நீட்' தேர்வு தொடர்பாக வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை
- நீட்' தேர்வு வழக்கையே தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றுவிட்டது என்று சிலர் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'நீட்' தேர்வு தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்று புதிய வழக்கை தாக்கல் செய்தது. ஆனால் 'நீட்' தேர்வு வழக்கையே தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றுவிட்டது என்று சிலர் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
அதற்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைச்சட்டம் 2021 என்ற சட்டமுடிவு, சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை விரைவாக பெற்றுத்தருமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உரிய சட்டவிதிகளை ஆராயாமல் அவசர கோலத்தில், நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு பதிலாக முந்தைய சட்டவிதிகளை எதிர்த்தும், அவற்றை ரத்து செய்யுமாறும் குறிப்பிட்டு 4.01.2020 அன்று முந்தைய அ.தி.மு.க. அரசால் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அ.தி.மு.க. அரசால் தவறான சட்டப்பிரிவுகளின்படி தொடரப்பட்ட இந்த வழக்கை மேற்கொண்டு தொடர்ந்து நடத்தினால் அது 'நீட்' தேர்வுக்கு எதிரான நமது போராட்டத்துக்கும், நமது மாணவர்களின் நலனுக்கும் பாதகமாக அமையும் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், புதிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம் எனவும், அ.தி.மு.க. ஏற்கனவே தாக்கல் செய்து நிலுவையில் இருக்கும் வழக்கை திரும்பப்பெறலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி அந்த வழக்கை திரும்பப்பெறவும், தமிழ்நாடு அரசின் 'நீட்' தேர்வுக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்ளடக்கியும், மத்திய அரசின் பாதகமான சட்டவிதிகளை எதிர்த்தும் உரியவாறு புதிய வழக்கு தொடர்ந்தும் உரிய மனுக்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க. அரசின் தவறான வழக்கை திரும்பபெற்றதை, ஏதோ 'நீட்' தேர்வு வழக்கையே திரும்பப் பெற்றுவிட்டது போலவும், தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ள புதிய வழக்கை மறைத்து, திசைதிருப்பும் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது.
'நீட்' தேர்வை அகற்றுவதற்கான சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வெல்லும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த கூற்றுக்கு பலரும் தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். எதற்கு இந்த சப்பைக் கட்டு.....? யாரை ஏமாற்றுவதற்கு இந்த அறிக்கைகள்...! என்று பலரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.
தங்களின் கையாலாகாத தனத்தை காட்டுவதற்கு அடுத்தவர்கள் மீது பழி போடும் பழக்கத்தை எப்போதுதான் இவர்கள் கைவிடப் போகிறார்களோ....? இந்த புத்தி அப்போது எங்கே போச்சு....?
நீதிபதிகள் கேட்கிற கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லத் தெரியாத இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.... இவங்களும் இவங்க போக்கத்த பேச்சும்... என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.