பாசிசம் என்றால் என்ன? பொருள் தெரியுமா?நடிகர் விஜய் பாசிஸ்ட் என்று யாரை கூறுகிறார்...?

 பாசிசம் என்றால் என்ன? பொருள் தெரியுமா?நடிகர் விஜய் பாசிஸ்ட் என்று யாரை கூறுகிறார்...?

கட்சி பேதமின்றி எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களை 'பாசிஸ்ட்' என ஆவேசமாக விமர்சிக்கும் தலைவர்களின் பேச்சுகளை நாம் நிறைய பார்த்திருப்போம். பாசிசம் என்றால் என்ன? பாசிஸ்ட் என்பதன் அர்த்தம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் பல்வேறு அரசியல் கருத்துகள் தோன்றின. அப்படி, தோன்றிய தீவிர அரசியல் சித்தாந்தங்களுள் ஒன்றுதான் பாசிசம். இத்தாலியில் முசோலினி தொடங்கிய பாசிச கட்சி, பாசிச சித்தாந்தத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. பாசிசம் என்பது, ஒரு சமூகத்தின் அதிகார வர்க்கத்தால், சர்வாதிகார முறையில், நாட்டின் அனைத்து விஷயங்களும் தீர்மானிக்கப்படுவதைக் குறிக்கும்.

அரசு நினைப்பதே சட்டம், அரசை மதிக்காமல் எதிர்த்துக் கேட்பவர்கள் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவார்கள். பாசிசம் என்பதை, ஒரு கேள்வி கேட்க முடியாத மிகவும் வலிமை வாய்ந்த அரசு அதிகாரம் எனச் சொல்லலாம். அந்த பாசிச சர்வாதிகாரத்திற்கு முன், மக்களின் ஜனநாயகத்திற்கு, உரிமைகளுக்கு இடமில்லை.

பாசிசம் என்பது அதிகாரமிக்க தலைவனையும், தலைவன் சொல்வதை அச்சு பிசகாமல் பின்பற்றும் மக்கள் கூட்டத்தையும் கொண்ட அரசு முறை. அரசின் கொள்கை நிலைநிறுத்தப்படுவதற்காக, மக்கள் மீது எத்தகைய அடக்குமுறையையும் பிரயோகிக்கலாம் என்ற கொடுமையான தத்துவம் பாசிசம். பாசிச ஆட்சியில், எதிர்க் கருத்துகளுக்கு இடம் இல்லை, எதிர்க் கட்சிகளுக்கும், விமர்சனங்களுக்கும் இடமில்லை.

மக்களுக்காக அரசு அமைக்கப்படவில்லை, அரசைக் காக்கவே மக்கள் இருக்கிறார்கள் என்பதே பாசிசத்தின் கூறு. பாசிச அரசில், நாட்டின் அனைத்துமே அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும். அரசுக்கு எதிராகச் செயல்படும் எதிரிகள் ஒழிக்கப்படுவார்கள். தனி மனிதன் அரசிற்கு அடிபணிய வேண்டும். இனத் தூய்மைக்காக, யூதர்களை படுகொலை செய்ய வலியுறுத்தியது பாசிசம்.

மக்களாட்சி செயல்படும் நாட்டில் பாசிசத்திற்கு இடமில்லை. ஆனால், இந்தியா எனும் மிகப்பெரிய மக்களாட்சி நாட்டிலும், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை பாசிஸ்ட்டுகள் என்று அழைக்கும் போக்கு உள்ளது. அதற்குக் காரணம், குறிப்பிட்ட அந்தத் தலைவர்களின் அல்லது கட்சியின் சர்வாதிகாரப் போக்கு, பாசிச கொள்கைகளோடு ஒத்துப்போவதாக, எதிர்க் கட்சிகள் கருதுவதே.

குறிப்பாக, அரசின் ஏதாவது ஒரு நடவடிக்கைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி அடைந்து போராடத் துவங்கும்போது, அரசு அதிகாரம், அவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்து போராட்டம் நடத்துவதைத் தடுக்கிறது, எதிர்க் குரலை ஒடுக்குகிறது. ஜனநாயகத் தன்மையை கைவிட்டு, சர்வாதிகார முகத்தைக் காட்டுகிறது. அதுபோன்ற தருணங்களில், அரசின் பாசிச மனப்பான்மை வெளிப்படுகிறது.

