நீதிமன்றமே நியாயம் இல்லையா.....?

 நீதிமன்றமே நியாயம் இல்லையா.....?

*ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை கேட்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு*

சென்னை: ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது என தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா பேரிடர் காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கோரும் போது, கட்டண பாக்கி உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இதை எதிர்த்து ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

எந்த ஒரு காரணத்திற்காகவும் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவருக்கு, சான்றிதழ் மறுக்க கூடாது எனவும், சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, வேறு பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் போது மாற்றுச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என உத்தரவிட்டு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர். மாற்று சான்றிதழ் என்பது மாணவர்களின் தனிப்பட்ட ஆவணம் என்பதால் மாற்று சான்றிதழ் வழங்கும்போது ‘கட்டண பாக்கி உள்ளது’ என்றோ ‘கால தாமதமாக கட்டணம் செலுத்தியதாகவோ’ குறிப்பிட்டு மாணவர்களை மனரீதியாக பாதிப்படைய செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

மாற்று சான்றிதழ் என்பது ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாணவர்கள் சேர்வதற்கான ஒரு ஆவணமே தவிர, பெற்றோர்களிடமிருந்து கட்டணம் பாக்கியை வசூலிக்க கூடிய கருவி அல்ல எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 

கல்வி உரிமைச் சட்டப்படி மாற்றுச் சான்றிதழ் கட்டாயமல்ல என்பதால், இதுசம்பந்தமான விதிகளை மூன்று மாதங்களில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி நிர்பந்திக்க கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளி கல்வித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மாற்றுச் சான்றிதழ்களில் கட்டண பாக்கி குறித்து குறிப்பிடக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதனை மீறும் வகையில் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி ஒரு அரசாங்கமே ஒரு பிரச்சனை என்று வந்தால் அதை தீர்த்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடித்தான் செல்வார்கள் தங்கள் குறைகளை அங்கு தான் சொல்வார்கள். அந்த நீதிமன்றத்திடமே நீதி இல்லை என்று சொன்னால் அவர்கள் எங்கே செல்வார்கள்...?

நமது நாட்டில் நீதிமன்றத்திற்குள்ளேயும் நீதிபதிகளுக்குள்ளேயும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது. ஒரு நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை இன்னொரு நீதிமன்றம் தவறு என்று சொல்கிறது. ஒரு நீதிபதி சொன்ன தீர்ப்புக்கு எதிராக இன்னொரு நீதிபதி வேறு விதமாக தீர்ப்பு வழங்குகிறார். அப்படி என்றால் உண்மையான நீதி எங்கு இருக்கிறது என்று தான் கேட்கத் தோன்றுகிறது...?

தீர்ப்புகள் ஆளுக்கு ஏற்றபடி அரசாங்கத்திற்கு ஏற்றபடி மாற்றப்படுகிறதா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது....!

அதுவுமில்லாமல் எதார்த்தம் புரியாமல் ஆளுக்கு ஒரு கருத்து வேறு சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.

எந்தப் பள்ளியும் எந்த ஒரு மாணவனின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்க விரும்பாது. வழிப்பறியாக யாரும் அவர்களிடம் கட்டணத்தை பிடுங்குவது கிடையாது. அவர்கள் கட்ட வேண்டிய நியாயமான கட்டணத்தை தான் கேட்கிறார்கள். அதை முறையாக கட்டி விட்டால் அவர்கள் கொடுப்பதை கொடுத்துவிட்டு போகிறார்கள்.

அதை விடுத்து அரசாங்கம் சொல்கிறது ஆட்சியாளர்கள் சொல்லுகிறார்கள் என்றெல்லாம் அவர்களுக்கு ஏற்றபடி தீர்ப்பு கொடுப்பது நாட்டில் நல்ல குடிமக்களை உருவாக்காது. நாள்தோறும் குழப்பங்களையும், பிரச்சனைகளையும், வன்முறையை தான் உருவாக்கும்.

தற்போது திண்டுக்கல் டி.எல்.வி. பப்ளிக் பள்ளியில் அதுதான் நடந்துள்ளது. நீதிபதிகள் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு நாடு முழுதும் இது போன்ற பிரச்சினைகள் பெருக வேண்டும் என்று தான் இருக்கிறதே தவிர இது ஒரு நல்ல தீர்ப்பாக பார்க்க முடியாது.

தமிழக அரசு இப்போது அனைத்து பள்ளிகளுக்கும் வாய்மொழியாக தான் உத்தரவு போட்டுள்ளது. டிசி கேட்காமல் emis நம்பரை திருடி, தற்போது போன் நம்பரை சேர்த்து அதை வைத்து திருட்டுத்தனமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்கள் வந்தால் போதும் என்று மாணவர் சேர்க்கை செய்து வருகிறார்கள். தற்போது நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்று இது ஒரு உத்தரவாக வெளியிட்டால்.... பேஸ்...! பேஸ்...! ரொம்ப நல்லாவே இருக்கும்....!!!

 அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள் களவாடிதனத்திற்கு வழி காட்டுவதாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

ஏற்கனவே பள்ளி கல்வித்துறையில் வந்த மாட்டை கட்டுவதில்லை... மாட்டை மாணவர்கள் நிலை உள்ளது. இந்த நிலையில் TC இல்லாமல் யார் எங்கிருந்து வந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது அயோக்கியத்தனம்... அத்துமீறல்....  

இதற்கு ஒரு நீதிமன்றமே துணை போவது அநாகரீகத்தின் உச்சக்கட்டம்....


Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்