கன்னியாகுமரியில் இருந்து அலை கிளம்பியுள்ளது.
தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தல் தேதியை நாளை அறிவிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது. அநேகமாக லோக்சபா தேர்தல் ஏப்ரல் 2ஆம் வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது. இதனால் கூட்டணி அமைப்பது, பிரச்சாரம் மேற்கொள்வது என அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக உள்ளன.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவர் அடிக்கடி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்கிறார். அண்மையில் பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அந்த வகையில் இன்று மீண்டும் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதற்காக இன்று காலை அவர் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிபேடு தளத்திற்கு வந்தார். பின்னர் பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார்.
பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் தென் கோடியான கன்னியாகுமரியில் இருந்து அலை கிளம்பியுள்ளது. இந்த அலை நீண்ட தூரம் பயணம் பயணிக்கப்போகிறது. 1991ல் கன்னியாகுமரி இருந்து காஷ்மீர் யாத்திரை சென்றேன், இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறேன். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம்.
இந்தியா கூட்டணி வரலாறு மோசடியும் ஊழல்களும் கொண்டது. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் ஒற்றை இலக்கு. 2 ஜி ஊழலில் பெரும் பங்கு வகித்தது திமுகதான் இந்தியா கூட்டணி 2ஜி ஊழல் செய்தது. பாஜக ஆட்சியில் 5ஜி கொண்டு வந்துள்ளோம்.
நாங்கள் உதான் திட்டத்தைக் கொண்டு வந்தோம். அவர்கள் ஹெலிகாப்டரில் ஊழல் செய்தார்கள். நாங்கள் கேலோ இந்தியா போட்டியை வெற்றிகரமாக நடத்தினோம். காமன்வெல்த் போட்டியில் காங்கிரஸ் ஊழல் செய்தது. திமுக காங்கிரஸ் கட்சிகள் செய்த பாவக்கணக்கிற்கு பதில் கூற வேண்டும்" என்று மோடி பேசியுள்ளார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, "உங்கள் அன்பிற்கு நான் என்ன திருப்பி தரப்போகிறேன் என்று தெரியவில்லை. என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்று கவலையாக இருக்கிறது. நமோ ஆப் மூலம் நான் தமிழில் உங்களிடம் பேசப்போகிறேன். என் பேச்சை தமிழில் கேட்பீர்களா.. கேட்பீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "பிரதமர் மோடி தமிழில் பேசுவதைக் கேட்க விரும்புகிறீர்களா? பிரதமர் மோடியின் பேச்சு ஏஐ மூலம் தமிழில் வெளியாகும். Namo in Tamil சமூகவலைதள பக்கத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும். இதை மக்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்." என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நான் தமிழில் பேசப்போவதை கேட்பீர்களா? கேட்பீர்களா? அப்படி என்றால் செல்போன்களை உயர்த்தி டார்ச் லைட்டை ஆன் செய்து காட்டுங்கள்" எனக் கூறவே, அதற்கு, கூட்டத்தில் இருந்த மக்கள் அனைவரும் செல்போனை உயர்த்தி லைட்டை ஆன் செய்து பிரதமர் மோடிக்கு உறுதி அளித்தனர்.