கடந்த நூற்றாண்டில் இத்தாலி, ஜெர்மனியில் நிலவியதைப் போன்ற பாசிச அரசாட்சி இங்கு நிலவ முடியாது என்றாலும், நாட்டின் ஜனநாயகத் தன்மைகள் நசுக்கப்படும்போது, அந்த அரசுகள் பாசிசத்தையே நோக்கி நகர்வதாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. தொடர்ச்சியான பிரச்சனைகளால் மக்களிடையே விரக்தி உணர்வு மேலோங்கும்போது, அதை பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அரசுக்கு எதிராக ஸ்ட்ரைக், போராட்டங்கள் போன்றவை நடத்தப்படுவது, நாட்டின் தேசியத்தை, அரசின் இறையாண்மையை பலவீனப்படுத்துவதாக பாசிசம் கூறுகிறது. இதைச் சுட்டிக்காட்டி, போராட்டங்கள் ஒடுக்கப்படும். அரசுக்கு கீழ்ப்படிதல் மட்டுமே மனிதனின் கடமை என்ற கருத்து நிலைநிறுத்தப்படும். அதுவே நாட்டுக்கு நல்லது என்ற பிரச்சாரம் பரப்பப்படும்.

பாசிசத்தின் முக்கிய அம்சங்கள்:

சர்வாதிகாரம்: ஒரு வலிமையான தலைவர் அல்லது கட்சி முழு அதிகாரத்தையும் கொண்டிருக்கும். அரசின் கட்டளைகளை நிறைவேற்றுவதே பிரஜைகளின் கடமை என்பதை வலியுறுத்தும்,

தேசியவாதம்: தேச பெருமிதத்தை வலியுறுத்தி, பிற நாடுகளை விட தங்கள் தேசமே உயர்ந்தது என்று கூறும். பிற நாடுகளை அடக்கி ஆளும் எண்ணத்தை விதைக்கும்.

ராணுவ பலம்: போர் மற்றும் வன்முறையை, தேசிய இலக்குகளை அடைய பயன்படுத்தும். பாசிச அரசுக்கு எதிரான மனப்பான்மை ராணுவம் மூலம் ஒடுக்கப்படும்.

அடக்குமுறை: அரசை விமர்சிப்பவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாவார்கள். அரசுக்கு எதிராக எழும் கருத்துகளை ஒடுக்கி, எதிர்ப்பாளர்களை தண்டிக்கும்.

பொருளாதார கட்டுப்பாடு: அரசு பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும். அரசு, நாட்டின் அனைத்து சொத்துகளையும் கொண்டிருக்கும். போராட்டங்கள் நாட்டுக்கு எதிரானவை என்ற கருத்தை நிலைநிறுத்தும்.

சமூக ஒற்றுமை: நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும். உதாரணமாக, ஒரே நம்பிக்கை கொண்டவர்களாக, ஒரே மொழி பேசுபவர்களாக, இன தூய்மைவாதத்தை வலியுறுத்தும். சிறுபான்மையினரை வெறுக்கும்.

பாசிச கட்சி: பாசிஸ்ட் என தலைவர்களை எதிர் தரப்பினர் மாறி மாறி விமர்சிப்பது வழக்கமாக இருக்கிறது. அப்படி எனில் யார் தான் பாசிஸ்ட்? எந்தவொரு தேசியவாத அரசியல் இயக்கம் சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறதோ, போராட்டங்களை வெறுக்கிறதோ, அடக்குமுறையை செயல்படுத்துகிறதோ, மக்களின் பேச்சுரிமையை நசுக்குகிறதோ, எதிர்க்குரல்களை ஒடுக்குகிறதோ இனவெறி கொண்டதாக இருக்கிறதோ அதனை பாசிச இயக்கம் எனலாம்.

நடிகர் விஜய் பாசிஸ்ட் என்று யாரை கூறுகிறார்...? நீங்களே தீர்மானியுங்கள்.....