காலாவதி வாகன சட்டம் தமிழகத்தில் எப்போது அமல்....?
நாட்டில் பழைய வாகனங்கள் மூலமாக காற்று மாசடைவதை தடுப்பதற்கு மத்திய அரசு காலாவதி வாகன சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது. இந்த சட்டம் தமிழகத்திலும் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் கூறியவற்றை பற்றி பார்ப்போம்.
நாட்டில் தற்போது வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் காற்று அதிகமான அளவு மாசடைந்து வருகிறது. மேலும் இதில் குறிப்பாக பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையானது காற்றை மிகுந்த அளவு மாசுபடுத்தி வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு காலாவதி வாகன சட்டத்தை வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திலும் இத்தகைய சட்டம் அமல்படுத்தப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வாடகை வாகன உரிமையாளர்கள் கூறியதாவது, தமிழகத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஒரு வாகனம் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெற்று தான் வாங்க வேண்டியுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை கடனை செலுத்திய பிறகு தான் அந்த வாகனம் சொந்தமாக கிடைக்கிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் காலாவதி வாகன சட்டம் அமலுக்கு வந்தால் வாகன உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படக்கூடும். இதுமட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களில் உள்ள பழைய வாகனங்களை அழித்துவிட்டு புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்பதால் அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசின் காலாவதி வாகன சட்டம் தொடர்பாக தமிழக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்து... வாகனங்களில் காலாவதி என்பது வருடங்களை வைத்து முடிவு செய்யக்கூடாது. வாடகை வாகனங்கள் தினந்தோறும் நீண்ட நேரம் இயங்குபவை. ஆனால் தனி நபர் பயன்படுத்தும் வாகனங்களும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயக்கப்படக்கூடியவை இந்த வாகனங்களுக்கெல்லாம் காலாவதி சட்டத்திலிருந்து விதிவிலக்கு வழங்க வேண்டும்.
இந்த வாகனங்களின் இயந்திரங்கள் புதிய வாகனங்கள் போன்று உள்ளது. இவற்றினால் காற்று மாசுபாடு மிகவும் குறைவாக தான் இருக்கிறது எனவே இவற்றையெல்லாம் எடைக்கு போடுவது என்பது மிகப்பெரிய முட்டாள்தனமாகும்.
அரசு இந்த வாகனங்களை பரிசோதித்து விட்டு அப்புறம் வேண்டுமானால் இதற்கு தகுதிச் சான்றிதழ் வழங்கட்டும். மாநகரங்களில் மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் பயன்படுத்தும் வாகனங்கள் வேண்டுமானால் இந்த காலாவதி தடை சட்டத்தில் தடை செய்யப்படட்டும்.
ஆனால் கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல நிலையில் இயங்கும் வாகனங்களை இந்த சட்டத்தின்படி தண்டனைக் குள்ளாக்குவது குற்றமே செய்யாதவர்களுக்கு தூக்கு தன்னை கொடுப்பது போன்றதாகும். எனவே அரசு இந்த விஷயத்தில் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்துள்ளனர்.