வங்கதேசத்தில் நடந்தது போல இந்தியாவில் அரசியல் புரட்சி ஏற்படுமா...?!

வங்கதேசத்தில் நடந்தது போல இந்தியாவில் அரசியல் புரட்சி ஏற்படுமா...?!

இந்தியாவை சுற்றி இருக்கும் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து ராணுவ ஆட்சி, ஆட்சி கவிழ்ப்பு என்று அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

மியான்மரின் ராணுவ புரட்சி, பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு, இலங்கையில் மக்கள் புரட்சி என்று அடுத்தடுத்து இந்தியாவை நெருங்கி இருக்கும் நாடுகள் எல்லாம் அரசியல் குழப்பத்திற்கு உள்ளாகி வருகின்றன. தெற்காசியாவில் இருக்கும் நாடுகள் அடுத்தடுத்து மக்கள் புரட்சி, ராணுவ புரட்சியை சந்தித்து வருகின்றன.. அந்த லிஸ்டில் இணைந்து இருக்கும் புதிய நாடு வங்கதேசம்!

வங்கதேசத்தில் நிலையாக ஆட்சி செய்து கொண்டு இருந்த ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்து உள்ளது. புதிய இடஒதுக்கீடு சட்டம் தொடங்கி விலைவாசி, அரசின் அதிகாரங்கள், ஆட்சி முறை என்று பலவற்றை எதிர்த்து அங்கே மக்கள் கடுமையான போராட்டங்களை மேற்கொண்ட நிலையில் ஆட்சி கவிழ்ந்து ராணுவ ஆட்சி தொடங்கி உள்ளது. ஒரே மதம், ஒரே மொழி அதிகம் உள்ள வங்கதேசம் போன்ற சிறிய நாட்டில் கூட இப்படி நடக்கும் போது.. பல மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் இருக்க கூடிய இந்தியாவில் இது போன்ற புரட்சி நடக்க வாய்ப்பே இல்லை. அதுதான் இந்திய அரசியலமைப்பின் அழகே!

இந்தியாவில் அடுத்தடுத்து பல போராட்டங்கள்.. கலவரங்கள் நடந்தாலும் கூட ராணுவ ஆட்சியோ, பெரும் மக்கள் புரட்சியோ சாத்தியமே இல்லை.. 2014ல் இருந்து இந்தியாவில் நடந்த பல போராட்டங்கள், கலவரங்கள்.. அதை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு எதிர்கொண்ட விதமே இதற்கு சான்று.

இந்தியாவை உலுக்கிய போராட்டங்கள்: பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதல் விவசாய சட்டங்கள் வரை, இந்திய மக்களில் பெரும் பகுதியினர் அரசின் முடிவுகளில் அதிருப்தி அடைந்தனர். கடுமையான போராட்டங்களையும் கூட மேற்கொண்டு உள்ளனர். ஆனால் இந்த போராட்டங்கள், கலவரங்களை எல்லாம் இந்திய அரசு திறமையாக கையாண்டு உள்ளது. அரசு கொண்டு வந்த திட்டங்களின் உண்மையான பலன்களை மக்களிடம் விளக்கி போராட்டங்களை வளர விடாமல், எல்லை மீற விடாமல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறப்பாக தடுத்து உள்ளது.

2014-ல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடித்தபோது, கணிசமான மக்கள் ஆதரவைப் பெற்றே ஆட்சிக்கு வந்தது. வாக்காளர்கள் 'பிராண்டு மோடி' மீது நம்பிக்கை வைத்தே வாக்களித்தனர். அப்போது என்று இல்லை.. அதன்பின் பல மாநில தேர்தல்கள், 2014 தேர்தல், அடுத்து நடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் மோடி அடுத்தடுத்து ஹாட் ட்ரிக் வெற்றிபெற அவர் மீது மக்கள் வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையே காரணம்.

இந்த வெற்றியை தொடர்ந்து அரசுக்கு எதிராக அதிர்ச்சி அளிக்கும், நாட்டை உலுக்கும் சில போராட்டங்கள் நடந்தன. மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நீண்ட காலம் நடந்தாலும் எதுவும் மக்கள் இயக்கமாக , அரசை கவிழ்க்கும் இயக்கமாக மாறவில்லை. வங்கதேசத்தில் நடந்தது போல இந்தியாவில் நடக்க முடியாது என்பதற்கு பின்வரும் போராட்டங்கள், அந்த போராட்டங்கள் முடிந்த விதமே.. அதை பிரதமர் மோடி எதிர்கொண்ட விதமே உதாரணம்.

டெல்லி கோச்சிங் சென்டர் இறப்புகளுக்கு எதிரான போராட்டம்: டெல்லி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்திற்குள் வெள்ளம் புகுந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. தரை தளத்தில் படித்துக் கொண்டு இருந்த இரண்டு மாணவிகள் ஒரு மாணவர் என மூன்று பேர் பலியான சம்பவம் தலைநகரை மட்டுமின்றி நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 27ம் தேதி மத்திய டெல்லியில் உள்ள பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் ராவ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் தரை தளத்தில் திடீரென வெள்ள நீர் புகுந்தது. அங்கே பெய்த கனமழைக்கு இடையே உள்ளே வெள்ளம் புகுந்தது. பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் திடீரென தண்ணீர் புகுந்தது. அப்போது அங்கிருந்த மாணவ - மாணவிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். பல மணி நேரமாக மீட்பு பணிகள் நடக்காத நிலையில் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானார்கள். இதற்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் நடந்தன. வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் நடந்த அதே சமயத்தில் டெல்லியில் மாணவர் போராட்டங்கள் நடந்தன. ஆனால் இந்த போராட்டம் பெரிய அளவில் கலவரமாக மாறாமல், எல்லை மீறாமல் கவனமாக கையாளப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. உடனுக்குடன் இதில் கைதுகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது போராட்டம் முடிய காரணமாக அமைந்தது.

