தி.மு.க. யாருடன் கூட்டணி...? பா.ம.க. உடன் பேச்சு வார்த்தையா...? சூடாகும் அரசியல் களம்.....!
திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக முயன்றுவருவதாக சொல்கிறார்கள். அதற்கேற்றவாறு, 4 நாட்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் ஸ்டாலினை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசினார்.
ராமதாஸ்: ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும், வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பற்றிதான் பேசியதாக செய்திகள் வெளியாகின.
எனினும், டாக்டர் ராமதாஸுடன் துரைமுருகனும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் தொடர்பில் இருந்து வருவதாக சொல்கிறார்கள்.. காரணம், திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என இவர்களும் விரும்புகிறார்களாம்.. இதனை ஸ்டாலினிடம் துரைமுருகன் ஏற்கனவே விவரித்திருப்பதால், இதுவரை எந்த முடிவையும் திமுக எடுக்கவில்லை என்றாலும், அதேசமயம், பாமகவுடன் கூட்டணி கிடையாது என்பதையும் இதுவரை திமுக அறிவிக்கவில்லை.
திமுக கூட்டணி: திமுக கூட்டணியை பொறுத்தவரை, ஏற்கனவே இடம்பெற்றுள்ள அதே கட்சிகள்தான் இந்த முறையும் இடம்பெற போகின்றன.. இதில் ம.நீ.ம. கூடுதலாக இணைகிறது. அதேபோல, பாமகவும் இணையலாம், ஆனால், சீட் விவகாரம்தான் இடிக்கிறதாம்.
ஒருவேளை கூட்டணிக்கு வரும்பட்சத்தில், குறைந்தது 7 சீட்டாவது பாமக திமுகவிடம் கேட்கக்கூடும். ஆனால், பாமக கேட்கும் சீட்களை தர முடியாவிட்டாலும், 4 தொகுதிகளையாவது கொடுத்தாக வேண்டும். அந்த 4 தொகுதிகளையும் காங்கிரஸ் விட்டுக் கொடுக்க வேண்டும் என திமுக நினைக்கிறதாம்.
பாமக சீட்: அப்படி 4 சீட்டுக்களை பாமகவுக்கு விட்டுத்தரும்பட்சத்தில், காங்கிரசுக்கு வெறும் 5 இடங்களே கிடைக்கும்.. அத்துடன், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்போகும் சீட்களிலும் திமுக "கை" வைக்க போவதாக சொல்கிறார்கள்.
ஒருவேளை இதற்கு கூட்டணிகள் ஒப்புக்கொள்ளாவிட்டால், தேர்தல் செலவு + ராஜ்யசபா சீட்டுகளை ஒதுக்கி சமாதானம் செய்துவிடலாம் என திமுக மேலிடம் யோசிக்கிறதாம்.
அதுமட்டுமல்ல, இந்த முறை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று கூட்டணிகளை நிர்ப்பந்திக்காமல், அவரவர் சொந்த சின்னத்திலேயே போட்டியிட்டுக்கொள்ளும்படியும் திமுக மேலிடம் அனுமதிக்க போகிறதாம்.
உதயசூரியன்: ஆனால், 5 சீட்களை பெற்றுக்கொள்ள காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுமா தெரியவில்லை.. காரணம், 20 சீட்டுக்களையாவது இந்த முறை பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.
அதுமட்டுமல்ல, 20 சீட் கேட்டால்தான், 15 சீட்டாவது கிடைக்கும் என்பதால், சீட் எண்ணிக்கையை உயர்த்தி கேட்கும்படி, மேலிட காங்கிரஸே, தமிழக காங்கிரஸுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம்..
அதற்கேற்றபடி, மாநில தலைவர் அழகிரியும், செய்தியாளர்களை எப்போது சந்தித்தாலும், இந்த முறை அதிக சீட்களை திமுகவிடம் கேட்டு வாங்குவோம் என்று கனத்த நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார். ஆனால், திமுகவின் கணக்கு என்ன என்று இதுவரை தெரியவில்லை.
பரபர யூகங்கள்: இப்படி பல தகவல்கள் அரசியல் களத்தில் யூகங்களாக வட்டமடித்து வந்தாலும் இதெல்லாம் உண்மையா? ஒருவேளை உண்மையாக இருந்தால், வெறும் 4 சீட்களை வாங்கிக்கொண்டு கூட்டணிக்குள் பாமக வருமா? அல்லது பாமக கூட்டணிக்குள் வராதபட்சம், காங்கிரசுக்கு கூடுதல் சீட்கள் ஒதுக்கப்படுமா? இதற்கெல்லாம் கூட்டணி கட்சிகளும் ஒப்புக்கொள்ளுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
இதற்கு இடையே திமுக கூட்டணி கட்சிகளின் பலவீனத்தை விமர்சிக்கின்ற வகையிலே மீம்ஸ் தமிழக முழுவதும் உலா வந்து கொண்டுள்ளது. இது உண்மையாகவும் தெரிகின்றது. காரணம் இந்த கட்சிகள் அனைத்தும் தற்போது மக்கள் செல்வாக்கை இழந்து கொள்கைகளை இழந்து கொடி, தோரணங்களுக்காக மட்டுமே தொங்கி கொண்டிருக்கிறது.
இவர்களின் பலவீனம் என்ன என்பது மு க ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் கொடுக்கின்ற சீட்டை இவர்கள் வாங்கித் தான் ஆக வேண்டும். இவர்களுக்கு வேறு போக்கிடம் எதுவும் இல்லை. இவர்களுக்காக திறந்து கிடந்த கதவுகள் கூட தற்போது கப்சிப் ஆகிவிட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி கூட பணம் பதவி தொகுதி என்பதைவிட கட்சியை காப்பாற்ற வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் அவசரப்பட்டு எல்லாம் ஒரு முடிவை எடுத்து விட மாட்டார்கள்...!
எதுவாக இருந்தாலும் எல்லாம் பிப்ரவரி மாதத்திற்குள் ஒரு முடிவுக்கு வந்துவிடும்