தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விடுத்த "ஓப்பன் சேலஞ்ச்" போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் எனக்கு அழைப்பு விடுக்க வேண்டும் -
*தளி தொகுதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விடுத்த "ஓப்பன் சேலஞ்ச்" போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் எனக்கு அழைப்பு விடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்.*
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக எண்ணும் எழுத்தும், திறன்மிகு வகுப்பறைகள்’ போன்ற திட்டங்கள் மாணவர்களின் வாசிப்புத் திறனையும், கற்றல் திறனையும் மேம்படுத்தி வருகின்றது.
அதன்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர் ஆய்வுகள் மூலம் கண்காணித்து வருவதுடன் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.
இதுவரையில் 228 தொகுதிகளுக்கு நேரடியாக சென்று பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் 229 வது தொகுதியாக தளி தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் தளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆனேகொள்ளு ஊராட்சிக்குட்பட்ட டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றை(Facebook) தொடங்கி மாண்புமிகு அமைச்சர் அவர்களை தங்கள் பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தலைமை ஆசிரியர் திருமதி.க.வளர்மதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘எங்கள் பள்ளியில் 33 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். அனைவரும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ என அழைப்பு விடுத்துள்ளார்.
தலைமை ஆசிரியர் திருமதி.க.வளர்மதி அவர்களின் இந்தப் பதிவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் ‘அழைப்பிற்கு நன்றி. விரைவில் வருகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
அதன்படி இன்று அந்தப் பள்ளியில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டதுடன் அமைச்சர் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடி பல்வேறு அனுபவங்களையும் நேரடியாகவே கேட்டு அறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
தமிழக முழுவதும் மேற்கொண்டு வரும் இது போன்ற ஆய்வுகளில் தளி தொகுதி எனது கவனத்தை மிகவும் ஈர்த்ததுடன், என்னால் மறக்க முடியாத ஒரு தொகுதியாக உள்ளது.
ஏனென்றால், இந்த டீ புதூர் தொடக்கப் பள்ளியின் உடைய தலைமை ஆசிரியை திருமதி வளர்மதி, சமூக வலைதளத்தில் எனக்கு மிகப்பெரிய அழைப்பை விடுத்திருந்தார். அதில் தமிழக முழுவதும் நீங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்துகிறீர்கள். எங்கள் ஊருக்கு நீங்கள் வாருங்கள் வந்து எங்கள் பள்ளி குழந்தைகளை நாங்கள் எப்படி பயிற்றுக்கிறோம் என்பது குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளுங்கள் என அழைப்பு விடுத்தார்.
கிட்டத்தட்ட இது ஒரு ஓப்பன் சேலஞ்ச் எனப்படும் வெளிப்படையான சவாலாகவே நான் கருதுகிறேன். ஒரு தலைமை ஆசிரியை ஒரு அமைச்சருக்கு விடுத்த வெளிப்படையான சவாலாகவே இதை நான் பார்க்கிறேன். நீங்கள் வந்து எங்கள் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளுங்கள் என அதிரடியாக அழைப்பு விடுத்ததற்கு, நன்றி எனக்கூறியதுடன் நானும் நிச்சயம் வருகிறேன் எனக் கூறியதுடன் இன்று இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டு பார்த்த பொழுது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் பெருமையாகவும் இருக்கிறது.
எப்படி இந்தப் பள்ளி தலைமை ஆசிரியை எனக்கு அழைப்பு விடுத்துள்ளாரோ, அதேபோல ஓப்பன் சேலஞ்ச் எனப்படும் வெளிப்படையான சவாலை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலைகளில் உள்ள பள்ளிகளும் அழைப்பு விடுக்க வேண்டும்,
என ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை வைப்பதாக தெரிவித்த அமைச்சர்,
பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு சால்வை அணிவித்து பாராட்டுக்களும் தெரிவித்தார்.
பேட்டி : அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்