370 சட்டப்பிரிவு ரத்து செல்லும்... ஜம்மு காஷ்மீரில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் -
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் தொடர் விசாரணை நடைபெற்றது.
இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை கடந்த செப்டம்பர் மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அந்த தீர்ப்பை டிசம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. மேலும் இதில் மூன்று விதமான தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். மேலும், நீதிபதிகள் எஸ்.கே. கௌல், சஞ்சீவ் கன்னா வேறு தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதில், மூன்று தீர்ப்புகள் இருந்தாலும், ஒரே தீர்ப்பாகதான் கொள்ள வேண்டும்.
மேலும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,"ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது, மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. குடியரசு தலைவர் ஆட்சி இருக்கும்போது, மாற்ற முடியாத முடிவுகளை மத்திய அரசு எடுக்க முடியாது என்ற வாதங்கள் நிராகரிக்கப்படுகின்றன. குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுக்கலாம்.
அரசியலமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு நிரந்தரமானது அல்ல. 370ஆவது சட்டப்பிரிவை நீக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உண்டு. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு தற்காலிகமானது" என அவர் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜம்மு காஷ்மீர் மீதான 370ஆவது பிரிவை ரத்து செய்தது செல்லும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி 370ஆவது சட்டப்பிரிவை நீக்க மாநில அரசிடம் கருத்து கேட்க அவசியம் இல்லை என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,"2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும்" என உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்த முடிவு செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.