தமிழகத்தில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் ?
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை 2024-2025 கல்வியாண்டுக்குள் தொடங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்து மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாடு அரசின் முடிவிற்கு மத்திய கல்வி அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் புதிய கல்விக்கொள்கை 2020ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என மத்திய அரசு கூறுகிறது.
இதுதொடர்பாக, மத்திய கல்வித்துறை அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 16) தன் ட்விட்டர் பக்கத்தில், "பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முக்கிய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்பது புதிய கல்விக் கொள்கை-2020இன் படி அமைந்த முன்மாதிரி பள்ளிகள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2024-25 கல்வியாண்டுக்குள் தமிழ்நாடு அரசு கையெழுத்திடும் என்றும் தமிழ்நாடு அரசுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கும் இடையேயான இந்த ஒப்பந்தம், வலுவான மத்திய-மாநில உறவுகளைக் குறிப்பதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக இதைத் தாங்கள் மனமார வரவேற்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Getty Images
மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மார்ச் 15 அன்று எழுதிய கடிதமும் அப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், "தமிழகத்தில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வமாக உள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்படும். அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அடுத்த கல்வியாண்டுக்குள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்று மற்றும் நான்காம் நிதி தவணைகளை வழங்குமாறும் மத்திய அரசிடம் அதில் கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தேசிய கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் போன்றவற்றை வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.
Getty Images
திமுக எதிர்ப்பு
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அப்போது, புதிய கல்விக் கொள்கைக்கு திமுக உட்பட தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கை வேத கலாசாரத்தை திணிப்பதாகவும் சமூக நீதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுகிறது, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்தப் பார்க்கிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Getty Images
இந்த விமர்சனம் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு தயாரித்து வருகிறது. அதை ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு உருவாக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் கல்வியாளர்களைச் சந்தித்திருக்கிறோம். ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துகளை அறிந்துதான் மாநில கல்விக் கொள்கையைத் தயாரித்திருக்கிறோம். அதைச் சார்ந்துதான் எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்படும்" என்றார்.
அதோடு, மத்திய கல்வி அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு மூன்றாவது மற்றும் நான்காவது தவணையான ரூ. 1,200 கோடியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திஇருப்பதாகவும், அப்போது பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என மத்திய அரசு கூறியதாகவும் தெரிவித்த அன்பில் மகேஷ், "முதலமைச்சரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினோம்" எனக் கூறினார்.
அவரது கூற்றின்படி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதில் எவற்றையெல்லாம் ஏற்கலாம், ஏற்க வேண்டாம் என்பது குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்படும். "அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் நமக்கு ஏற்காத விஷயங்களை எடுத்து சொல்வோம்," என்றார்.
மேலும், குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வந்து அவர்களுக்கு மன உளைச்சலைத் தரும் புதிய கல்விக் கொள்கையை திமுக எப்போதும் எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்பது என்ன?
பி.எம். ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள். இந்தியா முழுவதிலும் 14,500 பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இப்பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றி, அப்பள்ளிகள் அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகளை வழிநடத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பள்ளிகள் இருக்கும் என புதிய கல்விக் கொள்கை-2020இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட மத்திய/மாநில/யூனியன் அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படும். உயர்தர கல்வி, பாதுகாப்பான சூழல், பரவலான கற்றல் அனுபவங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் பள்ளிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பள்ளிகளாக உருவாக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பயணடைவார்கள் என, 2022ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரை ஒடிசா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் கையெழுத்திடவில்லை என, பிடிஐ செய்தி முகமையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.