத்தில், அந்தந்த கட்சிக்கு நம்பிக்கையானவர்கள் பலர் இருந்தாலும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலர்களுக்கே, தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.அவர்களின் நம்பிக்கையானவர்கள் வழியாக பணம், கொலுசு, புடவை, வேட்டி, காய்கறித் தொகுப்பு, ஆட்டுக்கறி, கோழிக்கறி மற்றும் பரிசு 'டோக்கன்' என அனைத்தும் வழங்கப்படுகின்றன. 

இறுதி நேர கவனிப்பு'

இவர் தான் இந்த பெயருடைய வாக்காளர்' என்பதை மட்டும், உள்ளூர் கட்சிக்காரர்கள் கை காட்டுகின்றனர். அதைத் தொடர்ந்து, வெளியூர் நபர்களே, அந்த வாக்காளரை கவனிக்கின்றனர். உரிய வாக்காளர் இல்லை என்றால், பணமோ, பொருளோ, பணிமனைக்கு, 'நேர்மையாக' திரும்பச் செல்வதால்,இறுதி நேர 'கவனிப்பை'யும், அவர்களை வைத்தே முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

தொகுதியில், 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த ஒரு மாதமாக, அந்தந்த தெரு கட்சிக்காரர்கள் வழியே, ஒவ்வொரு தெருவிலும், தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் பிற கட்சியினர் கூறிய விபரங்களுடன், ஒவ்வொருவரும் யாருக்கு ஓட்டு போடுவர் என்ற விபரத்தையும் தனியாக குறித்து வைத்துள்ளனர்.ஆளுங்கட்சியினர் தரப்பில், அ.தி.மு.க.,வினர், இறந்த வாக்காளர்கள் தவிர, மற்றவர்களுக்கு பணம் வழங்கதிட்டமிட்டனர்.அதேபோல, அ.தி.மு.க.,வினரும் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.

தி.மு.க., சார்பில் அமைச்சர்கள் ஒவ்வொருவரும், தங்களால் முடிந்த பரிசுப் பொருட்களை, வாக்காளர்களுக்கு வழங்கி உள்ளனர்.இது தவிர, வாக்காளர்களுக்கு தினமும், 500 ரூபாய்; எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரத்துக்கு வந்த நாளில் மட்டும் காலை 1,000, மாலை 1,000 ரூபாய் வழங்கப்பட்டன. 

தினமும் மூன்று வேளை சைவ, அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன. அ.தி.மு.க., தரப்பில் சில பகுதிகளில் கொலுசு உள்ளிட்ட பரிசுப் பொருளும், வாக்காளர்களுக்கு தினமும், 200 மற்றும் 300 ரூபாயும் வழங்கி உள்ளனர்.'

டோக்கன்!'

வரும் 25ம் தேதிமாலை 5:00 மணிக்கு முன்பு, ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வெளியூர்காரர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மதியத்துக்குள், தி.மு.க., - அ.தி.மு.க., என இரு தரப்பினரும், 70 சதவீத வாக்காளர்களுக்கு பணம் அல்லது டோக்கனை வழங்கி விட்டனர்.

ஆளுங்கட்சியினர் பெரும்பாலான இடங்களில், நேரடியாக வாக்காளர்களிடம், ஓட்டுக்கு 3,000 ரூபாய் வழங்கி உள்ளனர்.

அ.தி.மு.க.,வினர் பிரச்னை செய்யும் இடங்கள், கண்காணிப்பு அதிகம் உள்ள பகுதி போன்றவற்றில், ஒரு ஓட்டுக்கு நீல நிற டோக்கன்; 

இரண்டு ஓட்டுக்கு பச்சை; 

மூன்று ஓட்டுக்கு சிவப்பு நிற டோக்கன் என, கலர் கலராக டோக்கன் வழங்கி உள்ளதாகக்கூறப்படுகிறது.

டோக்கன் பெற்றவர்கள், அந்தந்த பகுதியில் குறிப்பிட்ட பணிமனை அல்லது வீட்டுக்கு சென்று, டோக்கனை கொடுத்து பணம் பெற்று செல்கின்றனர்.

 சில பகுதிகளில், குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட வாகனத்தை நிறுத்தி, டோக்கனை பெற்று, பணம் வழங்குகிறார்.

ஆளுங்கட்சிக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், அ.தி.மு.க.,வினர் நேரடியாக வாக்காளர்களிடம், ஓட்டுக்கு 2,000 ரூபாய் வழங்கினர்.

சில பகுதிகளில், டோக்கனாக காகிதத்தில் கையெழுத்திட்டு கொடுத்தனர். அதை அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் கொடுத்து, பணம் பெற்று சென்றனர்.

மகிழ்ச்சி

இதைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக நாளை மேலும் 1,000 ரூபாய் வழங்க திட்டமிட்டு உள்ளனர்.அவர்கள் வழங்கினாலும், அ.தி.மு.க.,வும் 1,000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஓட்டுப்பதிவு அன்று, வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரும் பொறுப்பு மட்டும், உள்ளூர் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

பணப் பட்டுவாடாவை தடுக்க, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. ஆனால், பணம் பட்டுவாடா தொடர்பாக, யாரையும் பிடிக்கவில்லை. 

கன ஜோராக இரு தரப்பினரும் பணப் பட்டுவாடாவை முடித்து விட்டனர். மற்ற வேட்பாளர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

 உற்சாகமூட்டியஸ்டாலின்!

ஈரோடு கிழக்கு தொகுதியில், ஓட்டுச்சாவடி வாரியாக, தி.மு.க.,வில் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கமிட்டியில் உள்ள கட்சியினர் விபரங்களை, முதல்வர் ஸ்டாலின் கேட்டு பெற்றுள்ளார்.அவர்களது மொபைல் போன் எண்ணில் திடீரென பேசிய அவர், 'அ.தி.மு.க.,வை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்' எனக் கூறி, உற்சாகப்படுத்தி உள்ளார்.'

காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்; அ.தி.மு.க., வேட்பாளர் டிபாசிட் இழக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். அதற்காக, 'பூத் கமிட்டி'நிர்வாகிகளை அழைத்து பேசி உற்சாகம் ஊட்டி வருகிறார்' என, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

தேர்தல் கமிஷன்விளக்கம் கேட்பு 

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு, குக்கர், கொலுசு போன்ற பொருட்கள் வழங்கப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றுக்கு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், 100க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் அனுப்பப்பட்டு உள்ளன. 

'ஓட்டுக்கு பணம் வினியோகிக்கப்படுவதால், இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்' என, தே.மு.தி.க., சார்பில் நேற்று முன்தினம் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், மனு அளிக்கப்பட்டது.

மனுவுடன், பணம்மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா தொடர்பான வீடியோக்கள் அடங்கிய, 'பென் டிரைவ்' வழங்கப்பட்டது.

அவற்றை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி, விளக்கம் கேட்டுள்ளார். இதுபோல் தேர்தல் கமிஷனுக்கு வந்துள்ள மனுக்கள் குறித்தும், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:

அரசியல் கட்சிகள் பொதுவான புகார்களையே, மனுவாக அளித்துள்ளனர். ஆதாரம் எனக் கூறி, சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை அளித்துள்ளனர். அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது; எப்போது எடுக்கப்பட்டது என்ற, எந்த விபரமும் இல்லை.தேர்தல் விதிமீறல் குறித்து,உடனடியாக புகார் தெரிவிக்கும்படி கூறினால், யாரும் முன்வருவதில்லை. இதன் காரணமாக, நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.