NDA கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் : தருமபுரி பாமக மக்களவை வேட்பாளர் சவுமியா அன்புமணி ...!!
தேசிய ஜனநாயக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தருமபுரி பாமக மக்களவை வேட்பாளர் சவுமியா அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.
தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம், மேச்சேரி பத்ரகாளியம்மன், தெத்திகிரிப்பட்டி மாரியம்மன் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிக்காக சவுமியா அன்புமணி வருகை தந்தார்.
முன்னதாக, சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் பிரிவு சாலையில் சவுமியாக அன்புமணிக்கு பாமக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தெத்திகிரிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து, மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அமமுக, பாஜக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர், சிந்தாமணியூர், மேச்சேரி, தெத்திகிரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'தருமபுரி மக்களவை தொகுதியில் முதல் பெண் வேட்பாளர் பெருமையாக நினைக்கிறேன். இதற்கான வாய்ப்பு வழங்கியதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எல்லோருக்கும் இருக்கும் சவால்தான் எனக்கும் உள்ளது. இதற்கு கடுமையாக உழைக்கவும், உண்மையாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன். மக்களிடையே நல்ல வரவேற்பு அளிக்கின்றனர். மேலும், வெற்றி வாய்ப்பு உறுதி எனவும் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்திற்கு நீர் மேலாண்மை, வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்துவேன். மேட்டூர் தொகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு உறுதி செய்வேன். தோணிமடுவு, ஆணைமடுவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இந்த திட்டத்துக்கு ரூ.1,000 கோடி தேவைப்படுகிறது. இந்த நீர் திட்டங்களை நோக்கி தான் எனது பயணம் இருக்கும்.
தமிழகம், புதுச்சேரி உள்பட் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் போதைப் பொருள் தலைவிரித்தாடுகிறது. இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள்' என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பாமக கவுரவ தலைவரும், எம்எல்ஏவுமான மணி, மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் ரேவதி ராஜசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.