தி.மு.க. உயிருடன் இருப்பதற்கு காரணமே அ.தி.மு.க. தான்...! எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு....!!
திருநெல்வேலியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் மட்டும் சாமானியர் உயர்ந்த நிலைக்கு வர முடியும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்;பயிர் இழப்பீடு விவகாரத்தில் தி.மு.க., எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும் பேசுகிறது.
அ.தி.மு.க. தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது.அ.தி.மு.க.வுக்கு யாரும் உதவவில்லை, அ.தி.மு.க. தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது.அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பா.ஜ.க. எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி தொடரும்.
திமுக கூட்டணியால் தி.மு.க. மட்டுமே வளர்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் தேய்ந்து கொண்டு உள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிராக தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் தி.மு.க.விற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டனர்.
இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் காணமால் போய் விடும். கடந்த 21 மாதங்களாக தி.மு.க. ஆட்சி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. தி.மு.க. அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். காவல்துறை வாகனத்தை திருடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கொட்டுள்ளது. கடலில் பேனா வைக்கவேண்டிய அவசியம் இல்லை. தரையில் வைக்கலாம். எழுதாத பேனாவிற்கு 80 கோடி செலவு செய்வது தேவையற்றது. ஈரோடு இடைத் தேர்தலுக்கு பின்னர் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
திமுகவே அதிமுகவை நம்பித்தான் இருக்கிறது. அதிமுகவில் இருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்கும் துரோகம் செய்துவிட்டு போன எட்டு பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் பதவிக்காக தீய சக்தியுடன் இணைந்து இருக்கிறார்கள். இவர்களை வைத்துதான் திமுக பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. இவர்கள் எல்லாம் கட்சிக்கு துரோகம் செய்யாமல் இருந்திருந்தால் திமுகவே இருந்திருக்காது என்கிற ரீதியில் எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ள பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.