மருத்துவத்துறையில் தொழில்நுட்ப படிப்பு..?
மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கும். அதற்காக 12ஆம் வகுப்பில் தீவிரமாகப் படித்து நுழைவுத் தேர்வுகளை எழுதி மருத்துவம் படிக்க சீட் பெற்றுப் படிக்கின்றனர். ஆனால் படித்து முடித்த அனைவருக்கும் அதற்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.
மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம் பெரும்பாலோனோருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் மருத்துவத்துறையில் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி நோய் கண்டறிவது, ஆலோசனை அளிப்பது என எவ்வளவோ படிப்புகள் உள்ளன. அந்தப் படிப்புகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளும் உள்ளது. அவை குறித்து இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்,
பிசியோதெரபி: துணை மருத்துவப் படிப்புகளில் மிக முக்கியமானது பிசியோதெரபி. கை, கால் எலும்பு முறிவு, சுளுக்கு போன்றவற்றிற்கும், நீண்ட நாட்களாக இருக்கும் உடல் உபாதைகளுக்கும், உடற்பயிற்சி மற்றும் தொடர் சிகிச்சை மூலம் உடம்பின் பாகங்களைச் சரி செய்வதில் பிசியோதெரபி சிகிச்சை சிறந்த மருத்துவ முறையாக இருக்கிறது. பிபிடி எனப்படும் இந்தப் பட்டப்படிப்பு மொத்தம் நான்கரை ஆண்டுக்காலப் படிப்பு ஆகும். பிசியோதெரபியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் பணிபுரிய முடியும்.
ஆடியாலஜி: பேச்சு மற்றும் காது சம்பந்தமான குறைபாடுகளைக் களைவது குறித்த மருத்துவம் தொடர்பான ஆடியாலஜி 3 ஆண்டு பட்டப் படிப்பாகும். இதைப் படிக்கும் மாணவர்களுக்கு, சமூகத் தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், காது கேட்கும் கருவி தயாரிக்கும் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
ஆப்ட்டோமெட்ரி: ஆப்ட்டோமெட்ரி படிப்பு படித்தவர்கள் கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதற்குத் தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கும் கண்விழிப் பரிசோதகருக்கான படிப்பாகும். பார்வையில் குறைபாடு கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் என்ன மாதிரியான கண் கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைப்பது போன்றவை அவர்களது பணிகள் ஆகும்.
ஆப்ட்டோமெட்ரி அஸிஸ்டெண்ட் படிப்பில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு உள்ளது. ஆப்ட்டோமெட்ரியில் 4 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பும் இருக்கிறது. 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஆப்ட்டோமெட்ரியில் டிப்ளமோ படிப்பை முடிக்கும் மாணவர்கள், நேரடியாக மூன்றாம் ஆண்டு ஆப்டோமெட்ரி பட்டப்படிப்பில் சேர முடியும். ஆப்ட்டோமெட்ரியில் பட்டப்படிப்பு முடிக்கும் பல மாணவர்கள், சொந்தமாக மருத்துவமனை ஆரம்பிக்கிறார்கள். இதுதவிர மிகப்பெரிய கண் கண்ணாடி நிறுவனங்கள், லென்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், கான்டாக்ட் லென்ஸ் நிறுவனங்களில் சேரலாம். ஆராய்ச்சிப் பணிகளிலும் சேர முடியும். இதுதவிர, கண் அழகுபொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் ஆப்ட்டோமெட்ரி படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
ரேடியோகிராபி: மருத்துவத்தின் துணைப் பிரிவாக ரேடியோகிராபி படிப்பு விளங்குகிறது. உடலின் உட்புறம் உள்ள உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பு, மற்றும் உடலில் உட்புறங்களைப் பற்றி அறிவதற்கான எக்ஸ்ரே, புளூரோஸ்கோபி, அல்ட்ராசவுண்ட்ஸ், சிடி ஸ்கேன், ஆஞ்ஜியோகிராம், பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி உள்ளிட்டவற்றை அறியும் படிப்பு தான் ரேடியோகிராபி.
ரேடியோகிராபி படிப்பைப் பொறுத்தவரை, மெடிக்கல் டெக்னாலஜி இன் ரேடியோகிராபி, ரேடியோ தெரபி, ரேடியோ கிராபி உள்ளிட்ட பிரிவின் கீழ் பி.எஸ்சி. பட்டப் படிப்பைப் படிக்கலாம். இந்தப் படிப்பு 3 ஆண்டுக்காலப் படிப்பு. மெடிக்கல் ரேடியாலஜி, ரேடியோ கிராபி அண்ட் தெரபி டெக்னாலஜி, ரேடியோ ரேப்பிக் டெக்னீசியன் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம். ரேடியோ கிராபி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ஆராய்ச்சிக் கூடங்கள் போன்றவற்றில் ரேடியோ கிராபியில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஸ்பீச்தெரபி: தனிப்பட்ட ஒரு மனிதனுக்குப் பேசுவதில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் படிப்பு ஸ்பீச்தெரபி. 1 வயது முதல் ஒன்றரை வயதுக்குள் குழந்தைகள் மழலைக் குரலில் பேச வேண்டும். அப்படிப் பேச முடியாத குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் காட்டவேண்டும். அதுபோல், குரலில் ஏற்படும் குறைபாடுகள், பேச்சு திடீரென்று நின்று போதல், திக்கு வாய் போன்றவற்றைச் சரி செய்வதில் ஸ்பீச் தெரப்பிஸ்ட்டின் பணி மிகவும் உன்னதமானது. ஸ்பீச் தெரபியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், ஆராய்ச்சிக் கூடங்களில் வேலை கிடைக்கும். பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பேச்சுப் பயிற்சியாளராகலாம். பேச்சு மற்றும் செவி குறை நீக்கும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களில் பணிக்குச் சேரமுடியும்.
மெடிக்கல் லேப் டெக்னாலஜி: மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி என்கிற கிளினிக்கல் லேபரட்டரி சயின்ஸ் மருத்துவத் துறை படிப்புகளில் ஒன்று. ஒரு நோயைக் கண்டறிதல், அதைப் பகுத்து ஆராய்தல், ஒரு நோயைத் தடுக்க மருத்துவத்தில் என்னென்ன சோதனையெல்லாம் மேற்கொள்ள மருத்துவர் சொல்கிறாரோ அந்த அத்தனை பணிகளையும் ஒருங்கே செய்து கொடுப்பது தான் ஒரு மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜிஸ்ட்டின் பணியாகும்.
உடலில் உள்ள நீர், ரத்தத்தின் அளவு, கெமிக்கல் அனாலிஸ், உடலில் செல் எண்ணிக்கையை ஆராய்தல் போன்றவை குறித்து இந்தப் படிப்பில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்தவர்கள் லேப் டெக்னாலஜிஸ்ட் மற்றும் டெக்னீஷியன் பணிகளில் சேரலாம். மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி பட்டப்படிப்பு, மெடிக்கல் லேபரட்டரி டெக்னீஷியன் டிப்ளமோ படிப்புகளைப் படிக்கலாம். இந்தப் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், மருத்துவச்சோதனைக் கூடங்கள் ஆய்வு மையங்கள், மெடிக்கல் லேப் டெக்னாலஜிக்குப் பயன்படும் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை கிடைக்கும்.