பிரதமர் வேட்பாளராக கார்கே... INDIA கூட்டணிக்கு பலன் தருமா? - மம்தா முன்மொழிவின் பின்னணி...!
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வரை தங்களின் அனைத்து வெற்றிகளுக்கும் மோடியின் முகத்தையே பா.ஜ.க காரணமாகக் கூறிவருகிறது.
இந்தியா கூட்டணி - மோடி
லோக் சபா தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்களே இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி இதுவரை தங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவுசெய்யவில்லை. இருப்பினும், டிசம்பர் 19-ம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், மம்தா, கெஜ்ரிவால் போன்றோர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் தங்களின் கருத்தை முன்வைத்திருக்கின்றனர்.
இருப்பினும், `முதலில் தேர்தலில் வெற்றி. அதன்பிறகு பிரதமர் யார் என்பதை முடிவுசெய்துகொள்ளலாம்' என மல்லிகார்ஜுன கார்கே தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் அந்தக் கூட்டணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், `இந்தியா கூட்டணியில் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டால், அது கூட்டணிக்கு... (a) பலன் சேர்க்கும், (b) எந்த மாற்றமும் தராது, (c) கருத்து இல்லை' எனக் கேள்வியும், மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.
விகடன் கருத்துக்கணிப்பு
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் அதிகபட்சமாக `58 சதவிகிதம் பேர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டால் கூட்டணிக்கு எந்த மாற்றமும் தராது' எனத் தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 37 சதவிகிதம் பேர் கூட்டணிக்குப் பலன் சேர்க்கும் என்றும், 5 சதவிகிதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கே? - மம்தா முன்மொழிவின் பின்னணி...!
மோடிக்கு நிகரான தலைவர்கள் இந்தியாவிலேயே இல்லை' பா.ஜ.க-வினர் பேசிவந்தனர். மோடி அரசை வீழ்த்த வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியபோது, இந்தக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாது என்று பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பினர்.
ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணியில் பல முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்களும் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில், 'பல முதல்வர்களும் முன்னாள் முதல்வர்களும் இருக்கும் இந்தியா கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் யாரும் இல்லை' என்று பா.ஜ.க-வினர் கூறினர்.
பா.ஜ.க-வுக்கு பதிலடி கொடுப்பதற்காக, 'நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் பிரதமர் வேட்பாளரைத் தேர்வுசெய்வோம். பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தியா 2004-ல் மன்மோகன் சிங் பிரதமரானார்? ஐ.கே.குஜ்ரால், தேவகௌடா உள்ளிட்ட பிரதமர்கள், அறிவிக்கப்பட்டு பிரதமராக அமரவைக்கப்பட்டவர்கள் அல்ல' என்றனர் எதிர்க்கட்சியினர்.
மன்மோகன் சிங்
தற்போது, மூன்றரை மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு டிசம்பர் 19-ம் தேதியன்று டெல்லியில் கூடிய இந்தியா கூட்டணியின் கூட்டத்தில், 'நம் கூட்டணியின் பிரதமர் முகமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம்' என்று முன்மொழிந்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டாமல் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இந்தியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு பொருத்தமான மனிதர் இவர் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் கொண்ட மல்லிகார்ஜுன கார்கே மீது பெரிய அளவுக்கான விமர்சனங்கள் எதுவும் இல்லை. 2021-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவராக இருந்துவரும் கார்கே, காங்கிரஸில் முக்கியமான பல பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
மல்லிகார்ஜுன கார்கே
கர்நாடகாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கார்கே, மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் குறுகிய காலம் ரயில்வே அமைச்சராக இருந்திருக்கிறார். தலித் வகுப்பில் பிறந்த இவர், பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சீடர் என்று தன்னை அறிவித்துக்கொண்டவர் இவர்.
பிரதமர் வேட்பாளர் என்றால், இந்தியா முழுவதும் அறிமுகமானவராக இருக்க வேண்டும். ஆனால், கர்நாடகாவைச் சேர்ந்த இவர், ஒரு தென் இந்தியராகவே பார்க்கப்படுகிறார் என்றும், வட மாநிலங்களில் பெரியளவுக்கு அறிமுகம் இல்லாதவர் என்றும் சொல்லப்படுகிறது.
மல்லிகார்ஜுன கார்கே - ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தாலும், நேரு குடும்பத்தினர் சொல்வதைச் செய்பவராகத்தான் இருக்கிறார் என்று கார்கேவை பா.ஜ.க-வினர் விமர்சனம் செய்கிறார்கள்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் முகமாக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம் என்று மம்தாவும், கெஜ்ரிவாலும் கூறியிருந்தாலும், அது இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஒருமித்த முடிவாக எடுக்கப்படவில்லை. மம்தாவின் முன்மொழிவுக்கு 'இந்தியா' கூட்டணியில் 12 தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் முகமாக முன்னிறுத்த விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற தகவலும் வெளிவருகிறது.
நிதிஷ் குமார்
நிதிஷ் குமாருக்கு பிரதமராகும் கனவு இருப்பதால், மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்துவதை அவர் விரும்பவில்லை என்கிறார்கள். கார்கேவைப் பொருத்தளவில், பிரதமர் வேட்பாளராக மம்தா முன்மொழிந்ததை அவர் ஏற்கவில்லை. மாறாக, அது பற்றி நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முடிவுசெய்வோம் என்கிறார்.
பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் மம்தாவும், கெஜ்ரிவாலும் வேகம் காட்டுவதற்கு காரணம், ராகுலை கூட்டணியின் முகமாக காட்டுவதற்கு விரும்பவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. காரணம், ராகுலை முன்னிறுத்தி இதுவரை காங்கிரஸ் பெரிய வெற்றியை பெறவில்லை. அதனால், பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிக்காமல் செயல்பட்டால், காங்கிரஸ் சார்பில் ராகுல் தான் பிராதனப்படுத்தப்படுவார். அது ராகுல் vs மோடி என்று செல்லும். இதில் மோடி எளிதில் வென்று விடுவார் என்ற அச்சமும் இந்தியா கூட்டணியில் சில தலைவர்களுக்கு இருக்கிறது. மேலும், மம்தா, தனக்கான இடம், மேற்கு வங்கம் தான் என்பதையும் சமீபகாலமாக உணர்கிறார். கே.சி.ஆரை போன்று தேசிய அரசியலில் கவனம் செலுத்துகிறேன் என்று மாநிலத்தையும் இழக்க அவர் விரும்பவில்லை என்பது அவரின் செயல்பாடுகளின் மூலம் தெரிகிறது. அதனால் தான் இந்த விஷயத்தில் அவசரம் காட்டுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் பெரும்பாலும் தேர்தலுக்கு பின் பிரதமர் தேர்வு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்றே தெரிகிறது.