அக்னிவீர் போராட்டம்: இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர் .

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2022 இல், இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான ஆட்சேர்ப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய அணுகுமுறை பாரம்பரிய ஆட்சேர்ப்பு முறைக்கு எதிராக இருந்ததாக கூறி போராட்டங்கள் நடந்தன. தொடர்ந்து பல போராட்டங்கள், பீகார் , உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தும் கூட போராட்டம் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டம் பெரிய இயக்கமாக மாறாமல் தடுக்கப்பட்டது.

பணமதிப்பு நீக்கம்: 2016ம் வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது. 2016 இல் பணமதிப்பு நீக்கம் மோடி அரசாங்கத்தின் முதல் முக்கிய முடிவுகளில் ஒன்றாகும். இது 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்தது. இந்த திடீர் நடவடிக்கை தேசத்தையே திகைக்க வைத்தது. இருப்பினும், பிரதமரின் நடவடிக்கைகள் இறுதியில் நாட்டின் நலனுக்காகவே என்று பொதுவாக ஒரு நம்பிக்கை இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். ஆனாலும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்காமல்.. போராட்டங்களில் ஈடுபடாமல் இந்த நிகழ்வு கடந்து செல்லப்பட்டது.

இடஒதுக்கீடு; பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா 2019ல் லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டது. 2019 ஆம் ஆண்டில், மோடி அரசாங்கம் பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்பட்டது. இந்தியாவில் இடஒதுக்கீடு ஒரு முக்கியமான பிரச்சினை என்றாலும், இந்த நடவடிக்கை கலவையான எதிர்வினைகளைப் பெற்றது, ஆனால் தொடர்ந்து ஆதரவைப் பெற்றது. மண்டல் கமிஷன் போன்ற சமயத்தில் நடந்த போராட்டங்கள் அளவில் கூட போராட்டம் நடக்காமல் மத்திய அரசு பார்த்துக்கொண்டது.

370 பிரிவு நீக்கம்; கடந்த 2019ம் வருடம் ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்தது. இதற்கு முன்னதாக இந்திய ராணுவ ஜம்மு காஷ்மீரில் களமிறக்கப்பட்டு அங்கே அமைதி நிலைநாட்டப்பட்டு சிறப்பு உரிமைகள் நீக்கப்பட்டது. உலக நாடுகள் பல இதை எதிர்த்தாலும் கூட இந்தியா வலிமையாக இந்த விவகாரத்தை எதிர்கொண்டு போராட்டம், பாதுகாப்பு பிரச்சனைகள் நடக்காமல் பார்த்துக்கொண்டது.

அயோத்தி வழக்கு: கடந்த 2019ல் அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் உடனே தொடங்கி ராமர் கோவில் அந்த நிலத்தில் கட்டப்பட்டது. இதில் ஒரு கலவரம், மோதல் கூட நடக்காமல் அரசு பார்த்துக்கொண்டது. பிரச்சனை வெடிக்காமல் அதை கட்டுப்படுத்தி அமைதியாக கோவில் கட்டப்பட்டு, அது திறக்கவும் பட்டது.

சிஏஏ சட்டம்; குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) நாடாளுமன்றம் நிறைவேற்றியது. CAA க்கு எதிரான போராட்டங்கள் டெல்லியில் வன்முறையாக மாறி வகுப்புவாத கலவரங்களுக்கு வழிவகுத்தது. அமைதியான போராட்டங்களை அரசாங்கம் அனுமதித்தது, ஆனால் கொரோனா தொற்றுநோய்களின் போது இந்த போராட்டம் ஒடுக்கப்பட்டது. பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தாலும் இறுதியில், அமைதி திரும்பியது.

விவசாயிகள் போராட்டம்: கொரோனா தொற்றுநோய்களின் போது, விவசாயிகள் அமைப்புகள் டெல்லி மற்றும் பிற இடங்களுக்கு அருகில் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதுவே இந்தியாவின் மிக நீண்ட சாலைப் போராட்டமாக அமைந்தது. ஜனவரி 26, 2021 அன்று, டிராக்டர் பேரணி என்ற போர்வையில் செங்கோட்டையில்கடுமையான போராட்டங்கள் நடந்தான். இதில் சில கலவரங்கள் கூட நடந்தன . விவசாயிகள் இயக்கம் மற்றும் CAA எதிர்ப்பு போராட்டங்கள் இரண்டிலும், கடுமையான போராட்டங்கள், கலவரங்கள் நடந்தாலும் கூட அதை அரசு சிறப்பாக கையாண்டது. முக்கியமாக விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.. சிஏஏவை சிறப்பாக கையாண்டது என்று இந்த கலவரங்கள் மக்கள் இயக்கமாக மாறாமல் அரசு பார்த்துக்கொண்டது.

இப்படி 2014ல் இருந்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நீண்ட காலம் நடந்தாலும் எதுவும் மக்கள் இயக்கமாக , அரசை கவிழ்க்கும் இயக்கமாக மாறவில்லை என்பதே பிரதமர் மோடியின் ஆட்சி திறமை.. .!